த.வெ.க. ஒன்றியச் செயலாளர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்!

By Pandeeswari Gurusamy

|

Published on 12 Nov 2026, 9:04 PM

கோவை அருகே த.வெ.க. ஒன்றியச் செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகியே பாலியல் சீண்டல் மற்றும் சாதிய ரீதியிலான வன்கொடுமை தொடர்பாகப் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், காளம்பாளையம் ஊராட்சிச் செயலாளராகப் பணியாற்றி வரும் பெண் நிர்வாகி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக த.வெ.க.-வில் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அந்தப் பெண் நிர்வாகி, பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, காரமடை ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி அவசர ஆலோசனைக் கூட்டம் என கூறி தன்னை அழைத்ததாகவும், கூட்டம் முடிய இரவு நேரமானபோது தன்னிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், கருப்பசாமி தன்னைப் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என கூறி சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும், கட்சியை விட்டு வெளியேற்ற பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், இப்பெண் நிர்வாகி குறித்துக் கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த மகளிர் அணி நிர்வாகி சபிதா மற்றும் அவரது கணவர் பாண்டி ஆகியோர், பெண் நிர்வாகியின் வீட்டிற்கே சென்று கதவைத் தட்டி, சாதிப் பெயரைச் சொல்லித் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை விபத்து ஏற்படுத்திக் கொல்ல ஒன்றியச் செயலாளர் திட்டமிட்டதாகக் கூறப்படும் வாட்ஸ்-அப் ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாக அப்பெண் நிர்வாகி பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுமட்டுமின்றி, இந்தப் பிரச்சினையை மூடி மறைக்கக் கோரி, ஒன்றியச் செயலாளருக்கு நெருக்கமான சரவணன் என்பவர் தன்னைத் தொடர்பு கொண்டு, பண உதவி மற்றும் பதவி தருவதாகக் கூறி ஆபாசமாகவும், பாலியல் ரீதியாகவும் பேசிய ஆடியோ ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளதாக பெண் நிர்வாகி குற்றம் சாட்டி உள்ளார்.

த.வெ.க. அரசில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என தொடர்ச்சியாக தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியாகியுள்ள தகவல் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தற்போது த.வெ.க. ஒன்றியச் செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியே பாலியல் மற்றும் சாதி வன்கொடுமைப் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel