திருப்பெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் நேற்று நள்ளிரவு, டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்யப்பட்ட சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் உள்ள வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டின் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில், தினசரி நடைபெறும் மதுபான விற்பனைக்கான தொகையை ஊழியர்கள் வசூல் செய்து வங்கியில் டெபாசிட் செய்வது வழக்கம்.
அதேபோல் நேற்று பல்வேறு டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மதுபான பணத்தை வசூல் செய்துகொண்டு, ஓட்டுநர் அபிப் மற்றும் வசூல் ஊழியர் தாஸ் ஆகிய இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்தக் காரில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, இவர்களைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென காரை வழிமறித்து, ஓட்டுநர் அபிப் மற்றும் ஊழியர் தாஸ் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் வந்த காரையும், அதில் இருந்த பணத்தையும் கைப்பற்றிக்கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதற்கிடையே, கொள்ளையர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை காரை ஓட்டிச் சென்று, பின்னர் காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அதிலிருந்த பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் அபிப் மற்றும் ஊழியர் தாஸ் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட இந்தச் சம்பவம் திருப்பெரும்புதூர், ஒரகடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.









