தவெக மாவட்ட செயலாளர் மீது பாலியல் புகார்.. அலுவலகத்தை இழுத்து மூடி பெண் நிர்வாகிகள் ஆவேசம்- நடந்தது என்ன?

By Pandeeswari Gurusamy

|

Published on 13 Nov 2026, 5:29 PM

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தவெக செயலாளர் சத்யா மீது பெண் நிர்வாகிகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் எம். சத்யா. செய்யாறு தொகுதியைச் சேர்ந்த சத்யா, ஆரணி தொகுதியை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே கட்சி நிர்வாகிகளுடன் மோதல் போக்கு நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பெண் நிர்வாகிகள் சிலரிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும், தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், சிலரிடம் பணம் வாங்கிக்கொண்டு திருப்பித் தர மறுத்து மிரட்டுவதாகவும் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று ஆத்திரமடைந்த பெண் நிர்வாகிகள் ஆரணியில் உள்ள மாவட்டச் செயலாளர் சத்யாவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்த சத்யாவின் புகைப்படத்தின் மீது கருப்பு மை பூசி அழித்தனர்.

இது குறித்து தவெக பெண் நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாவட்டச் செயலாளர் சத்யா என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். என்னுடைய குடும்பச் சூழல் காரணமாக ஆரம்பத்தில் என்னால் அதற்கு எதிராகப் பேச முடியவில்லை; எதுவும் வெளியில் சொல்லவும் முடியவில்லை. ஒரு கட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்துப் புகார் அளித்தேன். அதன் பின்னர், என்னைக் கட்சியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு எனது குடும்ப உறுப்பினர்களை அழைத்து சத்யா மிரட்டினார். இதனால் மனமுடைந்த நான் தற்கொலைக்கு முயன்றேன். இதையடுத்து, என்னுடைய தனிப்பட்ட (பர்சனல்) விவகாரங்களை எல்லோரிடமும் தெரியப்படுத்தி, எனது நடத்தை குறித்து தவறாகச் சித்தரித்தார். என்னுடைய தனிப்பட்ட விவகாரங்களைப் பேசுவதற்கு யாருக்கும் உரிமையோ, தகுதியோ இல்லை.

ADVERTISEMENT

இதனால் எனக்கும் என் கணவருக்கும் இடையில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டன. என் மாமியார் வீட்டிலும் எனக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்தன. தற்போது மற்ற பெண் நிர்வாகிகளும் சத்யாவுக்கு எதிராக வெளியில் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே நான் முதல்வரின் தனிப்பிரிவிலும் புகார் அளித்துள்ளேன். போலீசார் என்னை விசாரித்தபோது, ‘இதைக் கட்சி ரீதியாகக் கொண்டு செல்லுங்கள்’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்” என்றார்.

இதேபோல் மேலும் ஒரு பெண் நிர்வாகி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 2 மணிக்கு மாவட்டக் கட்சி அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் சத்யா தனிமையில் இருந்தார். அது குறித்த சிசிடிவி காட்சிகளை நாங்கள் கைப்பற்றி வைத்திருக்கிறோம்” என்றார்.

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இதையடுத்து, ஆரணி டிஎஸ்பி அலுவலகத்திற்குச் சென்ற பெண் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் சத்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்துள்ளனர்.

ஏற்கனவே தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், நேற்று கோவையில் தவெக நிர்வாகி மீது பெண் நிர்வாகி ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இன்று ஆரணியில் பெண் நிர்வாகிகள் மாவட்டச் செயலாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக அரசு அமைந்து 6 மாதம் நிறைவடைந்த சூழலில் எம்எல்ஏ தொடங்கி கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளி வருவது முதல்வர் விஜய்க்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel