தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் வெளியானவுடன், அதில் டாப் லிஸ்டில் யார் பெயர்கள் இருக்கப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அந்த லிஸ்டில் நம்பர் 1 இடத்தில் வந்திருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் Future Gaming and Hotel Services நிறுவனம். மார்ட்டினின் நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக 1368 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. யார் இந்த மார்ட்டின்? எதற்காக இவ்வளவு தேர்தல் பத்திரங்களை வாங்கினார்? அதிரவைக்கும் பின்னணிகளை இங்கு பார்ப்போம்.
லாட்டரியில் அப்படி என்ன சம்பாதித்துவிட முடியும்?
தமிழர்கள் பர்மாவிலிருந்து இடம்பெயர்ந்த போது, அங்கிருந்து வந்து தமிழ்நாட்டில் குடியேறியது லாட்டரி மார்ட்டின் என்று அழைக்கப்படும் சாந்தியாகு மார்ட்டினின் குடும்பம். 1988 இல் கோவையில் லாட்டரி தொழிலை தொடங்கிய போது அவர் ஒரு சாதாரண வியாபாரி அவ்வளவுதான். லாட்டரி தொழிலில் லாபம் பார்க்க ஆரம்பித்த மார்ட்டின் அதனை கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தத் தொடங்கினார். சாதாரண லாட்டரி டிக்கெட் விற்பனைதானே அதில் அப்படி என்ன சம்பாதித்து விட முடியும் என நினைப்பவர்களுக்கு மார்ட்டினின் வாழ்க்கை பல ஆச்சரியங்களைக் கொடுக்கிறது.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி
2003 ஆம் ஆண்டு அதிமுக அரசினால் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டது. அதன்பிறகு மார்ட்டினின் லாட்டரி ஏஜென்சிஸ் நிறுவனம் தனது தொழிலை வடகிழக்கு மாநிலங்களை நோக்கி நகர்த்தியது. அங்கு மாநில அரசாங்கங்களுடன் மார்ட்டின் நெருக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டார். அதன் விளைவாக அரசாங்கத்தின் லாட்டரி ஸ்கீம்களையும் சேர்த்து மார்ட்டின் நடத்த ஆரம்பித்தார். சிக்கிம் அரசின் பரிசுச் சீட்டு திட்டம் மார்ட்டினுக்கு பெருமளவில் கைகொடுத்தது. சிக்கிம் லாட்டரி இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, மேகாலயா, அருணாச்சலப் பிரதேச மாநிலங்களிலும் மார்ட்டினின் லாட்டரி கரங்கள் படர்ந்தன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1990களிலிருந்தே எந்த கட்சி ஆளுங்கட்சியாக வந்தாலும் அவர்களுடன் ஒருவித நெருக்கத்தை பேணிவந்தார் மார்ட்டின். தமிழ்நாட்டில் 2003 இல் லாட்டரி தொழில் தடை செய்யப்பட்டாலும் மற்ற மாநிலங்களில் தினம்தினம் கோடிகளை குவித்துக் கொண்டிருந்தது மார்ட்டினின் லாட்டரி தொழில்.
சி.பி.ஐ பதிவு செய்த வழக்கு
பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாக மாறிய மார்ட்டின் ஒரு கட்டத்தில் மத்திய புலனாய்வு அமைப்புகளின் ரேடாருக்குக் கீழ் வந்தார். 2011 ஆம் ஆண்டு சிக்கிம் லாட்டரியை கேரளாவில் விற்கும்போது பல முறைகேடுகளை செய்து ஏராளமான கோடிகள் லாபம் பார்த்ததாக லாட்டரி மார்ட்டின் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது சி.பி.ஐ 30 வழக்குகளை பதிவு செய்தது. 2005 இல் இருந்து சிக்கிம் அரசின் பரிசுச் சீட்டுகளை மார்ட்டின் லாட்டரி ஏஜென்சிஸ் நிறுவனம் கேரளாவில் விற்றதில் 4500 கோடி ரூபாய் வரை சிக்கிம் அரசை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதாவது 4752 கோடிக்கு பரிசுச் சீட்டுகளை விற்று, வெறும் 143 கோடி ரூபாயை மட்டுமே சிக்கிம் அரசுக்கு தந்ததாக சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாதாடிய வழக்கறிஞர்களின் அரசியல் பின்புலம்
இந்த வழக்குகளில் மார்ட்டினுக்காக வாதாடியவர்களின் அரசியல் பின்புலமும் பெருமளவில் கவனிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி மார்ட்டினுக்காக வாதாடினார். கேரளாவின் இடதுசாரி கட்சியிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் வந்தபிறகு ஒரு கட்டத்தில் அபிஷேக் மனு சிங்வி இந்த வழக்கிலிருந்து விலகிக் கொண்டார்.
அதேபோல் தமிழ்நாட்டின் அரசு வழக்கறிஞராக இருந்த பி.எஸ்.ராமன் மார்ட்டினுக்காக கேரள உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். கேரள அரசிடமிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், பின்னர் அவரும் அந்த வழக்கில் இருந்து விலகச் செய்யப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மார்ட்டின்
மார்ட்டினுக்கு ஏற்பட்ட சிக்கல் கேரளாவோடு நிற்கவில்லை. 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு திமுகவைச் சேர்ந்த பலர் நில அபகரிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். அப்போது மார்ட்டினும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது 8 மாத காலத்திற்கு சிறை வைக்கப்பட்டார் மார்ட்டின். மார்ட்டின் சிறையில் இருந்தபோது அவரது மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் லாட்டரி நிறுவனத்தை நடத்தினார்.
உள்ளே நுழைந்த அமலாக்கத்துறை
சிக்கிம் அரசை ஏமாற்றியதாக சி.பி.ஐ பதிந்த வழக்கினை ஒரு கட்டத்தில் அமலாக்கத்துறை கையில் எடுத்தது. 2009 மற்றும் 2010 க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் கேரளாவில் சிக்கிம் லாட்டரியை முறைகேடாக விற்பனை செய்து 910 கோடி ரூபாய் சிக்கிம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி மார்ட்டினின் நிறுவனம் லாபம் பார்த்ததாக அந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிவு செய்தது.
ஒரு பக்கம் மார்ட்டினின் நிறுவனங்கள் ஒரு சாம்ராஜ்யத்தைப் போல வளர்ந்து கொண்டே இருந்தன. பல்லாயிரக்கணக்கான கோடிகள் மார்ட்டினிடம் குவிந்து கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் புலனாய்வு அமைப்புகளின் விசாரணையும் தொடர்ந்து கொண்டே இருந்தது. டிசம்பர் 2021 இல் பண முறைகேடு சட்டத்தின் கீழ் 19.5 கோடி ரூபாய் மதிப்புள்ள மார்ட்டினின் சொத்துகளை கையகப்படுத்தியது அமலாக்கத்துறை. மேலும் 2023 மே மாதத்தில் மார்ட்டினுக்கு சொந்தமான 457 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது.
2023 ஆகஸ்ட் மாதத்தில் பஞ்சாப் மாநிலத்தில் 900 கோடி ரூபாய்க்கு லாட்டரி ஊழல் நடந்திருப்பதாக மார்ட்டினின் நிறுவனத்தின் மீது பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கும் பதியப்பட்டுள்ளது.
ரெய்டுக்குப் பின் பாஜகவுக்கு 100 கோடி
இந்தியாவில் முக்கியமான பல நிறுவனங்கள் தங்கள் மீது ரெய்டு நடத்தப்பட்டதற்குப் பிறகு பாஜகவிற்கு பல கோடி ரூபாய் நிதியை அள்ளிக் கொடுத்ததை நியூஸ் லாண்ட்ரி மற்றும் தி நியூஸ் மினிட் நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வு வெளிக்கொண்டு வந்திருந்தது. அதில் மார்ட்டினின் நிறுவனமும் தப்பவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. அதற்கு அடுத்த ஆண்டே Electoral trust மூலமாக பாஜகவிற்கு 100 கோடி ரூபாய் பணத்தினை Future Gaming நிறுவனம் அளித்தது. 100 கோடி ரூபாய் என்பது வெளிப்படையாக அளிக்கப்பட்டிருந்தது. திமுகவிற்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கமானவர் மார்ட்டின் என்று ஊடகங்கள் சொல்லிவந்த நிலையில் பாஜகவிற்கு 100 கோடி அளித்தது அனைவரிடமும் பல கேள்விகளை எழுப்பியிருந்தது. அதுவே பெரிய நன்கொடையாக பார்க்கப்பட்டது.
யாருக்கு கொடுக்கப்பட்டது 1368 கோடி?
ஆனால் மறைமுகமாக 1368 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை வழங்கியிருப்பது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது. 1368 கோடி ரூபாயில் எவ்வளவு பணம் எந்தெந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்டது என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது. ஆனால் மொத்த தேர்தல் பத்திரங்களில் பாதிக்கும் மேல் பாஜகவே பெற்றிருப்பதால், மார்ட்டின் நிறுவனம் அளித்த பணத்திலும் பெரும் விகிதம் பாஜகவிற்கே சென்றிருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
மேலும் பத்திரிக்கையாளர் ரோகிணி சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பதிவு செய்திருக்கிறார். ஏப்ரல் 2, 2023 அன்று மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அகில இந்திய லாட்டரி தொழிற்கூட்டமைப்பின் சார்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து லாட்டரி தொழிலுக்கான தேவைகள் குறித்து பேசினார். இரண்டு நாட்கள் கழித்து ஏப்ரல் 5, 2023 அன்று Future Gaming நிறுவனம் பெருமளவு பணத்தினை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்துள்ளது.
கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக தேர்தல் பத்திரங்களின் விவரங்கள் வெளியானது மறைந்து கொண்டிருந்த பல ரகசியங்களை மேலே கொண்டு வந்திருக்கிறது. மத்தியப் புலனாய்வு நிறுவனங்களின் ரெய்டுகளிலிருந்து விடுபட தேர்தல் பத்திரங்களை வாங்கினாரா அல்லது மத்திய அரசிடம் வேறு ஏதும் பிரதிபலன்களை எதிர்பார்த்து தேர்தல் பத்திரங்களை வாங்கினாரா என்று பல கேள்விகள் அடுக்கடுக்காக எழுந்துள்ளன. இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் விவாதப் பொருளாக மாறியிருக்கிறார் சாந்தியாகு மார்ட்டின்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் பத்திரம் வழக்கு: எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
தேர்தல் பத்திர நிதி : ரூ.6,060 கோடி வாங்கிய பாஜக – திமுக, அதிமுக வாங்கியது எவ்வளவு?
இந்தியாவிலேயே தேர்தல் பத்திரங்களை அதிகமாக வாங்கிய நிறுவனங்கள் எவை தெரியுமா?