தாத்தாவின் சொத்தில் பேரனுக்குப் பிறப்புரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெ.ராஜேஷ் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மசீஹ், சுனிதா அகர்வால் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு நவ.6-ந் தேதி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
என்ன வழக்கு?
என்.ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான 1,811 சதுர அடி நிலம் தொடர்பாக அவரது மகள் ஜி.லலிதா 1993-ஆம் ஆண்டு சொத்துப் பிரிவினை வழக்குத் தொடர்ந்தார். வாரிசுகளிடையே ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில் 1994 பிப்ரவரி 3-ந் தேதி நீதிமன்றம் பிரிவினைத் தீர்ப்பு வழங்கியது.
அதில் ராமகிருஷ்ணனின் மகனுக்கு 1,811 சதுர அடி நிலம் கிடைத்தது. அவர் அந்தச் சொத்தை 1997 ஏப்ரல் 3 மற்றும் 17-ந் தேதிகளில் 2 விற்பனைப் பத்திரங்கள் மூலம் விற்றார்.
ஆனால், அவரது மகன் ராஜேஷ், இது தனது தாத்தாவின் பூர்வீகச் சொத்து என்பதால் தனக்குப் பாதிப் பங்கு இருப்பதாகக் கூறி வழக்குத் தொடர்ந்தார்.
கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை
ராஜேஷுக்கு ஆதரவாக சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் முதற்கட்ட சொத்துப் பிரிவினைத் தீர்ப்பு வழங்கியது. மேல்முறையீட்டில் அந்தத் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றமும் ராஜேஷின் பிறப்புரிமைக் கோரிக்கையை ஏற்கவில்லை. இதையடுத்து ராஜேஷ் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.
பேரன் தரப்பு வாதம் என்ன?
ராஜேஷ் தரப்பில் வழக்கறிஞர் கே.பாரி வேந்தன் ஆஜராகி, தாத்தாவின் பூர்வீகச் சொத்தில் தந்தைக்குப் பங்கு கிடைத்ததால் மட்டும் அதன் பூர்வீகத் தன்மை மாறிவிடாது என்று வாதிட்டார். ராஜேஷ் 1994 ஜனவரி 6-ந் தேதி பிறந்தார். ஆனால், பிரிவினைத் தீர்ப்பு பிப்ரவரி 3-ந் தேதிதான் வழங்கப்பட்டது. எனவே, பிரிவினைக்கு முன்பே பிறந்த ராஜேஷுக்குச் சொத்தில் உரிமை ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டின் 1989-ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 29-A மற்றும் முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டினார்.
சொத்தை வாங்கியவர்கள் வாதம் என்ன?
சொத்தை வாங்கியவர்கள் தரப்பில் வழக்கறிஞர் கே.கே.மணி ஆஜராகி, தாத்தா இறந்த பிறகு இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 8-ன்படி அவரது சொத்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்குச் சென்றுவிட்டதாகத் தெரிவித்தார். பின்னர் நடந்த பிரிவினையில் தந்தைக்குக் கிடைத்த பங்கு அவரது தனிச்சொத்தாக மாறிவிட்டது. அதில் பேரன் பிறப்புரி மை கோர முடியாது என்று வாதிட்டார். மேலும், 1994 பிரிவினைத் தீர்ப்பையும் 1997 விற்பனைப் பத்திரங்களையும் ராஜேஷ் நேரடியாக எதிர்க்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
இருதரப்பு வாதங்களையும் ஆய்வு செய்த நீதிபதிகள், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 6, 8 மற்றும் தமிழ்நாட்டின் பிரிவு 29-A ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளனர். தாத்தா மறைந்த பிறகு பிரிவு 8-ன்படி சொத்து அவரது முதல் நிலை வாரிசுகளுக்குச் சென்றுள்ளது. பின்னர் 1994-ஆம் ஆண்டு பிரிவினையும் நடந்துள்ளது. இதனால் தந்தைக்குக் கிடைத்த பங்கு அவரது தனிச்சொத்தாக மாறிவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
“…became his exclusive property in his individual capacity and cannot be said to be coparcenary.”
அதாவது, தந்தைக்குக் கிடைத்த சொத்து அவரது தனிப்பட்ட சொத்தாக மாறிவிட்டது. அதைத் தொடர்ந்து கூட்டுக்குடும்பச் சொத்தாகக் கருத முடியாது என்பதே நீதிபதிகளின் விளக்கம்.
தாத்தாவின் சொத்துக்கான வாரிசுரிமை 1993-ஆம் ஆண்டுக்கு முன்பே ஏற்பட்டுவிட்ட நிலையில், 1994-ஆம் ஆண்டு பிறந்த ராஜேஷுக்கு அந்தச் சொத்தில் பிறப்புரிமை ஏற்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் ராஜேஷின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1956-க்கு முன்பு உருவான சொத்துகளுக்கு என்ன சட்டம்?
இந்தத் தீர்ப்பில் கவனிக்க வேண்டிய முக்கியமான சட்ட வேறுபாடு இதுதான். 1956-ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே உருவான கூட்டுக்குடும்பச் சொத்துரிமையும், அந்தச் சட்டத்தின் பிரிவு 8-ன்படி வாரிசுகளுக்குக் கிடைக்கும் தனிச்சொத்தும் ஒன்றல்ல. உதாரணமாக, ஒரு தாத்தா 1956-க்கு முன்பே இறந்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவரது சொத்து அப்போது நடைமுறையில் இருந்த இந்து கூட்டுக்குடும்பச் சொத்துரிமை விதிகளின்படி மகன்களுக்குச் சென்றிருக்கலாம். அந்தச் சொத்து தொடர்ந்து கூட்டுக்குடும்பச் சொத்தாக இருந்து, 1976-ஆம் ஆண்டு மகன்களுக்கிடையே பாகப்பிரிவினை நடந்திருந்தால், தந்தைக்குக் கிடைத்த பங்கில் அவரது மகனுக்கும் பிறப்புரிமை இருக்கலாம்.
ஏனெனில், ஏற்கெனவே கூட்டுக்குடும்பச் சொத்தில் உருவான பிறப்புரிமை, பின்னர் பாகப்பிரிவினை நடந்தது என்ற காரணத்தால் மட்டும் இல்லாமல் போய்விடாது. ஆனால், தாத்தா 1956-க்கு முன்பு இறந்தார் என்பதாலேயே அவரது சொத்து கூட்டுக்குடும்பச் சொத்து என்று முடிவு செய்ய முடியாது. அந்தச் சொத்து தாத்தாவுக்கு எப்படிக் கிடைத்தது, அவர் இறந்தபோது யாருக்கெல்லாம் உரிமை இருந்தது, பின்னர் சொத்து எந்த முறையில் பிரிக்கப்பட்டது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு மாறாக, 1956 சட்டத்தின் பிரிவு 8-ன்படி தாத்தாவின் சொத்து அவரது வாரிசுகளுக்குச் சென்று, தந்தைக்குத் தனிப்பட்ட உரிமையாகக் கிடைத்திருந்தால், அதில் பேரன் பிறப்புரிமை கோர முடியாது.
முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் என்ன சொல்கின்றன?
Rohit Chauhan v. Surinder Singh (2013) வழக்கில், பூர்வீகக் கூட்டுக்குடும்பச் சொத்தில் தந்தைக்குப் பாகப்பிரிவினை மூலம் கிடைத்த பங்கில், அவரது மகனுக்குப் பிறப்புரிமை ஏற்படுவது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கியுள்ளது.
Arshnoor Singh v. Harpal Kaur (2019) வழக்கில், 1956-க்கு முன்பே உருவான பூர்வீகக் கூட்டுக்குடும்பச் சொத்துரிமைக்கும், 1956 சட்டத்தின் பிரிவு 8-ன்படி கிடைக்கும் சொத்துக்கும் உள்ள வேறுபாடு விளக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு சொத்து 1976-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது என்ற ஒரே காரணத்தால் அது தந்தையின் தனிச்சொத்து என்றோ, மகனுக்குப் பிறப்புரிமை உள்ள சொத்து என்றோ முடிவு செய்ய முடியாது. அந்தப் பாகப்பிரிவினைக்கு முன்பு சொத்தின் சட்டப்பூர்வத் தன்மை என்ன என்பதுதான் தீர்மானிக்கும்.
ஒரே பாகப்பிரிவினையில் கிடைத்த 3 சொத்துகளில் பேரனின் உரிமை என்ன?
ஒரு தந்தைக்கு ஒரே பாகப்பிரிவினைப் பத்திரத்தின் மூலம் 3 கூட்டுக்குடும்பச் சொத்துகள் கிடைத்ததாக வைத்துக்கொள்வோம். அவற்றில் ஒரு சொத்தை விற்பனை செய்யும்போது அவரது மகனும் விற்பனையாளராகக் கையெழுத்திட்டிருந்தால், அந்த மகனுக்கும் சொத்தில் உரிமை இருந்ததாகக் கருதி விற்பனை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். அதே மூல உரிமையின் அடிப்படையில் கிடைத்த மற்ற 2 சொத்துகளிலும் தனக்குப் பங்கு இருப்பதாக அந்த மகன் வாதிடலாம்.
ஆனால், ஒரு சொத்தின் விற்பனைப் பத்திரத்தில் விற்பனையாளராக இடம்பெற்றது மட்டுமே மற்ற 2 சொத்துகளிலும் உரிமையைத் தானாக உருவாக்காது. மூன்றும் சட்டப்படி கூட்டுக்குடும்பச் சொத்துகளா என்பதையும், விற்பனைப் பத்திரத்தில் உரிமை எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
எல்லா தாத்தா சொத்துகளிலும் பேரனுக்குப் பங்கு இல்லையா?
இல்லை. தாத்தாவின் சொத்து என்பதற்காக மட்டும் பேரனுக்குப் பிறப்புரிமை கிடைத்துவிடாது. அதேபோல, தாத்தாவின் சொத்தில் பேரனுக்கு எந்தச் சூழ்நிலையிலும் பங்கு கிடையாது என்றும் கூற முடியாது. சட்டப்படி தொடரும் இந்து கூட்டுக்குடும்பச் சொத்தில் பிறப்புரிமை இருக்கலாம். ஆனால், தாத்தா இறந்த பிறகு பிரிவு 8-ன்படி தந்தைக்குக் கிடைத்த தனிச்சொத்தில், தந்தை உயிருடன் இருக்கும்போது மகன் பிறப்புரிமை கோர முடியாது. தந்தையின் தனிச்சொத்தில் மகனுக்குப் பிறப்புரிமை இல்லாவிட்டாலும், தந்தை உயில் எழுதாமல் இறந்தால் சட்டப்பூர்வ வாரிசு என்ற அடிப்படையில் பங்கு கிடைக்கலாம். அது பிறப்புரிமையிலிருந்து வேறுபட்டது. தாத்தாவின் சொத்து என்பதல்ல முக்கியம்; அது கூட்டுக் குடும்பச் சொத்தாகத் தொடர்கிறதா அல்லது தனிச்சொத்தாக மாறிவிட்டதா என்பதுதான் முக்கியம். இந்தச் சட்ட வேறுபாட்டை விளக்குவதாகவே உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்.









