சோனியா காந்தி ’சுயசரிதை’ சொல்லும் ரகசியங்கள்!

By Mathi

|

Published on 11 Nov 2026, 5:35 AM

Sonia Gandhi- Sonia Gandhi Autobiography

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள ”Belonging: A Journey of Love” (Sonia Gandhi) சுயசரிதையில், ராஜீவ் காந்தியுடனான காதல், இந்திரா காந்தி குடும்பத்தில் ஏற்பட்ட மோதல்கள், நெருக்கடி நிலை, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை, பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது, மன்மோகன் சிங் ஆட்சி, பிரதமர் நரேந்திர மோடியுடனான அரசியல் கருத்து வேறுபாடுகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

சோனியா காந்தியின் இந்த சுயசரிதை நேற்று நவம்பர் 10-ந் தேதி வெளியானது. இத்தாலியில் பிறந்து இந்தியாவின் நேரு குடும்பத்தில் மருமகளாக நுழைந்து, நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றது வரையிலான தனது வாழ்க்கைப் பயணத்தை சோனியா விவரித்துள்ளார்.

ADVERTISEMENT

கேம்பிரிட்ஜில் தொடங்கிய ராஜீவ் காதல்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் படித்துக்கொண்டிருந்தபோது ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்த அனுபவத்தை சோனியா தனது சுயசரிதையில் விவரித்துள்ளார். கேம்பிரிட்ஜில் உள்ள வர்சிட்டி உணவகத்தில் நண்பர்களுடன் அமர்ந்திருந்த ராஜீவ் காந்தியைப் பார்த்ததும் அவர்மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக எழுதியுள்ளார்.

கிறிஸ்டியன் வான் ஸ்டீக்லிட்ஸ் என்ற பொதுவான நண்பர் மூலம் இருவரும் அறிமுகமாகினர். ராஜீவ் காந்தி தம்மிடம் கைகுலுக்கியபோது இதயம் வேகமாகத் துடித்ததாகவும், கைகள் நடுங்கியதாகவும் சோனியா நினைவு கூர்ந்துள்ளார். பின்னர்தான் ராஜீவ் காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேரன் என்பது தமக்குத் தெரியவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ராஜீவ் காந்தியுடனான திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான தகவலை இத்தாலியில் இருந்த பெற்றோரிடம் தெரிவிப்பதற்கு முன்பே ஊடகங்கள் வெளியிட்டுவிட்டதாக சோனியா எழுதியுள்ளார். இத்தாலியில் உணவருந்திக்கொண்டிருந்த அவரது குடும்பத்தினர் வானொலியில் இந்தச் செய்தியைக் கேட்டுத் தெரிந்துகொண்டனர். இதனால் தந்தை வருத்தமடைந்ததாகவும், பின்னர் பெற்றோருக்குக் கடிதம் எழுதி மன்னிப்புக் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திரா காந்தி வீட்டுக்கு மருமகளாக வந்த சோனியா

ராஜீவ் காந்தி, சோனியா இருவருக்கும் 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண ஏற்பாடுகளின்போது இந்திரா காந்தி தமக்கு நகைகளை வழங்கியதுடன், புடவை தேர்வு செய்வதிலும் உதவியதாக சோனியா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் தாயார் தேஜி பச்சன் தமக்குப் புடவை கட்டுவதற்குக் கற்றுக்கொடுத்ததாகவும் நினைவுகூர்ந்துள்ளார். இத்தாலியில் வளர்ந்த தாம் இந்தியக் குடும்ப வாழ்க்கையுடன் பழகிய அனுபவங்களையும் சோனியா விவரித்துள்ளார்.

குடும்ப வாழ்க்கையில் சந்தித்த தனிப்பட்ட துயரங்களில் ஒன்றாக, பிறந்த சிறிது நேரத்திலேயே முதல் குழந்தையை இழந்த சம்பவத்தையும் சோனியா தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன்பு ராஜீவ் சொன்ன அறிவுரை

இந்தியாவில் 1975-ஆம் ஆண்டு நெருக்கடி நிலை அறிவிக்கப்படுவதற்கு முன்பு, பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலக வேண்டும் என்று ராஜீவ் காந்தி அறிவுறுத்தியதாக சோனியா தெரிவித்துள்ளார். ஆனால் பதவி விலகினால் காங்கிரஸ் கட்சி சிதறிவிடும் என்றும், ஆர்எஸ்எஸ் அரசியல் ஆதாயம் பெறும் என்றும் இந்திரா காந்தி அஞ்சியதாக எழுதியுள்ளார். நெருக்கடி நிலைக்காலத்தில் சஞ்சய் காந்தியின் அரசியல் செல்வாக்கு அதிகரித்தது, கட்டாயக் கருத்தடை நடவடிக்கைகள், குடிசைகள் இடிப்பு உள்ளிட்ட சர்ச்சைகளையும் சோனியா தனது சுயசரிதையில் விவரித்துள்ளார்.

சஞ்சய் காந்தி மறைவு.. மேனகாவுடன் குடும்ப மோதல்

இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி 1980-ஆம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு மேனகா காந்தி அரசியலில் நுழைய விரும்பியதாகவும், இதனால் இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் சோனியா எழுதியுள்ளார்.

காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் நடத்திய கூட்டத்தில் மேனகா காந்தி பங்கேற்றதும், Surya இதழ் விற்பனை தொடர்பான விவகாரமும் குடும்ப உறவில் விரிசலை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேனகா காந்தி வீட்டைவிட்டு வெளியேறிய இறுதி மோதலின்போது தாமும் ராஜீவ் காந்தியும் அங்கு இல்லை என்பதையும் சோனியா தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் புளூ ஸ்டார்.. கண்ணீர் விட்ட இந்திரா

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் 1984-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய ராணுவம் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பான காட்சிகளைப் பார்த்த இந்திரா காந்தி கண்ணீர் விட்டதாக சோனியா எழுதியுள்ளார். அது வேதனையாலும் வருத்தத்தாலும் ஏற்பட்ட கண்ணீர் என்று தாம் கருதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைக்குப் பிறகு தாங்கள் வசித்த வீட்டின் அறை ஒன்றில் கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் சோனியா தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி குடும்பம் எதிர்கொண்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை வெளிப்படுத்தும் சம்பவமாக இதைப் பதிவு செய்துள்ளார்.

இந்திரா படுகொலை.. சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை

இந்திரா காந்தி 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி தனது பாதுகாவலர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் சோனியா காந்தியின் குடும்ப வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையில் காங்கிரஸ் கட்சியினர் சிலர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததையும் சோனியா தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு விசாரணை ஆணையங்கள், குழுக்கள் அமைக்கப்பட்டபோதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைப்பதில் சிக்கல்கள் நீடித்ததாக எழுதியுள்ளார்.

ஷா பானு வழக்கு.. ராஜீவிடம் கேள்வி கேட்ட சோனியா

விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணான ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின்னர், ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு 1986-ஆம் ஆண்டு புதிய சட்டம் கொண்டுவந்தது. இந்த முடிவு முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதிப்பதாக எழுந்த விமர்சனங்கள் குறித்து ராஜீவ் காந்தியிடமே தாம் கேள்வி எழுப்பியதாக சோனியா தெரிவித்துள்ளார்.

மத நம்பிக்கைகளுக்கும் பெண்களின் உரிமைகளுக்கும் இடையே சமநிலை ஏற்படுத்த முயன்றதாக ராஜீவ் காந்தி தம்மிடம் விளக்கியதாகவும் சோனியா எழுதியுள்ளார்.

ராஜீவ் படுகொலை.. முன்பே எச்சரித்த ராகுல்

தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி 1991-ஆம் ஆண்டு மே 21-ந் தேதி தேர்தல் பிரசாரத்தின்போது மனித வெடிகுண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு 2 மாதங்களுக்கு முன்பே ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு குறித்து ராகுல் காந்தி கவலை தெரிவித்ததாக சோனியா தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.

தந்தையுடன் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றிருந்த ராகுல், பாதுகாப்பை மேம்படுத்தாவிட்டால் ”இறுதிச் சடங்கிற்காகத் திரும்ப வேண்டிய நிலை ஏற்படும்” என்று எச்சரித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இரவில் சென்னையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த தகவலைப் பிரியங்கா தெரிவித்தபோது, என்ன நடந்தது என்பதைத் தம்மால் உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் சோனியா நினைவுகூர்ந்துள்ளார்.

ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படையின் (SPG) பாதுகாப்பை வி.பி.சிங் அரசு திரும்பப் பெற்றது குறித்தும் சோனியா கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவுக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போதுமான அளவில் கவனிக்கப்படவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு.

இத்தாலிக்குத் திரும்ப மறுத்த சோனியா

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், மேலும் ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் இத்தாலிக்குத் திரும்பிவிடுமாறு சோனியாவின் சகோதரி வலியுறுத்தியுள்ளார். ஆனால் இந்தியாதான் தமது வீடு என்றும், குழந்தைகள் வளர்ந்த நாட்டைவிட்டு வெளியேற முடியாது என்றும் சோனியா மறுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு பலரும் வலியுறுத்தியபோதும், குடும்பத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த உயிரிழப்புகளால் அரசியலில் ஈடுபடுவதற்கு சோனியா தயக்கம் காட்டியுள்ளார்.

பாபர் மசூதி இடிப்பைப் பார்த்து அழுத சோனியா

அயோத்தியில் பாபர் மசூதி 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்ட சம்பவம் தம்மை மிகவும் பாதித்ததாக சோனியா காந்தி எழுதியுள்ளார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்தபோது தாம் கண்ணீர் விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும், அதன் அரசியல் விளைவுகளும் சுயசரிதையில் இடம்பெற்றுள்ளன.

பகவத் கீதையைப் படித்து அரசியலுக்கு வந்த சோனியா

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் பல ஆண்டுகளாக நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்த சோனியா, 1998-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்கலாமா என்ற குழப்பத்தில் இருந்தபோது பகவத் கீதையைப் படித்ததாக சோனியா எழுதியுள்ளார். பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்ய வேண்டும் என்ற கிருஷ்ணரின் அறிவுரை தமது குழப்பத்துக்குப் பதிலாக அமைந்ததாகவும், அதன் பின்னரே அரசியலில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவரம்.. மோடி அரசு மீது குற்றச்சாட்டு

குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற மதக் கலவரங்கள் பற்றியும் சோனியா எழுதியுள்ளார். கலவரக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், உதவி கோரிய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உதவ முயன்றபோதும் மாநில நிர்வாகத்திடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். கலவரத்தைத் தூண்டியதில் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தளம் தொடர்புடைய சிலருக்குப் பங்கு இருந்ததாகவும் சோனியா குற்றம்சாட்டியுள்ளார். இவை சோனியா தனது சுயசரிதையில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்.

பிரதமர் பதவியை மறுத்தது ஏன்?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சோனியா காந்தி பிரதமராகப் பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர் பிரதமர் பதவியை ஏற்க மறுத்து, மன்மோகன் சிங்கைப் பிரதமராகத் தேர்வு செய்தார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதால், தமது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் அஞ்சியதாக சோனியா தெரிவித்துள்ளார். இதனால் தாம் பிரதமர் பதவியை ஏற்கக்கூடாது என்று இருவரும் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரதமர் பதவியை ஏற்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியபோது, ஒருகட்டத்தில் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும், இதை அறிந்த ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்ததாகவும் சோனியா தெரிவித்துள்ளார். ஆனால் பிரதமர் பதவியை ஏற்க வேண்டாம் என்ற முடிவைத் தேர்தலுக்கு முன்பே எடுத்துவிட்டதாகவும் அவர் விளக்கியுள்ளார். தாம் வெளிநாட்டில் பிறந்தவர் என்பதால் பிரதமராகப் பதவியேற்க அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அனுமதிக்கவில்லை என்ற தகவலையும் மறுத்துள்ளார்.

மன்மோகன் சிங் ஆட்சியில் நிழல் பிரதமரா?

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அரசின் முக்கிய முடிவுகளை சோனியா காந்திதான் எடுத்தார் என்றும், அவர் நிழல் பிரதமராகச் செயல்பட்டார் என்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்தக் குற்றச்சாட்டுகளை சோனியா தனது சுயசரிதையில் மறுத்துள்ளார். மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் நிர்வாகத்தில் தாம் தலையிடவில்லை என்றும், பிரதமர் அலுவலகத்தின் ரகசியக் கோப்புகளைப் பார்வையிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசு நிர்வாகத்தை மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியின் பணிகளைத் தாமும் கவனித்ததாக சோனியா விளக்கியுள்ளார்.

இதே காலகட்டத்தில் பிரணாப் முகர்ஜிக்கும் ப.சிதம்பரத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அரசின் உயர்மட்டத் தலைமையில் மாற்றம் தேவை என்று பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்ததாகவும், இதன் மூலம் அவருக்குப் பிரதமராக வேண்டும் என்ற விருப்பம் இருந்ததைத் தாம் புரிந்துகொண்டதாகவும் சோனியா எழுதியுள்ளார்.

அன்னா ஹசாரே போராட்டத்தின் பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ்?

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு அன்னா ஹசாரே தலைமையில் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் மறைமுகமாக ஆதரித்ததாகப் பின்னாளில் சிலர் தெரிவித்ததைச் சோனியா தனது சுயசரிதையில் சுட்டிக்காட்டியுள்ளார். ந்த இயக்கம் காங்கிரஸ் அரசுக்கு எதிரான அதிருப்தியைத் தீவிரப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும், போராட்டம் முழுவதையும் பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் நடத்தியது என்பது தனியாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அல்ல.

நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்க்கும் மோடி

நாடாளுமன்ற நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போது பிரதமர் மோடியும் தாமும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொள்வதாகவும், ஆனால் மோடி தம்மை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்ப்பதாகத் தாம் உணர்வதாகவும் சோனியா எழுதியுள்ளார். மோடியின் அரசியல் கொள்கைகளுக்கும் தமது மதச்சார்பின்மை, சமூகநீதி சார்ந்த அரசியல் நிலைப்பாடுகளுக்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் மோடி எளிய குடும்பப் பின்னணியில் இருந்து அரசியலில் உயர்ந்தவர் என்பதையும் சோனியா சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயசரிதை வெளியீட்டிலும் சர்ச்சை

சோனியா காந்தியின் சுயசரிதையை இந்தியாவில் முதலில் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் வெளியிடத் திட்டமிட்டிருந்தது. ஆனால் புத்தகத்தில் சில திருத்தங்களையும் நீக்கங்களையும் செய்யுமாறு பதிப்பகம் பரிந்துரைத்ததாகவும், அதற்கு சோனியா ஒப்புக்கொள்ளாததால் பதிப்பகம் விலகியதாகவும் தகவல்கள் வெளியாகின.

எனினும், திருத்தங்களை ஏற்க மறுத்ததால்தான் வெளியீட்டிலிருந்து விலகியதாகக் கூறப்படுவதை பெங்குயின் மறுத்துள்ளது. பின்னர் ஹார்பர்காலின்ஸ் நிறுவனம் இந்திய வெளியீட்டைப் பொறுப்பேற்றது. சோனியாவின் சுயசரிதை வெளியானதைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் தலைவர்கள், பாபர் மசூதி இடிப்பை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களே விமர்சித்திருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளனர். சோனியாவின் தனிப்பட்ட நினைவுகளை அரசியல் சர்ச்சையாக்குவதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel