திருப்பூர் சிறுமி பாலியல் வழக்கிலும், பெரியபாளையம் மாணவி தாக்குதலிலும் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த Deemed தாய்மாமாவின் ஆட்சியில், கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை இக்குற்றங்கள் வெட்டவெளிச்சமாக்குகின்றன.
காணாமல் போன செஞ்சி சிறுமியை இன்னும் “விஜய் மாமா”வின் அரசு கண்டுபிடிக்கவில்லை!
ஆனால், இன்றைய தினம் பள்ளிக் குழந்தைகளுக்கு “கேக்” ஊட்டி விடப் போகிறாராம். வெட்கமாக இல்லையா முதல்வர் அவர்களே?
கேக் கொடுக்கும் அட்டையில் All is Well என்று எழுதி இருக்கிறார்களாம்.
உங்கள் ஆட்சியில் “Is all Well CM?”
குழந்தைகளுக்கு பள்ளி, வீடு, சாலை என்று எங்கேயாவது பாதுகாப்பு இருக்கிறதா?
உங்கள் ஆட்சியில் Confident-ஆக இருப்பது குற்றவாளிகள் மட்டும் தான்!
இப்படி ஒரு திக்குத் தெரியாத, பாதுகாப்பற்ற ஆட்சியில் எப்படி பெண்கள், பெண் குழந்தைகள் நிம்மதியாக, Confident-ஆக இருக்க முடியும்?
பெண்கள் மீது, பெண் குழந்தைகள் மீது கொஞ்சமாவது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிவகைகளைப் பாருங்கள்.
திருப்பூர் சிறுமி பாலியல் வழக்கிலும், பெரியபாளையம் மாணவி தாக்குதலிலும் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.









