கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது டி.ஜி.பி அலுவலகத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ். இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூகவலைதளங்களில் இதுகுறித்த தகவல்கள் பரவிய நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் நேற்று முதல்வர் விஜய் தவெக எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து இருந்தார். அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொல்லை கொடுப்பது தெரியவந்தால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பேன் என்று விஜய் எச்சரிக்சை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவரை எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது தவெக தரப்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி திரிசூலி என்பவர் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சியருக்குத் தொலைபேசி மூலம் ஆபாசமாகக் குறுஞ்செய்தி அனுப்பியதுடன், ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் அவர் அத்துமீறி நுழைந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருப்பதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆட்சியர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கவலை அளிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.









