கேஸ் அடுப்பில் தீ ஒரு பக்கம் மட்டும்தான் எரிகிறதா? லேசாக எடுத்துக்காதீர்கள், விபத்தாகலாம்!

By Minnambalam Desk

|

Published on 11 Nov 2026, 5:15 PM

kitchen tips to reduce your LPG gas use in cooking

வீட்டில் ஒரு நாளைக்குப் பல தடவை பயன்படுத்தும் கேஸ் அடுப்பில் சின்னக் கோளாறு தெரிந்தாலும் விட்டுவிடக் கூடாது. அடுப்பைப் பற்றவைத்ததும் தீ ஒரு பக்கம் மட்டுமே எரிந்தால், பர்னரில் அடைப்பு இருக்கலாம். சமையல் சரியாக வேகாமல் போவது ஒரு பக்கம் இருக்கட்டும்; கேஸ் வீணாவதும் உண்டு.

பர்னர் துளைகள் ஏன் அடைத்துக்கொள்கின்றன?

சமைக்கும்போது பொங்கி வழியும் பால், குழம்பு, எண்ணெய் எல்லாம் பர்னரின் சின்னச் சின்ன துளைகளில் படிந்து காய்ந்துவிடும். நாள்கணக்கில் அது அடைப்பாக மாறி, கேஸ் சீராக வெளியே வர முடியாமல் போகிறது.

ADVERTISEMENT

அதனால்தான் தீ ஒரு பக்கம் மட்டும் எரிகிறது. நீலமாக எரிய வேண்டிய தீ மஞ்சள் நிறத்துக்கு மாறினாலும், பாத்திரங்களின் அடியில் கரி பிடிக்கத் தொடங்கினாலும், அதுவும் அடைப்பின் அறிகுறியே.

பர்னர் மூடியும் ஈரமும் கூடக் காரணமாகலாம்

ADVERTISEMENT

அடுப்பைச் சுத்தம் செய்த பிறகு பர்னர் மூடியைச் சரியாகப் பொருத்தாமல் விட்டால், தீ சீராக எரியாது.

தண்ணீரில் கழுவிய பர்னரை முழுசாகக் காய வைக்காமல் அப்படியே மாட்டுவதும் தவறு. துளைகளில் தங்கிய ஈரம் கேஸ் வெளியேறுவதைத் தடுத்துவிடும்.

ADVERTISEMENT

இவை தவிர, வருடக்கணக்கில் பயன்படுத்துவதால் பர்னர் தேய்ந்துபோவதும், கேஸ் ஜெட்டில் அழுக்கு சேர்வதும் காரணங்களாக இருக்கலாம்.

வீட்டிலேயே செய்யக்கூடிய பராமரிப்பு

முதலில் கேஸ் ரெகுலேட்டரை அணைத்துவிடுங்கள். அடுப்பு நன்றாகக் குளிர்ந்த பிறகுதான் சுத்தம் செய்யத் தொடங்க வேண்டும். பர்னரை எடுத்துப் பார்த்து, மீண்டும் சரியான இடத்தில் பொருந்தியிருக்கிறதா என்று உறுதி செய்யுங்கள்.

துளைகளில் படிந்த அழுக்கை மென்மையான பிரஷ்ஷால் தேய்த்து எடுக்கலாம். அதிகமாகப் படிந்திருந்தால், வெதுவெதுப்பான சோப்புத் தண்ணீரில் பர்னரை ஊற வைத்துக் கழுவி, முழுவதுமாகக் காய வைத்த பிறகே மாட்டுங்கள்.

கேஸ் வாசனை வந்தால் என்ன செய்வது?

சுத்தம் செய்த பிறகும் தீ சீராக எரியவில்லை என்றால், நீங்களே பழுது பார்க்க முயற்சிக்காதீர்கள். அங்கீகரிக்கப்பட்ட கேஸ் மெக்கானிக்கை அழைப்பதுதான் சரி.

கேஸ் கசிவு வாசனை வந்தால், தீக்குச்சியோ லைட்டரோ பற்றவைக்கவே கூடாது. மின்சார சுவிட்சுகளைப் போடவும் வேண்டாம், அணைக்கவும் வேண்டாம். உடனே வீட்டைவிட்டுப் பாதுகாப்பாக வெளியே வந்து, வெளியிலிருந்து கேஸ் விநியோகஸ்தருக்குத் தகவல் கொடுங்கள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel