இந்தியத் திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் இயங்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு, INDIAN FILM MARKET என்ற தளம் உருவாகி இருக்கிறது.
திரைப்படத் துறைக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த ஒரு சூழலை உருவாக்க INDIAN FILM MARKET உருவாகியுள்ளது என்கிறார்கள்.
‘இதை நிறுவி இருக்கும் கண்ணன் தயாரிப்பு, விநியோகம், திரையரங்க மேலாண்மை, மேலும் முன்னணி மீடியா நிறுவனங்களில் 28 ஆண்டுகால தலைமைப் பொறுப்புகளில் அனுபவம் பெற்றவர். இந்திய திரைப்படத் துறையின் சவால்களையும், அதில் உள்ள வாய்ப்புகளையும் ஆழமாகப் புரிந்தவர். திரைப்படங்களை முழுமையாக லாபமளிக்கும் ஒரு தொழில்முறை வணிக மாடலாக மாற்ற வேண்டும்” என்ற நோக்கத்தில் இதை உருவாக்கி இருக்கிறார்” என்கிறார்கள்.
“சினிமாவில் கண்டெண்ட் தான் ராஜா. அந்த கண்டெண்டை உயர்த்த, சரியான நடிகர்கள் மற்றும் சரியான தொழில்நுட்பக் குழுவை தேர்வு செய்வதும் மிகவும் முக்கியம். எங்கள் தளத்தின் மூலம், தயாரிப்பாளர்களுக்கு வலுவான, சந்தைத் தரமான கதைகளையும், தயாரிப்புக்கான தொழில்நுட்ப குழுவையும் வழங்கி, ஒவ்வொரு திரைப்படமும் 100% லாபகரமானதாக அமைய எங்கள் குழு செயல்படும். புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவதே எங்கள் முக்கிய குறிக்கோள்” என்று சொல்லும் கண்ணன் தொடர்ந்து,
- கதை தேர்வு & திரைப்பட படைப்புக்கான ஆலோசனை
- பட்ஜெட்டிங் & திட்டமிடல்
- தயாரிப்பில் A–Z வரை படைப்பை நிறைவேற்றுவதற்கான உதவிகள்
- மார்க்கெட்டிங் திட்டம் & புரமோசன் மேற்பார்வை திட்டங்கள்.
- ரைட்டர்ஸ் ரூம் மூலம் புதிய படைப்பாளிகளுக்கான உதவிகள்.
- தியேட்டர், ஆடியோ, OTT, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து உரிமைகள் விற்பனை
இவையே எங்கள் முக்கியப் பணிகள்.
20க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளில் உள்ள குழுக்களுடன் நாங்கள் இணைந்துள்ளோம். இதன் மூலம் உலகம் முழுவதும் மிக உயர்ந்த தரத்திலான படப்பிடிப்புத் தளங்களும், அரசாங்க மானியங்களும் படைப்பாளிகளுக்கு பெற்றுத் தருவோம். மேலும், இந்திய படங்களை உலக சந்தைகளில் அறிமுகப்படுத்த சர்வதேச திரைப்பட விழாக்களையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதேபோல், வெளிநாட்டு படங்களின் உரிமைகளைக் கொண்டு வந்து இந்தியாவில் விநியோகிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், வளர்ந்து வரும் புதிய திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் INDIAN FILM MARKET விருதுகள் வழங்கப்படும். இதன் மூலம் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்து துறைகளிலும் புதியவர்களுக்கு மிகப்பெரிய மேடை அமையும்.” என்கிறார்.
வெளிநாட்டு படங்களின் உரிமைகளைக் கொண்டு வந்து இந்தியாவில் விநியோகிப்பதை அதிகப் படுத்தினால், அப்புறம் இந்தியப் படங்கள் என்ன ஆகும்?
விஷயம் என்னவென்றால் கண்ணன் சொல்லும் எதுவுமே தமிழ் சினிமாவுக்கு புது விஷயம் அல்ல. நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எப்படி நடக்கிறது என்பதுதான் முக்கியம்.
ஒரு தயாரிப்பாளர் கதை, திரைக்கதை அறிவுடன் இருந்தால் இதெல்லாம் தேவை இல்லை. ஒரு நல்ல இயக்குனர் பொருத்தமான படைப்பாளிகளை பயன்படுத்திக் கொண்டாலோ, ஒரு பெரிய நடிகர் திறமையின் அடிப்படையில் மற்றவர்களுக்கு வாய்ப்புத் தரவேண்டும் என்ற முடிவுக்கு வந்தாலோ, தமிழ் பிலிம் மார்க்கெட்.. இந்தியன் ஃபிலிம் மார்க்கெட் எல்லாம் தானாக வளரும் . உயரும்.
அதை விட்டுவிட்டு இப்படியெல்லாம் சொல்பவர்களை தயாரிப்பாளர்களோ இயக்குநர்களோ நடிகர்களோ நம்பினால், லாபத்தை விட அதிகமாக ‘சர்வீஸ் சார்ஜ்’ தர வேண்டி வரும்.
சலூன் கடை வைப்பவருக்கு சவரம் பண்ணவாவது தெரிய வேண்டும். அல்லது யார் நன்றாக முடி வெட்டும் வேலையை செய்வார் என்றாவது தெரிய வேண்டும். அதை விட்டு விட்டு, ”நீங்க காசு போட்டு சலூன் கடை வைங்க, ‘மத்ததை எல்லாம்’ நான் பாத்துக்கறேன்” என்று சொல்பவரை நம்பிக் கடை வைப்பது தப்பு.
பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என்றால் பரவால்ல. புள்ளையும் நாங்களே பெத்துத் தர்றோம் என்றால் எப்படிங்க?
