‘பெண் ஆட்சியரிடம் தவெக அரசு மன்னிப்பு கேட்க வேண்டாமா?’ விஜய், மாணிக்கம் தாகூரை வெளுத்து வாங்கிய பாலபாரதி

By Pandeeswari Gurusamy

|

Published on 12 Nov 2026, 2:14 PM

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியும், குடிபோதையில் ஆட்சியர் வீட்டிற்குள் சென்று தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்படும் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து, சென்னை பனகல் மாளிகை அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி பங்கேற்றுக் கண்டன உரையாற்றினார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “யாரிடம் சென்று ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்புவது? இப்படி நடந்துகொண்ட எம்.எல்.ஏ-வைப் பாலியல் துன்புறுத்தல் என்ற ரீதியில் கைது செய்து சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; அவரை ராஜினாமா செய்ய வைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், தமிழ்நாட்டின் முதல்வர் சட்டமன்றத்தில் ‘பெண்களை யார் இழிவுபடுத்தினாலும் நான் விடமாட்டேன்’ என்று சொன்ன வார்த்தை உண்மையாக இருந்திருக்கும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. இரண்டு மாத காலமாக அவரை உள்ளே வைத்துப் பாதுகாத்து வந்திருக்கிறீர்கள்; இது எவ்வளவு அருவருப்பானது?

தவெக தமிழ்நாட்டை குறைத்து பார்க்கிறதா?

ஒரு பெண் கலெக்டர் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து வந்திருப்பார்! இப்படிச் சமூக வலைதளங்களிலும், தமிழக மக்கள் மத்தியிலும் நிமிடத்திற்கு நிமிடம் அவருடைய பெயர் ஒவ்வொருவர் பேச்சிலும் அடிபடும்போது அந்தப் பெண்ணின் மனநிலை என்னவாகும்? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வேறு போட்டுள்ளீர்கள். காவல் அதிகாரிகளைக் கொண்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று சொன்னால், வேறு என்னென்ன சம்பவங்கள் அங்கு நடந்தன? எதற்காக நீங்கள் மூடி மறைக்கிறீர்கள்?

ADVERTISEMENT

நேற்று முதல்வர் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்திருக்கிறார். இதுகுறித்து அவர் ஏதாவது விவரங்கள் கேட்டு வெளிப்படுத்தினாரா என்றால் இல்லை. அப்படியென்றால் இதைக் கண்டுகொள்ளாமல் போய்விடலாமா? தவெக அரசு என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது? தமிழ்நாட்டை நீங்கள் குறைத்துப் பார்க்கிறீர்களா? உங்களுக்கு ஒரு பெரிய இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது, அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று முடிவு செய்துவிட்டீர்களா? இது மறைக்கக்கூடிய ஒரு செயலா? அந்தப் பெண்ணிடம், கலெக்டரிடம் நியாயமாகத் தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டுமா, இல்லையா? இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்துள்ளீர்கள்.

இவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவரா?

இதில் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் வேறு, ‘அந்த எம்.எல்.ஏ பாவம்’ என்கிறார். ஏதோ கலெக்டர்தான் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது மாதிரி அவர் தோற்றத்தை உருவாக்குகிறார். அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்; இந்த அரசை ஆதரிக்கக்கூடிய, ஆட்சிக்குள் இருக்கக்கூடிய எந்தக் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் பெண்கள் பக்கமாக நிற்க வேண்டும்.

ADVERTISEMENT

தமிழகத்திற்கே தலைகுனிவு

ஒரு கலெக்டர் தலைகுனிந்து நிற்கிறார்; இது தமிழ்நாட்டிற்குத் தலைகுனிவு என்பது தெரியுமா உங்களுக்கு? அந்த மாவட்டத்தில் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஆட்சியர் எப்படிப் போய்த் தட்டிக் கேட்பார்? இது மிகவும் அநியாயமானது. அதிகாரத்தில் இருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரியையே இப்படி ஒரு பாலியல் சிக்கலில் கொண்டு வந்து நடுத்தெருவில் நிற்க வைத்திருப்பதைத் தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமானமாக நாங்கள் பார்க்கிறோம்.

இதுபோன்று நடக்கவே இல்லை என்று சில அமைச்சர்கள் சொல்கிறார்கள். ஒரு அமைச்சர், ‘கலெக்டர் வந்து புகார் கொடுக்கட்டும்’ என்கிறார். ஆனால், அந்தப் பெண் கலெக்டரின் கணவரும் கலெக்டர்தான்; அவர் புகார் அளித்துள்ளார். கலெக்டர் ஏன் நேரில் வந்து புகார் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறோம்? அவருக்குக் காவல்துறை பாதுகாப்பு போட்டு இருக்கிறீர்கள்; இது ஊரறிந்த ரகசியமாக இருக்கிறது. இனி என்ன அவர் வந்து புகார் கொடுப்பது?

தவெக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை

இந்தப் பிரச்சினையைத் தள்ளிவிடுவதற்கும், கடத்துவதற்குமான முயற்சியைத் தவெக அரசு செய்வது ஆபத்தானது. தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த விவகாரத்தில் தவெக அரசை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel