வெங்காயச் சாறு தடவினா முடி வளருமா? ஹேர் கேர் நம்பிக்கைகளும் உண்மையும்!

By Minnambalam Desk

|

Published on 11 Nov 2026, 11:56 AM

முடி கொட்டுவது ஆண், பெண் என்று எல்லோருக்கும் பெரிய கவலை. விலை உயர்ந்த ஷாம்பு, சீரம், மூலிகை எண்ணெய் என்று எவ்வளவோ முயற்சி செய்வார்கள்.

“வெங்காயச் சாறு தடவினால் முடி வேகமாக வளரும்”, “தினமும் எண்ணெய் தேய்த்தால் உதிர்வு நின்றுவிடும்” என்று காலம்காலமாகச் சொல்லப்படும் நம்பிக்கைகளும் ஏராளம். இவற்றில் எது உண்மை, எதற்கு அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

ADVERTISEMENT

வெங்காயச் சாறு: வளர வைக்குமா?

வெங்காயச் சாற்றில் சல்பர் உள்ளிட்ட சில வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவை முடிக்கு நல்லது என்று சொல்லப்பட்டாலும், எல்லோருக்கும் புதிய முடி வளரும் என்பதற்கு உறுதியான மருத்துவ ஆதாரம் இல்லை.

ADVERTISEMENT

திட்டுத்திட்டாக முடி உதிரும் அலோபீசியா அரேட்டா (Alopecia Areata) பிரச்சினையில் நடந்த ஒரு சிறிய ஆய்வில் சில நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. ஆனால், அதை எல்லா வகையான முடி உதிர்வுக்கும் பொருத்திவிட முடியாது. சிலருக்கு வெங்காயச் சாறு தலைச்சருமத்தில் எரிச்சல், அரிப்பையும் உண்டாக்கலாம்.

எண்ணெய் தேய்த்தால் உதிர்வு நிற்குமா?

ADVERTISEMENT

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது நம் பாரம்பரிய வழக்கம்தான். ஆனால் அது முடி உதிர்வுக்கான நிரந்தரத் தீர்வு இல்லை.

தேங்காய் எண்ணெய் முடியின் புரத இழப்பைக் குறைத்து, முடி உடைவதைத் தடுக்க உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் மரபணு காரணமான வழுக்கையையும், ஹார்மோன் காரணமான உதிர்வையும் எண்ணெயால் முழுசாகச் சரிசெய்ய முடியாது.

அடிக்கடி குளித்தால் முடி கொட்டுமா?

தலைக்குக் குளிப்பதால்தான் முடி உதிர்கிறது என்பது தவறான புரிதல். எப்படியும் உதிரும் நிலையில் இருக்கும் முடிகள், குளிக்கும்போதும் சீப்பும்போதும் கையோடு வந்துவிடுகின்றன.

தலைச்சருமத்தின் தன்மைக்கு ஏற்ற ஷாம்புவைப் பயன்படுத்தி சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அதேநேரம், அதிகச் சூட்டில் ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது, முடியை இறுக்கிப் பின்னுவது போன்ற பழக்கங்கள் முடியைப் பாதிக்கலாம்.

உண்மையான காரணங்கள் என்ன?

  • மரபணு
  • தைராய்டு பாதிப்பு
  • இரும்புச்சத்துக் குறைபாடு
  • ஊட்டச்சத்துக் குறைபாடு
  • மனஅழுத்தம்
  • ஹார்மோன் மாற்றங்கள்

தொடர்ந்து அதிகமாக முடி கொட்டினால், வீட்டு வைத்தியங்களையே நம்பிக்கொண்டிருக்காமல் தோல் மருத்துவரைப் பாருங்கள். காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை எடுப்பதுதான் முடியைக் காப்பாற்றும் சரியான வழி.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel