கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம், டிஎஸ்பி ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறியதுடன், தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டால் எஃப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியதாகத் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது எழுந்துள்ள புகார் ஏற்கெனவே அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் டிஎஸ்பி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் கள்ளக்குறிச்சி மாவட்டம்.கடந்த ஆகஸ்ட் 27-ந் தேதி (27.08.2026) பக்கத்து வீட்டுக்காரர்கள் சேர்ந்து என்னைத் தாக்கினார்கள். இதில் காயமடைந்த நான் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன்.
அப்போது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திலிருந்து ஜெயப்பிரகாஷ் என்ற போலீஸ்காரர் வந்து என்னிடம் வாக்குமூலம் வாங்கிச் சென்றார். ஆனால், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விழுப்புரத்தில் டிஐஜியைப் பார்க்கச் சென்றேன். அங்கு டிஐஜி உத்தரவின்பேரில் டிஎஸ்பியைப் பார்க்குமாறு அனுப்பி வைத்தார்கள்.
அதன்படி கடந்த அக்டோபர் 16-ந் தேதி டிஎஸ்பியைப் பார்க்கச் சென்றோம். நானும், எனது வழக்கறிஞரும், எனது மகனும் என 3 பேர் சென்றிருந்தோம். காலை 10 மணிக்குச் சென்ற எங்களை மதியம் 12.15 மணி வரை அழைக்கவே இல்லை.
பின்னர் 12.30 மணியளவில் டிஎஸ்பி உள்ளே அழைத்தார். நாங்கள் 3 பேரும் உள்ளே சென்றோம். முதலில் எனது வழக்கறிஞர் பேசத் தொடங்கினார். உடனே அவரை வெளியே போகச் சொல்லிவிட்டார். வழக்கறிஞரும் வெளியே சென்றுவிட்டார்.
எனது மகன் அங்கிருந்தபோது எங்களுடைய செல்போனை வாங்கிக்கொண்டார். பின்னர் எனது மகனைப் பார்த்து, ‘போடா வெளியே, போடா வெளியே’ என்று கூறினார். எனது மகன் வெளியே செல்லாமல் அங்கேயே இருந்தான்.
அப்போது, ‘நீ வெளியே போகவில்லை என்றால் உன் மீது பொய் வழக்குப் போட்டுவிடுவேன்’ என்று மிரட்டினார். இதனால் எனது மகனும் வெளியே சென்றுவிட்டான். அதன்பிறகு செல்போனில் அந்தப் பெண் என்னைத் திட்டிய வீடியோவைப் பார்த்துக்கொண்டே, ‘உன் கணவருக்கு என்ன வயது?’ என்று கேட்டார்.
எனது கணவருக்கு சுமார் 55 வயது இருக்கும் என்று சொன்னேன். அதற்கு அவர், ‘உனக்கு 40 வயதுதானே இருக்கும். உங்களுக்குள் 15 வயது வித்தியாசம் இருக்கிறது. உங்களுக்குப் பொருத்தமே இல்லை. அவருடன் எப்படிக் குடும்பம் நடத்துகிறாய்? உன் கணவருடன் படுக்காததால்தான் உன் உடல் அமைப்பு அழகாக இருக்கிறது. நீ வேண்டுமானால் என்னுடன் வந்து படு’ என்று மிகவும் ஆபாசமாகப் பேசினார்.
மேலும், ‘எதிர்த்தரப்பினரிடம் நிறையப் பணம் வாங்கியிருக்கிறேன். உனக்கும் பணம் தருகிறேன். உனக்காக எஃப்ஐஆர் பதிவு செய்கிறேன். நடவடிக்கையும் எடுக்கிறேன். ஆனால், நீ என்னுடன் வந்து படுக்க வேண்டும்’ என்று கூறினார்.
தொடர்ந்து, ‘உன் கணவர் என்ன வேலை செய்கிறார்?’ என்று கேட்டார். எனது கணவர் பெயிண்ட் அடிக்கும் கூலி வேலை செய்கிறார் என்று சொன்னேன்.
அதற்கு, ‘உன் கணவர் பெயிண்ட் அடித்துக் கூலி வேலை செய்வதால்தான் உனக்கு வருமானம் இல்லை. நகைகூட இல்லாமல் இருக்கிறாய். உன் கழுத்தில் ஒன்றுமே இல்லை’ என்று கூறினார்.
இப்படிப் பேசிக்கொண்டே ஒரு கையில் செல்போனைப் பார்த்துக்கொண்டு, இன்னொரு கையால் எனது நெஞ்சில் கை வைத்தார். அப்போது தட்டிவிட்டேன். அதற்கு ஒரு டிஎஸ்பி என்னை எப்படி இப்படி தட்டிவிடலாம்னு கேட்டார்..
மேலும், ‘வன்னி அரசு அமைச்சராக இருக்கும் வரை நான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்தான் இருப்பேன். கள்ளக்குறிச்சி மாவட்டம் எனது கட்டுப்பாட்டில்தான் இருக்கும். நீ எங்கே போய் ஒளிந்தாலும், எங்கே போய் மறைந்தாலும் உன்னைத் தேடிப் பிடிப்பேன். உன்னை விடமாட்டேன்’ என்று மிரட்டினார்.
வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் தொடர்ந்து பேசினார். பின்னர், ‘உனக்கு 20 நிமிடம் நேரம் தருகிறேன். எழுந்து வெளியே போ’ என்று கூறினார். நான் எழுந்ததும், ‘உட்கார், உட்கார்’ என்று மீண்டும் கூறினார்.
‘நான் உன்னிடம் கேட்டதையெல்லாம் வெளியே போய்ச் சொல்லக்கூடாது. யாரிடமும் சொல்லக்கூடாது. உன் வீட்டிலேயே உன்னைக் கொலை செய்வதற்கு எனக்குப் பக்கத்து வீட்டில் ஆள் இருக்கிறான்’ என்று மிரட்டினார். இப்படியெல்லாம் மிரட்டியதால் நான் யாரிடமும் சொல்லவில்லை. எனது வழக்கறிஞரையும் என்னையும் மிகவும் மோசமான, வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டினார். என்னால் இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நடந்ததை வெளியிலும் சொல்ல முடியவில்லை.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் தற்கொலை செய்துகொள்ள முயன்றேன். அதை எனது மகன் பார்த்துவிட்டு என்ன நடந்தது என்று கேட்டான். அதன் பிறகுதான் அவனிடம் நடந்தவற்றைச் சொன்னேன். பின்னர் எங்கள் வழக்கறிஞரிடமும் தெரிவித்தேன்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், மகளிர் அமைப்புகள், மனித உரிமை ஆணையம், டிஜிபி, டிஐஜி என அனைவருக்கும் புகார் அனுப்பியிருக்கிறேன். புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அந்தப் பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.









