ரூ.28.37 கோடி செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தலைமையிலான தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் கனிமவளத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி நடத்துவதற்கு பொன்முடியின் மகன் உள்ளிட்டோருக்கு உரிமம் வழங்கப்பட்டது.
இதில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண்ணை வெட்டி எடுத்ததுடன், அதற்குரிய கனிமக் கட்டணத்தையும் அரசுக்குச் செலுத்தாமல் ரூ.28.37 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அதிமுக ஆட்சிக் காலத்தில் 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
8 பேர் மீது வழக்குப் பதிவு
இந்த வழக்கில்,
- முன்னாள் அமைச்சர் பொன்முடி
- அவரது மகன் கௌதம சிகாமணி
- ஜெயச்சந்திரன்
- ராஜ மகேந்திரன்
- சதானந்தம்
- கோதகுமார்
- கோபிநாதன்
- லோகநாதன்
ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின்போது உடல்நலக் குறைவால் லோகநாதன் உயிரிழந்தார்.
57 சாட்சிகளில் 33 பேர் பிறழ் சாட்சியம்
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை 2025-ஆம் ஆண்டு அக்டோபரில் நிறைவடைந்தது. அரசு தரப்பில் சேர்க்கப்பட்ட 57 சாட்சிகளில் 33 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.
2026 மார்ச் 2-ந் தேதி அரசு தரப்பு மற்றும் பொன்முடி உள்ளிட்டோர் தரப்பு இறுதி வாதங்களை முன்வைத்தனர். இதனையடுத்து தீர்ப்பை ஏப்ரல் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி மணிமொழி.
தேர்தலுக்கு முன்னதாக பொன்முடி விடுதலை
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக ஏப்ரல் 2-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட 7 பேரும் ஆஜராகினர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மணிமொழி, பொன்முடி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அரசு தரப்பு சாட்சிகளில் 33 பேர் பிறழ் சாட்சியம் அளித்திருந்ததையும் போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததையும் நீதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
பொன்முடியை விடுதலை செய்தது ஏன்?
குவாரி உரிமம் வழங்கப்பட்டதற்கும், சட்டவிரோத ஆதாயம் மற்றும் குற்றச் சதி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் இடையிலான தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதிகளில் அறிவியல்பூர்வமான அளவீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. குவாரி உரிமதாரர்கள் முன்னிலையில் ஆய்வுகளும் நடத்தப்படவில்லை.
பொன்முடி தமது அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி பண ஆதாயம் பெற்றார் என்பதற்கும் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி பொன்முடி உள்ளிட்டோரை நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது.
அமலாக்கத்துறை வழக்கும் ரத்து
செம்மண் குவாரி முறைகேடு வழக்கின் அடிப்படையில் பொன்முடி உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்முடி மனுத் தாக்கல் செய்திருந்தார். செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான மூல வழக்கிலேயே பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுவிட்டதால், அதன் அடிப்படையிலான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர முடியாது எனக் கூறி கடந்த அக்டோபர் 13-ந் தேதி அமலாக்கத்துறை வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
விஜய் அரசு மேல்முறையீடு
இந்த நிலையில்தான் பொன்முடி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட 166 நாட்கள் காலதாமதத்தை மன்னிக்கக் கோரி தனியாக மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நேற்று (நவம்பர் 24) விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன், பொன்முடி உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதன்மூலம் 14 ஆண்டுகளுக்கு முன்னர் பொன்முடி மீது பதிவு செய்யப்பட்ட செம்மண் குவாரி முறைகேடு வழக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.









