அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுக்கள் மீதான விசாரணை, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நவ. 10-ந் தேதி தொடங்கிய இந்த விசாரணையில், அதிமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் குறித்து அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் இன்பதுரை எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மே 13-ந் தேதி நடைபெற்றது. அப்போது அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடுத்து, அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் மனு அளித்தார். பின்னர் 25 பேரில் 21 பேர் மன்னிப்பு கடிதம் அளித்ததால் அவர்கள் மீதான தகுதி நீக்கக் கோரிக்கையை அதிமுக திரும்பப் பெற்றது. ஆனால் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் மீதான மனுக்கள் திரும்பப் பெறப்படவில்லை.
இந்த 4 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் அக். 6-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களாகப் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தகுதி நீக்க மனுக்கள் நிலுவையில் இருந்தபோது எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அக். 13-ந் தேதி தீர்ப்பளித்தது. அப்போது, 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் என்று தெரிவித்த நீதிபதிகள், தகுதி நீக்க மனுக்கள் நிலுவையில் இருப்பதற்காக மட்டும் தன்னிச்சையாக அளிக்கப்பட்ட ராஜினாமாவை ஏற்கக் கூடாது என்று அரசியலமைப்புச் சட்டம் தடை விதிக்கவில்லை என விளக்கினர்.
அதேநேரத்தில், ராஜினாமா ஏற்கப்பட்டதால் ஏற்கெனவே நிலுவையில் உள்ள தகுதி நீக்க மனுக்கள் தானாக முடிவுக்கு வந்துவிடாது என்றும் தெளிவுபடுத்தினர். எனவே, நிலுவையில் உள்ள 4 பேர் மீதான மனுக்கள் குறித்து 2 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும், 7 நாட்களுக்குள் விசாரணைக்கான கால அட்டவணையை வெளியிட வேண்டும் என்றும் சபாநாயகருக்கு உத்தரவிட்டனர்.
சபாநாயகர் வெளியிட்ட விசாரணை அட்டவணை
உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விசாரணைக்கான கால அட்டவணையைத் தயாரித்தார். அதன்படி, இரு தரப்பினரும் கூடுதல் ஆவணங்கள் மற்றும் பதில் மனுக்களை அக். 26-ந் தேதிக்குள்ளும், பிரமாணப் பத்திரங்களை நவ. 2-ந் தேதிக்குள்ளும் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. நவ. 10 முதல் நவ. 12-ந் தேதி வரை சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையும், நவ. 17-ந் தேதி இறுதி வாதங்களும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அட்டவணையின்படி நடைபெற்ற விசாரணையில் அதிமுக தரப்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். இந்த விசாரணைக்குப் பின்னர் அதிமுக சட்டத்துறை செயலாளர் இன்பதுரை எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின் 2(1)(b) பிரிவின்படி, ஒரு அரசியல் கட்சியின் தலைவர் அல்லது கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களிக்கும் உறுப்பினர்கள் தகுதி நீக்கத்திற்கு ஆளாவார்கள். இந்த 4 பேரும் கட்சியின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்ததை நாம் தொலைக்காட்சி நேரலையிலேயே பார்த்தோம். எனவே, அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வாதம். அதை சபாநாயகர் முன்னிலையில் எடுத்துரைத்துள்ளோம்.
ராஜினாமா செய்ததால் தகுதி வழக்கு நீர்த்து போகாது
இவர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் தகுதி நீக்க வழக்கு நீர்த்துப்போகாது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் எங்களுடைய வாதங்களை முன்வைத்துள்ளோம். வாக்கெடுப்பு நடைபெற்ற நாளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் சட்டப்பேரவையில், அதிமுக உறுப்பினர்கள் தவெக தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார். ஆனால், அந்த உத்தரவை மீறி இந்த 4 பேரும் வாக்களித்தார்கள்.
21 பேருக்கு மன்னிப்பு.. 4 பேருக்கு ஏன் இல்லை?
மொத்தம் 25 பேர் கட்சியின் உத்தரவை மீறி வாக்களித்தார்கள். அவர்களில் 21 பேர் மன்னிப்பு கோரி கடிதம் கொடுத்ததால் மன்னிக்கப்பட்டுவிட்டார்கள். ஆனால், இந்த 4 பேரும் மன்னிப்பு கடிதம் கொடுக்கவில்லை. அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டு, அந்தக் கட்சியைத் தாங்களாகவே கைவிட்டுவிட்டு இன்னொரு கட்சியில் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி இந்த 4 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய வழக்கு. அதை சபாநாயகர் முன்னிலையில் எடுத்துரைத்துள்ளோம். இவ்வாறு இன்பதுரை தெரிவித்தார்.









