‘சனியன் பிடிச்ச காங்கிரஸ் தலைவர்கள்’ மாணிக்கம் தாகூர் பேச்சால் காங்கிரஸில் கலகம்!

By Pandeeswari Gurusamy

|

Published on 13 Nov 2026, 10:45 AM

விஜய் ஒரு காலத்தில் காங்கிரஸில் சேர வேண்டும் என்று விரும்பினார், சனியன் பிடித்த காங்கிரஸ் தலைவர்கள் தான் சேர விடாமல் செய்து விட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மூத்த தலைவர்களை விமர்சித்துள்ளது காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனது.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக முதலாவது மண்டலத் தலைவர்கள் பயிற்சி முகாம் நேற்று (நவம்பர் 12) தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “நம்மைப் பொறுத்தவரை காங்கிரஸின் சமூக வலைதளப் பிரிவை (Social Media) பலப்படுத்த வேண்டும். காங்கிரஸின் கொள்கைகள் தெளிவாகவும், தைரியமாகவும் சொல்லப்படவில்லை. இனி நீங்கள் பயப்படத் தேவையில்லை. நமது ஆட்சி நடக்கிறது, நமது அமைச்சர்கள் இருக்கிறார்கள், நாம் கட்சியில் இருக்கிறோம் என்கிற நம்பிக்கை முதலில் நமக்கு வர வேண்டும்.

ADVERTISEMENT

இந்தியாவிலேயே விஜய்க்கு ஆதரவளித்த தலைவர்

விஜய் அவர்களுக்கு எந்தெந்த நேரத்திலெல்லாம் தேவைப்பட்டதோ, அப்போதெல்லாம் அவருடன் நின்றது ராகுல் காந்தி என்பதை மறந்துவிட வேண்டாம். ராகுல் காந்தியைப் பொறுத்தவரை விஜய்யை ஒரு சகோதரராகப் பார்க்கிறார். எப்போதெல்லாம் அவருடன் நின்றிருக்கிறோம் என்றால், கரூரில் விபத்து நடந்தது; அது சதியா, விபத்தா என்பது வேறு விஷயம். ஆனால், நடந்த சம்பவத்திற்குப் பிறகு இந்தியாவிலேயே விஜய்யுடன் பேசிய ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டும்தான். அவரிடம் பேசி, ‘எனக்கும் இது போன்ற பெரிய இழப்புகள் நடந்திருக்கின்றன; நான் அன்பு செலுத்தியவர்களை எனது கண் முன்னால் இழந்திருக்கிறேன். அதற்காக நான் வீட்டில் முடங்கி உட்கார்ந்ததில்லை; நீங்களும் மக்களோடு போய் நில்லுங்கள்’ என்று ராகுல் காந்தி கூறினார். அடுத்த நாளே விஜய் எல்லோரையும் சந்திக்க ஆரம்பித்தார்.

அதனால், நம்மைப் பொறுத்தவரை விஜய் அவர்களுக்கு எப்போதெல்லாம் கஷ்டகாலம் வந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் கூட நிற்கும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி என்பதை மறந்துவிடாதீர்கள். அதேபோல், தேர்தல் முடிவுகள் வந்தபோது 105 தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெற்றது. ஆட்சி அமைய வேண்டும் என்றால் 15 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் ஆதரவைத் தந்தது காங்கிரஸ் கட்சிதான். அதனால்தான் பின்னர் யோசித்துக் கொண்டிருந்த கட்சிகளெல்லாம் ஆதரவு கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்தன. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எப்போதெல்லாம் விஜய் அவர்களுக்குத் துணையாக இருந்திருக்கிறோம் என்பதை நாமும் மறந்துவிடக் கூடாது; அவர்களும் மறக்க மாட்டார்கள். அதைப் பற்றி நீங்கள் கவலைப்படவே வேண்டாம்.

ADVERTISEMENT

சனியன் பிடித்த காங்கிரஸ் தலைவர்கள்

ஏனென்றால், விஜய் ஒரு காலத்தில் காங்கிரஸில் வந்து சேர வேண்டும் என்று நினைத்தவர்; ராகுல் காந்தியின் தலைமையை ஏற்றுக்கொண்டவர். ஆனால், நம்ம சனியன் பிடிச்ச காங்கிரஸ் தலைவர்கள் அவரை வந்து சேரவிடாமல் ஆக்கிவிட்டார்கள். அப்ப இருந்தவன்கள்.. இவர்களுக்கு இடையே உள்ள பஞ்சாயத்தில் நம்மை சேரவிடாமல் ஆக்கிவிட்டார்கள். 2026-ல் நம்முடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நினைத்தவர் விஜய் அவர்கள். அதனால் உங்களுக்கு எந்தப் பயமும் வேண்டியதில்லை. இந்தக் கூட்டணி பலமான கூட்டணி; இந்தக் கூட்டணி வெற்றி பெறும்.

திமுக-வினர் சொல்லும் பொய்யை நம்பாதீர்கள்; அவர்கள் தோற்றுக் கொண்டேதான் இருக்கப் போகிறார்கள். நம் ஆதரவு இல்லாமல் திமுக வாழ்க்கையில் ஆட்சியை அமைத்ததே இல்லை. 1971-ல் ஆரம்பித்து 2021 வரை தூக்கிப் பிடித்தவர்கள் ஏதோ ஒரு கதர் சட்டை போட்ட காங்கிரஸ்காரர்கள்தான்; அவர்கள்தான் இவர்களை மந்திரியாக்கி இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்திரா காந்திக்கும் காமராஜருக்கும் இடையே இருந்த பிரச்சினைகளால் 1971-ல் ஆரம்பித்து மீண்டும் கருணாநிதியை முதலமைச்சராக்கினோம். அதேபோல் எப்போதும் கருணாநிதி தனித்து ஜெயிக்கவில்லை. பிறகு மூப்பனார் ஐயா, பீட்டர் அண்ணன் எல்லோரும் சேர்ந்து கருணாநிதியை முதலமைச்சராக்கினார்கள். மீண்டும் 2006-ல் சோனியா காந்தி அம்மா அவரை முதலமைச்சராக்கினார். 2021-ல் ராகுல் காந்தி வந்து ஸ்டாலினை முதலமைச்சராக்கினார். இவர்களையெல்லாம் முதலமைச்சராக்கியது நாம்தான். கேட்டால், ‘தூக்கிப் பிடித்தோம்’ என்கிறார்கள். இது என்னங்கடா கூத்தாக இருக்கிறது? எல்லா இடத்திலும் எங்களோடு கூட்டணி வைத்துத்தான் நீங்கள் முதலமைச்சராகி இருக்கிறீர்கள். உங்களை முதலமைச்சராக்கிவிட்டு நாங்கள் தூக்கி வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறோம். நாங்கள் சாமியை உள்ளே கொண்டு சென்று வைத்துவிட்டு, வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பது போல், தீவெட்டி தடியன்கள் போல் வேடிக்கை பார்த்திருக்கிறோம். உள்ளே ஐயர் உட்கார்ந்து மந்திரம் பேசிக் கொண்டிருப்பார்; அது மாதிரி காங்கிரஸ்காரர்கள் வெளியில் நின்றோம்.

இன்று நமக்குச் சம அந்தஸ்து கிடைத்துள்ளது. நமது அமைச்சர்கள் விஸ்வநாதன் அவர்களும், ராஜேஷ்குமார் அவர்களும் விஜய்யோடு சமமாக உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் காங்கிரஸ்காரர்களின் உண்மையான உழைப்பு என்பது விஜய்க்குப் புரியும். அவருக்கு எப்போதெல்லாம் தேவையோ, அப்போதெல்லாம் ராகுல் காந்தி அவருடன் இருப்பார்.

சாமிக்கு பயப்படும் முதல்வர்

விஜய்யின் நல்ல மனசுக்கு, சாமிக்கு பயப்படும் ஒரு முதலமைச்சர் ரொம்ப காலத்திற்குப் பிறகு வந்திருக்கிறார். சாமியை நம்பும் ஒரு முதலமைச்சர் அவர். ஜீசஸோ, திருச்செந்தூர் முருகனோ, நாகூர் தர்காவோ என்று ஏதோ ஒரு சாமிக்கு பயப்படுகிறார்.

சாமிக்கு பயப்படாதவர்கள்தான் பெரும் திருடர்களாக இருக்கிறார்கள். நூலகத்திலும் (Library) கைவைத்து விட்டார்கள்; பிள்ளைகளின் பள்ளிக் கல்வியில் ஊழல் என எல்லாவற்றிலும் ஊழல் செய்கிறார்கள். எதையாவது ஒன்றை விட்டுத் தொலையுங்கள். எல்லாப் புத்தகத்திலும் ஊழல்; புதுக்கோட்டை நூலகத்தில் ஆயிரம் புத்தகங்கள் போலிப் புத்தகங்களாம். இவ்வளவு கொள்ளையடிக்கிறீர்கள்! கல், மண், டாஸ்மாக், புத்தகம் என எல்லாவற்றிலும் ஊழல். இதை மடைமாற்றத்தான் தப்பி குதிக்கிறார்கள். இதனால் தான் வாட்ஸ்அப் செய்து விட்டார்கள் என்று சொல்லிகிறார்கள்.

நூலகத்திலும் பள்ளிக்கூடத்திலும் திருடினீர்களா, இல்லையா? பச்சைப் பிள்ளைகளுக்கு தடையின்மைச் சான்றிதழ் (NOC) கொடுப்பதில் முறைகேடு செய்திருக்கிறீர்களே! கும்பகோணத்தில் தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் இறந்து போனார்களே, அதற்காகத்தான் இந்த என்.ஓ.சி (NOC) வாங்குவதையே கொண்டு வந்தார்கள். அதிலும் டோக்கன் போட்டுப் பணம் வாங்கி இருக்கிறீர்களே! துறைக்குள்ளேயே உட்கார்ந்து அரசகுமார், முத்துக்குமார் என்று டோக்கன் போட்டுப் பணம் வாங்கி இருக்கிறீர்களே!

விஜய் முன் மொழிவார்

நம்மைப் பொறுத்தவரை காங்கிரஸ்காரர்கள் தைரியமாகச் சொல்லுங்கள்: ‘நமது அமைச்சர்கள் இருக்கிறார்கள், ஆட்சி நமது ஆட்சி, நாம் கூட இருக்கிறோம்.’ நாம் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி நமது கூட்டணி. நமது முதலமைச்சராக விஜய் இருக்கிறார். நமது பிரதமராக ராகுல் காந்தியை விஜய் முன்மொழிவார் என்று புதுக்கோட்டையிலிருந்து சொல்கிறேன். ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக விஜய் முன்மொழிவார் என்பதில் எந்தச் சந்தேகமும் தேவையில்லை.

குழப்பத்தை உருவாக்குவார்கள்; பாஜக, ஆர்.எஸ்.எஸ்., திமுக, அதிமுக என எல்லோரும் ஒன்று சேர்ந்து நிற்கிறார்கள். இப்போது சீமானும் ஒன்று சேர்ந்திருக்கிறார். இதில் சீமான் பொது வேட்பாளராம். இந்த வெங்காயம்! எங்கே போனாலும் உங்களைத் தோற்கடித்து விடுகிறார்களே! ஏதாவது ஒன்றில் கவுன்சிலராகவாவது ஜெயித்துக் காட்டுங்கள், அப்புறம் பேசலாம். ‘தனியாவா’ என்கிறீர்கள்; உங்களைத்தான் எவனும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

திருப்பி அடியுங்கள்

இவர்கள் எல்லோரும் சேர்ந்து நம்மைத் தரக்குறைவாகப் பேசுவார்கள்; நம்முடைய தலைவரைப் பேசுவார்கள்; சோனியா காந்தியைப் பேசுவார்கள். திருப்பி அடியுங்கள்; இவர்களை விடவே மாட்டோம். நாம் ஆட்சியில் இருக்கிறோம்; நமக்கு இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இருவரும் ஒரு காசு வாங்காமல் பணியாற்றுகிறார்கள். ஆறு மாதங்கள் ஆகிவிட்டன; ஒரு காசு வாங்காமல் ஆறு மாதம் அமைச்சர்கள் இருந்த வரலாறு இருக்கிறது என்றால், அது இப்போதுதான் நடக்கிறது. 152 கல்லூரிகளுக்கான முதல்வர் (Principal) பதவி உயர்வு போட்டுள்ளார்கள். திமுக ஆட்சியில் ஒவ்வொரு பதவிக்கும் அறுபது லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டது. ஆனால், ஒரு காசு கூட வாங்காமல் விஸ்வநாதன் அவர்கள் பதவி உயர்வு வழங்கிக் கொண்டிருக்கிறார். அதை அவர்கள் சொல்கிறார்கள். நாம் அதைச் சொல்ல மாட்டேன் என்கிறோம்; நாம் மக்களிடம் சொல்ல வேண்டும். இல்லையென்றால் காமராஜர் கதை தான் நமக்கு”என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel