தனிஷ்க் நகை கடையில் திருடியது ஏன்? நிஷாந்த் சொன்ன தகவல் – காவல் ஆணையர் ராஜேந்திரன் பேட்டி!

By Kavi

|

Published on 17 Nov 2026, 6:11 PM

மதுரை தனிஷ்க் கடையில் திருடு போன அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளன என்று மதுரை காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மதுரை காளவாசல் பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட டாடா குழுமத்திற்கு சொந்தமான தனிஷ்க் நகை கடையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. 

ADVERTISEMENT

இது தொடர்பாக தனிஷ்க் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட  நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ் தோழி மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

இந்த நிலையில் மதுரை தனிஷ்க் நகை கடையில் திருடப்பட்ட அனைத்து நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன என்று மதுரை மாநகர காவல் ஆணைய ராஜேந்திரன் கூறியுள்ளார். 

இதுகுறித்து மதுரையில் இன்று (நவம்பர் 17) செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “எஸ்எஸ் காலனி காவல் நிலையத்துக்கு எல்லைக்குட்பட்ட தனிஷ்க் நகை கடையில் 11.384 கிலோ கிராம் தங்க வைர நகைகள் திருடு போயிருந்தது. 

ADVERTISEMENT

இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறை துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து மேற்கொண்ட புலன் விசாரணையில் நிஷாந்த், அவருடைய தந்தை சுரேஷ், நிஷாந்தின் தோழி மீனாட்சி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களவாடப்பட்ட மொத்த நகைகளும் மீட்கப்பட்டுள்ளன” என்று கூறினார். 

தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இந்த  கொள்ளை சம்பவத்தில் இவர்கள் 3 பேருக்கு மட்டும் தான் தொடர்பு இருக்கிறதா? எப்படி உள்ளே சென்று திருடினார்கள்? 

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் துரிதகதியில் கடையை திறந்திருப்பார்கள் என்று தெரிகிறது. அங்கு கட்டுமான பணிகளும் நடந்து கொண்டிருந்தன. இதை பயன்படுத்திக் கொண்ட குற்றவாளி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். 

இந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வளவு தொலைந்தது? எவ்வளவு கிடைத்தது? 

11.384 கிலோகிராம் தங்க வைர நகைகள் திருடு போனது எல்லாமே மீட்கப்பட்டது.

திருடப்பட்டதற்கான காரணம் என்ன? 

விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கடன் தொல்லை காரணமாக திருடியதாக கூறுகிறார். 

யாருக்கு கடன் தொல்லை? 

நிஷாந்த்திற்கு. 

இவருக்கு உதவியவர்கள் கைது செய்யப்படுவார்களா? 

ஆமாம். இப்போது இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். நீதிமன்ற காவலில் இருந்து போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யப்படும். அப்போது இவர்களுக்கு யாரேனும் உதவி செய்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தால் அவர்களும் கைது செய்யப்படுவார்கள். 

நிஷாந்த் மீது வேறு எந்த வழக்கும் இல்லை.. ஒரு தனிநபராக இவ்வளவு பெரிய சம்பவத்தை அவரால் எப்படி செய்ய முடிந்தது? 

முதல் கட்ட விசாரணை தான் நடந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதுவரை நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து இனி யாரேனும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? 

வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது. 

இந்த வழக்கு எவ்வளவு சவாலாக இருந்தது? 

எந்த ஒரு வழக்காக இருந்தாலும் அது சவாலானது தான். இந்த வழக்கை பொறுத்தவரை, களவு போன பொருட்களின் மதிப்பு அதிகம். இதனால் பத்திரிகைகள் எல்லாம் தொடர்ந்து கவனித்து வந்தீர்கள். பெரிய சவால்தான். 

இதில் இன்ஸ்டா இன்புளுயன்சர் சிக்கியது எப்படி? 

இவர்கள் தெரிந்துதான் கொள்ளை சம்பவத்தை நடத்தி இருக்கிறார்கள். நிஷாந்த் செய்தது தெரிந்தும் அவர் (மீனாட்சி) காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் தான் இருந்திருக்கிறார். களவு போன பொருட்கள் எங்கு இருந்தது என்று அவருக்கு ஓரளவுக்கு தெரிந்திருக்கிறது. தொலைபேசி உரையாடல்களை வைத்து இதை கண்டுபிடித்தோம். 

முதல் தகவல் அறிக்கையில் கூடுதலாக நகைகள் கொள்ளை போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே?

முதல் தகவல் அறிக்கையில் தோராயமாக 15 முதல் 18 கிலோ இருக்கும் என்று போடப்பட்டது. ஏனென்றால் கணக்கெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதால் அப்படி குறிப்பிடப்பட்டது. 

