2003-ல் திமுக- காங்கிரஸ் கூட்டணி, கலைஞருடனான முதல் தொலைபேசி உரையாடல்.. சோனியா காந்தி எழுதியிருப்பது என்ன?

By Mathi

|

Published on 11 Nov 2026, 7:02 AM

Sonia Gandhi Autobiography-Kalaignar

திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக 2003-ஆம் ஆண்டு கலைஞருடன் நடத்திய பேச்சுவார்த்தையையும், ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான நினைவுகளால் தனக்கு ஏற்பட்ட மனப்போராட்டத்தையும் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமது ”Belonging: A Journey of Love” சுயசரிதையில் பதிவு செய்துள்ளார். கலைஞருக்கு முதன்முதலாக தொலைபேசியில் தாம் அழைத்தபோது நடுங்கியதாகவும், பின்னர் கலைஞர் மீது மரியாதை ஏற்பட்டதாகவும் சோனியா காந்தி எழுதியுள்ளார்.

சோனியா காந்தி, “”Belonging: A Journey of Love” புத்தகத்தில் எழுதி இருப்பதாவது: பாஜகவை எதிர்கொள்வதற்காக ஒன்றிணைய வேண்டிய அனைத்து அரசியல் சக்திகளிலும், தென்னிந்தியாவில் திமுகதான் மிக முக்கியமான கட்சியாக இருந்ததால், அக்கட்சியுடன் தொடர்பு கொள்வதற்கு அதுவே சரியான தருணமாக இருந்தது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது சகாக்களில் சிலர் திமுகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருந்ததை என்னால் உணர முடிந்தது. ஆனால், அந்த விஷயத்தை என்னிடம் எப்படித் தொடங்கிப் பேசுவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

1991-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற காலத்தில், ராஜீவைக் கொன்ற பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு திமுக தொண்டர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தனர். அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர் ராஜீவுக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருந்தனர்.

ADVERTISEMENT

ராஜீவ் படுகொலை குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஜெயின் ஆணையம், தமிழ் கொலையாளிகளுக்கு திமுக தலைவர் மறைமுகமாக ஆதரவளித்ததாகக் குற்றம்சாட்டி தனது அறிக்கையை வெளியிட்டபோது, 1997-ஆம் ஆண்டு பிரதமர் ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவைக்கூட காங்கிரஸ் வாபஸ் பெற்றிருந்தது.

அந்த வேதனையான நினைவுகள் மீண்டும் என்னை வாட்டத் தொடங்கியபோது, “நான் என்ன செய்ய வேண்டும்? அவர்களுடன் கைகோர்த்தால், அது ராஜீவுக்குச் செய்யும் துரோகமாகிவிடாதா?” என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன்.

ADVERTISEMENT

மறுபுறம், “பாஜகவுக்கு எதிரான நமது அணியை வலுப்படுத்துவதற்கு இந்தக் கூட்டணி அவசியம் என்பதை ராஜீவ் அறிந்திருந்தால், அவரே இந்தக் கூட்டணியை அமைக்க முன்வந்திருப்பாரோ?” என்றும் நினைத்துக்கொள்வேன்.

ஒரு பெரிய நோக்கத்திற்காக அவசரமாக முடிவெடுக்க வேண்டியிருந்தது.

திமுகவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்காக கலைஞருக்கு நான் முதன் முதலாக தொலைபேசியில் அழைத்தபோது, என் இதயம் படபடத்துக்கொண்டிருந்தது. நான் நடுங்கிக்கொண்டிருந்தேன்.

எனக்குத் தமிழ் தெரியாது. அவருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் அவர் அன்பாகப் பதிலளித்தார். அதன்பிறகு நாங்கள் நேரில் சந்தித்து, இரு கட்சிகளும் இணைந்து கூட்டணியாக செயல்படுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்.

காலப்போக்கில் கலைஞர் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது. கலைத்துறையில் எங்கள் இருவருக்கும் பொதுவான ஆர்வங்கள் இருப்பதைக் கண்டறிந்தேன்.

அவர் ஒரு கவிஞராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் இருந்தார். தனது பாரம்பரியம், தொன்மையான தமிழ் மொழி மற்றும் அதன் இலக்கியம் ஆகியவற்றில் பெருமை கொண்டிருந்தார். நாங்கள் நன்றாகப் பழகினோம்.

கூட்டணித் தலைவர்களுடன் தொடர்ச்சியாகப் பல சந்திப்புகளை நடத்திய பிறகு, எங்கள் மாநிலக் கட்சி நிர்வாகிகளுக்கும் அவர்களது கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டு விவரங்களை முடிவு செய்யவும், தேர்தல் பிரசாரத்தை ஒருங்கிணைக்கவும் எனது சகாக்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பேன்.

கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போதெல்லாம் நான் தலையிட வேண்டியிருக்கும். கூட்டணியை இறுதியாக உறுதிசெய்வதற்கான அடித்தளத்தை “AP” அமைத்துக் கொடுப்பார். அவருக்கு நிறைய தொடர்புகள் இருந்தன. நுட்பமாகக் கையாள வேண்டிய விவகாரங்களில் அவர் மிகவும் திறமையாகச் செயல்பட்டார். இறுதியாக, 2004-ஆம் ஆண்டு மே 4-ந் தேதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (United Progressive Alliance – UPA) உருவானது. இவ்வாறு சோனியா காந்தி எழுதி உள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel