வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று பிரதமரிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசின் காரணமாக மார்ச் 23 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் அனைத்துத் தொழில், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
இதுபோன்ற ஒரு சூழலில் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, அந்தந்த நிறுவனங்கள் சம்பளம் பிடித்தம் செய்யாமல் தருவதற்கு மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. எனினும் போதிய வருவாய் இல்லாமல் நிறுவனங்கள் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் விழி பிதுங்குகின்றன.
இந்நிலையில் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “ ஊரடங்கு காரணமாக சுமார் 90 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் எனத் தகவல்கள் கூறுகின்றன. தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க இயலாத நிலை தொடர்ந்தால், அக்குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி, வறுமையின் கோரப் பிடியில் சிக்கிவிடும் துயரச் சூழல் உருவாகும்.
மாநில அரசுகள் தங்களது நிதி ஆதாரங்களைக் கொண்டு சொற்பமான அளவில்தான் பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றன. ஏழைத் தொழிலாளர் குடும்பங்கள் வருவாய் இழப்பின் விளைவாகப் பட்டினியால் வாடும் ஆபத்து உருவானால், மிகப்பெரிய சமூகக் கொந்தளிப்புக்கு வழிவகுத்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற நெருக்கடிகளுக்கு அரசாங்கம் தீர்வு காணும் வகையில் சில பரிந்துரைகளை முன் வைத்துள்ளார்.
அதில், “தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தில் (ESIC) பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், திடீரென்று வேலை இழக்க நேரிட்டால் ‘அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் அவர்கள் கடைசியாகப் பெற்றுவந்த ஊதியத்தின் 25 விழுக்காடு மூன்று மாதத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதனை 50 விழுக்காடாக உயர்த்தி வழங்க ஆவன செய்ய வேண்டும்.
தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தில் 3.19 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில் உள்ள நிதி மூலதனம் ரூ.91,444 கோடியில், ரூ.23,151 கோடி இருப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்கள். தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தில் இரண்டு ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை இரண்டு மாதங்களாகக் குறைக்க வேண்டும்.
தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின் இச்சலுகையை வாழ்நாளில் ஒருமுறைதான் பயன்படுத்த முடியும் என்ற விதிமுறையைத் தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள கொள்ளை நோயைக் கருத்தில் கொண்டு நீக்க வேண்டும்.
தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின் ‘அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ் வேலை இழப்புக்கான சலுகைகளை தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் வழங்க முடியாத நிலை இருந்தால், நிலைக்குழு மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் ஆகியவற்றின் மூலம் ‘சிறப்புத் திட்டம்’ ஒன்றை வகுத்து, வேலை இழக்க நேரிட்ட தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
**-கவிபிரியா**