மீனாட்சி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்ஸ் அதிகரித்திருக்கிறார்கள். அவரது கணக்கை முடக்குவீர்களா? 

தேவை என்றால் செய்வோம். 

நிஷாந்த் நகைகளை திருடிக்கொண்டு அந்த இரவில் பல்வேறு இடங்களில் சுற்றி இருக்கிறார். அப்போது காவல்துறை ரோந்து பணியில் ஈடுபடவில்லையா?

ஒரே ஒருவர் மட்டும் செல்கிறார். எல்லா இடத்திலும் போலீஸ் இருக்க முடியாது. ஒருவேளை அந்த போலீசை பார்த்துவிட்டு நிஷாந்த் யு-டர்ன் எடுத்துக் கொண்டு கூட போய் இருக்கலாம். 

இதில் நிஷாந்த் அப்பாவுடைய ரோல் என்ன? 

அவருக்கும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்திருக்கிறது. அந்தப் பையை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று வைத்திருக்கிறார். 

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? 

15 கோடி ரூபாய் வரை இருக்கும். 

யூடியூபை பார்த்து கொள்ளையடித்தார்களா? 

இது பற்றி எல்லாம் இனி தான் விசாரிக்க வேண்டும். அவர்களுடைய மொபைலை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. 

குற்றவாளியை அவரது கையில் இருக்கும் டாட்டுவை வைத்து அடையாளம் கண்டு கொண்டீர்களா?

குற்றம் செய்தவரை கண்டுபிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது. நிஷாந்த் மீது விபத்து வழக்கு ஒன்று உள்ளது. 

இவ்வாறு பதிலளித்தார் காவல் ஆணையர் ராஜேந்திரன்.

எஃப் ஐ ஆர் சொல்வது என்ன? 

தனிஷ்க் நகை கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறை பதிவு செய்த எஃப் ஐ ஆர்- ல், “11.11.2026 இரவு 9.30 மணி முதல் 12.11.2026 காலை 9.45 மணிக்குள் இந்த சம்பவம் நடந்திருக்கலாம். நவம்பர் 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. பாலசுப்ரமணியன் தகவல் தந்தார். 15 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வைர நகைகள் காணாமல் போயிருப்பதாக புகார் தெரிவித்தார். 

இந்த புகாரை ஏற்று காவல் நிலைய குற்ற எண் 562/2026 U/s.331(4), 305(a), BNS படி, முனீஸ்வரி வழக்கு பதிவு செய்தார். 

12ஆம் தேதி காலை 9:45 மணிக்கு அந்த ஷோரூமை, ஸ்டாக் இன்சார்ஜ் ஏ.ஜி.கார்த்திகா கதவை திறந்து உள்ளே பார்த்தபோது முதல் தளத்தில் உள்ள தங்க வளையல்கள் அடக்கப்பட்ட பெட்டிகள் சிதறி கிடந்தன. 

அதைப் பார்த்தவுடன் உடனே வருமாறு கிளை மேலாளர் ராகுலுக்கும், எனக்கும் (பாலசுப்பிரமணியன்)  போன் மூலம் தகவல் தெரியப்படுத்தினார். 

இதையடுத்து அங்கு சென்று எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கீர்த்திகா, நர்மதா, யமுனா, ராகுல் மற்றும் டைட்டன் ஏரியா பிசினஸ் மேனேஜர் அஞ்சன் சோஸ்வா ஆகியோருடன் நகைகள் மேலோட்டமாக சரிபார்க்கப்பட்டது. 

அப்போது இரவு கடை மூடும்பொழுது ஸ்டாக் லிஸ்டில் 3324 என்ற எண்ணிக்கை இருந்தது. அதன் மொத்த எடை 40.957 கிலோ கிராம் ஆகும். 

அதில் தோராயமாக 15 கிலோ முதல் 18 கிலோ வரையிலான நகைகள் திருடு போயிருப்பதாக தெரிகிறது. 

நகைகளை துல்லியமாக எடை சரிபார்த்த பின்பு இந்த திருடு போன நகையின் எடை கூடவோ குறையவோ செய்யலாம். 

கடையை சுற்றிப் பார்த்தபோது கடையின் பிரதான கதவுகளின் பூட்டுகள் எதுவும் உடைக்கப்படாமல் இருந்தன. இதனால் சந்தேகத்தின் பேரில் மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது லிப்ட் இயங்குவதற்காக கட்டப்பட்டிருந்த கட்டிடத்தின் வென்டிலேட்டர் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

எனவே கடையில் புகுந்து திருடிய நபரை கண்டுபிடித்து திருடு போன மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel