விஜய்யின் தவெக கூட்டணியில் மோதல்? வைகோவுக்கு விசிக பதிலடி! இடதுசாரிகளும் ‘பாய்ச்சல்’!

By Mathi

|

Published on 11 Nov 2026, 3:46 AM

TVK Alliance- Vaiko

முதல்வர் விஜய்யின் தவெக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பகிரங்க விமர்சனங்களுக்கு மற்றொரு கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வைகோ, “பொழுது விடிந்த உடனே கூட்டணியில் இருக்கக்கூடிய இரண்டு கட்சித் தலைவர்கள், ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கக்கூடிய இரண்டு தலைவர்கள், சூரியன் கிழக்கே உதித்தால் போதும், ஜோசப் விஜய் ஆட்சியை அன்னைக்கு அட்டாக் பண்ணாமல் அவங்க காலைச் சாப்பாடு இறங்காது. தினமும் அட்டாக்தான். கூட்டணியில் இருந்துகிட்டு, ஒரு கட்சி மந்திரிசபையிலேயே இருந்துகிட்டு அட்டாக்தான். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் மறுமலர்ச்சி திமுகவும் இரண்டு கட்சிதான் இந்த அரசை விமர்சனம் செய்யாத கட்சிகள்” என விமர்சித்திருந்தார்.

ADVERTISEMENT

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் விசிகவை வைகோ பெயர் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தது பெரும் சர்ச்சையானது.

இது தொடர்பக விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் கூறுகையில், “அவதூறு என்பது வேறு, விமர்சனம் என்பது வேறு. தோழமையின் இலக்கணமே விமர்சனம் தான். ஆகவே, யார் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைக்கிறார்களோ, அவர்கள்தான் உண்மையான தோழமை சக்தியாக இருக்க முடியும் என்பதை காலம் மெல்ல மெல்ல அவர்களுக்கு உணர்த்தும்” என்றார்.

ADVERTISEMENT

வைகோ மீது சிபிஎம் சண்முகம் பாய்ச்சல்

இதேபோல சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், “ கூட்டணியில் இருந்தால் தவறுகளை சுட்டிக்காட்டக் கூடாது என்பது மதிமுகவின் அணுகுமுறையாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை அவர்கள் மக்களுக்கு சாதகமான திட்டங்களை, சட்டங்களை நிறைவேற்றினால் வரவேற்போம். மக்களுக்கு எதிரானது என்றால் வெளிப்படையாக பளிச்சென்று எங்களுடைய கருத்துக்களை அவர்களுக்கு தெரிவிப்போம். இது கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய நிலைப்பாடு. ஆகவே மறுமலர்ச்சி திமுக என்ன நிலைப்பாடு மேற்கொள்கிறதோ அதை நாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ எதிர்பார்த்தால் அது அவருடைய தவறு. நாங்கள் சுட்டிக்காட்டுகிற பிரச்சினைகளில் இது சரி, தவறு என்று வைகோ சொன்னால் அதற்கான விளக்கங்களை கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் எழுப்பக்கூடிய பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் எப்படி குறை சொல்லலாம்? என வைகோ போன்ற மூத்த அரசியல் தலைவர்கள் கேள்வி கேட்பது பொருத்தமல்ல. வைகோ கட்சியின் அணுகுமுறை அதுவாக இருந்தால், அது அவர்களுடைய அணுகுமுறை என்ற முறையில் தான் வைத்து கொள்ள வேண்டும். நீங்க ஏன் அப்படி கேள்வி கேட்கிறீங்க? என எங்களைப் பார்த்து கேள்வி கேட்கக்கூடாது” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel