தொகுதியில் குடிநீர் வசதி கேட்டு மனு கொடுக்க வந்தவரைத் தாக்கியதாக எழுந்த சர்ச்சையில் சிக்கியுள்ள தமிழக சட்டசபை துணை சபாநாயகர் ரவி சங்கர், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலில் இன்று (நவம்பர் 11) காலை மனமுருக பிரார்த்தனை செய்தார்.
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக மனு அளிக்கச் சென்றபோது துணை சபாநாயகர் ரவி சங்கர் தன்னைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டசபை துணை சபாநாயகர் பொறுப்பில் இருப்பவரே குறைகளைத் தெரிவிக்க வந்த ஒருவரைத் தாக்குவதா என்ற கேள்விகளும் எழுந்தன.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், கார்த்திக் குமார் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், தாக்குதல் புகார் தொடர்பாக சமாதானம் ஏற்பட்டது போன்ற விளக்கத்தை அளித்திருந்தார்.
ஆனால், அதன் பின்னர் அவர் வெளியிட்ட மேலும் ஒரு வீடியோவில், தன்னையும் தனது குடும்பத்தினரையும் மிரட்டி, சமாதானம் ஏற்பட்டதாகக் கூறும் வீடியோவைப் பதிவு செய்ய வைத்ததாகக் குற்றம்சாட்டினார். இதனால் துணை சபாநாயகர் ரவி சங்கர் மீதான சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது.
விஜய் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
இந்தச் சர்ச்சைக்கு மத்தியில் முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. துணை சபாநாயகர் ரவி சங்கர் மீதான தாக்குதல் புகார் ஒருபுறம் இருக்க, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச செய்திகள் அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த இரு விவகாரங்களும் ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை முதல்வர் விஜய் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விதம், கட்சிக் கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விஜய் அறிவுறுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பாம்பன் சுவாமிகளிடம் மனமுருக பிரார்த்தனை
இந்த நிலையில், துணை சபாநாயகர் ரவி சங்கர் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலுக்குச் சென்றார். அங்கு பாம்பன் சுவாமிகளை வழிபட்டு மனமுருக பிரார்த்தனை செய்தார். தம் மீதான தாக்குதல் புகார் குறித்து முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்ற சூழலில், ரவி சங்கர் பாம்பன் சுவாமிகள் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். இதன் பின்னர் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்க ரவி சங்கர் புறப்பட்டுச் சென்றார்.









