Microsoft முடக்கம் எதிரொலி.. இந்தியாவில் விமான சேவைகள் உட்பட என்னென்ன பாதிப்புகள்?

By Mathi

|

Published on 13 Nov 2026, 2:14 PM

Microsoft Outage India

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைய சேவைகள் முடங்கியதால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து, விமான நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவைகள், அலுவலகப் பணிகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Outlook, Exchange Online உள்ளிட்ட சேவைகளில் நேற்று நவம்பர் 12-ந் தேதி இரவு ஏற்பட்ட கோளாறு இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விமான நிறுவனங்களுக்கு பயணிகள் அனுப்பும் மின்னஞ்சல்கள் கிடைப்பதிலும், அவற்றுக்குப் பதில் அளிப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அலுவலகங்களில் Outlook மின்னஞ்சலைப் பயன்படுத்துபவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

டெல்லியில் விமானங்கள் ரத்து

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனே, லே மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல டெல்லியில் இருந்து தர்பங்கா மற்றும் மும்பைக்கு இயக்கப்பட வேண்டிய மேலும் 2 ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் தாமதமாகியுள்ளன. மைக்ரோசாப்ட் சேவைகளில் ஏற்பட்ட கோளாறின் எதிரொலியாக இந்த விமானங்கள் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

இண்டிகோ நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவை பாதிப்பு

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியதால் பயணிகளிடமிருந்து வரும் மின்னஞ்சல்களைப் பெறுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் சேவைகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் அனுப்பும் மின்னஞ்சல்கள் தங்களுக்குக் கிடைக்காமல் போகலாம் என்று தெரிவித்துள்ளது. இதனால் விமானப் பயணம் தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்குப் பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அவசரமாகத் தொடர்புகொள்ள வேண்டிய பயணிகள், இண்டிகோ நிறுவனத்தின் இணையதளம் அல்லது மொபைல் செயலியில் உள்ள 6E Skai என்ற வசதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

ஆகாசா ஏர் நிறுவனத்திற்கும் பாதிப்பு

இதேபோல ஆகாசா ஏர் (Akasa Air) நிறுவனமும் மின்னஞ்சல் சேவையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் கோளாறு காரணமாக பயணிகள் அனுப்பும் மின்னஞ்சல்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்றும், மின்னஞ்சல்களுக்குப் பதில் அளிப்பதில் தாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

எனவே, அவசரமாகத் தொடர்புகொள்ள வேண்டிய பயணிகள் +91 9606 112131 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் என்று அறிவித்துள்ளது. இந்த எண்ணில் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்கள் வழியாகவும் பயணிகள் தங்களது கேள்விகளைக் கேட்கலாம் என்று ஆகாசா ஏர் கூறியுள்ளது.

ஏர் இந்தியா விமானங்கள் பாதிக்கப்படவில்லை

இண்டிகோ, ஆகாசா ஏர் நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியதைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விமானங்கள் வழக்கம்போல இயக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. பயணிகளிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் தங்களுக்குத் தடையின்றிக் கிடைப்பதற்காக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் அனுப்பும் மின்னஞ்சல்கள் தொடர்ந்து கிடைப்பதாகவும், வழக்கம்போல 24 மணி நேரத்திற்குள் பதில் அளித்து வருவதாகவும் கூறியுள்ளது. தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வழியாகவும் பயணிகள் வழக்கம்போலத் தொடர்புகொள்ளலாம் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

டெல்லி விமான நிலையம் அறிவுறுத்தல்

மைக்ரோசாப்ட் கோளாறின் எதிரொலியாக விமான நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், டெல்லி விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் தங்களது விமானத்தின் நிலவரத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு, பயணம் செய்யவுள்ள விமானம் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் இணையதளம் அல்லது மொபைல் செயலியில் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதா, புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதா, தாமதம் ஏற்பட்டுள்ளதா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் Outlook சேவை.. ஆயிரக்கணக்கான புகார்கள்

விமான நிறுவனங்கள் மட்டுமின்றி இந்தியாவில் Outlook மின்னஞ்சலைப் பயன்படுத்தும் அலுவலகங்கள் மற்றும் தனிநபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இணைய சேவைகளில் பிரச்சனை ஏற்படும்போது பயனர்கள் புகார் அளிக்கும் Downdetector இணையதளத்தில், இந்தியாவில் நவம்பர் 12-ந் தேதி இரவு முதல் Outlook தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன.

நேற்று இரவு 11.42 மணியளவில் 2,157 புகார்கள் பதிவாகியுள்ளன. பின்னர் நள்ளிரவுக்குப் பிறகு புகார்கள் குறையத் தொடங்கின. அதிகாலை நேரத்தில் புகார்களின் எண்ணிக்கை 500-க்கும் கீழே குறைந்திருந்தது. ஆனால், இன்று நவம்பர் 13-ந் தேதி காலை அலுவலகப் பணிகள் தொடங்கியதும் மீண்டும் புகார்கள் அதிகரித்துள்ளன. காலை 6 மணிக்குப் பிறகு புகார்கள் உயரத் தொடங்கி, காலை 8.42 மணியளவில் 1,960 புகார்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இரவில் ஓரளவு குறைந்திருந்த Outlook பிரச்சனை, காலையில் அலுவலகப் பணிகள் தொடங்கியதும் மீண்டும் அதிகமானவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

Outlook பயனர்கள் சந்தித்த பிரச்சனைகள் என்ன?

Downdetector இணையதளத்தில் புகார் அளித்த இந்தியப் பயனர்களில் 43 சதவீதம் பேர் Outlook செயலியைப் பயன்படுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், 23 சதவீதம் பேர் தங்களுக்கு மின்னஞ்சல்கள் வரவில்லை என்றும், 18 சதவீதம் பேர் Outlook கணக்கிற்குள் செல்ல முடியவில்லை என்றும் புகார் அளித்துள்ளனர். இதனால் அலுவலக மின்னஞ்சல்களைப் பார்ப்பது, மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவது, வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் தகவல்களைப் பெறுவது போன்ற பணிகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவில் பல நிறுவனங்கள் தங்களது அன்றாட அலுவலகப் பணிகளுக்கு Outlook, Microsoft 365 போன்ற சேவைகளைப் பயன்படுத்துகின்றன. இந்த சேவைகளில் பிரச்சனை ஏற்பட்டால், நிறுவனங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதிலும், வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வதிலும் தாமதம் ஏற்படும். ஆனால், இந்தியாவில் எத்தனை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன, எத்தனை ஊழியர்கள் பணிகளைத் தொடர முடியாமல் சிரமப்பட்டனர் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

ChatGPT, Claude சேவைகளிலும் பாதிப்பு

மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியதால் செயற்கை நுண்ணறிவு சேவைகளை வழங்கும் OpenAI, Anthropic நிறுவனங்களின் சில வசதிகளிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ChatGPT சேவையை வழங்கும் OpenAI நிறுவனம், மைக்ரோசாப்ட் சேவைகளை ChatGPT உடன் இணைத்துப் பயன்படுத்தும் வசதியில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

உதாரணமாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல்கள், கோப்புகள் உள்ளிட்ட தகவல்களை ChatGPT மூலம் பயன்படுத்துவதற்கான இணைப்புகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் புதிய இணைப்புகளை ஏற்படுத்துவதிலும், ஏற்கெனவே இணைக்கப்பட்ட சில வசதிகளைப் பயன்படுத்துவதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதேபோல Claude செயற்கை நுண்ணறிவு சேவையை வழங்கும் Anthropic நிறுவனமும் மைக்ரோசாப்ட் சேவைகளுடனான இணைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் மின்னஞ்சல்கள், காலண்டரில் உள்ள நிகழ்ச்சிகள், SharePoint கோப்புகள், Teams உரையாடல்கள் போன்றவற்றை Claude மூலம் பார்த்துப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மின்னஞ்சல்களைத் தேடுவது, காலண்டரில் உள்ள தகவல்களைப் பார்ப்பது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், ChatGPT மற்றும் Claude ஆகிய செயற்கை நுண்ணறிவு சேவைகள் முழுமையாக முடங்கவில்லை. மைக்ரோசாப்ட் சேவைகளுடன் இணைத்துப் பயன்படுத்தும் சில வசதிகளில்தான் கோளாறு ஏற்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் இந்தியா என்ன விளக்கம் அளித்தது?

மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்தக் கோளாறு குறித்து தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. Microsoft 365 சேவைகளுக்கு MO1550821 என்ற எண்ணிலும், மின்னஞ்சல் சேவையான Exchange Online-க்கு EX1550543 என்ற எண்ணிலும் பிரச்சனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: மைக்ரோசாப்ட் சேவைகளை இயக்கும் சில சர்வர்கள் திடீரெனச் செயல்படாமல் போயுள்ளன. இதனால் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்த மற்ற சர்வர்களுக்கு அதிக வேலை ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமான பயனர்கள் மின்னஞ்சல் உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்த முயன்றதால், அந்தச் சர்வர்களாலும் அனைத்தையும் சமாளிக்க முடியவில்லை.

இதையடுத்து, செயல்படாமல் போன சர்வர்களை மீண்டும் இயக்கவும், பயனர்களின் தகவல்களை மற்ற சர்வர்கள் வழியாக அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில சர்வர்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியபோதும், அதிகமானோர் ஒரே நேரத்தில் பயன்படுத்தியதால் அவை மீண்டும் செயலிழந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட சர்வர்களைச் சரிசெய்வதுடன், பழைய மென்பொருள் அமைப்பைப் பயன்படுத்தி சில சர்வர்களை மீண்டும் உருவாக்கி சோதிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel