புதிய தவெக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடையும் நிலையில் இதுவரை 2,993 டெண்டர்களை ரத்து செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “தவெக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 6 மாதங்களில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 2,993 அரசு டெண்டர்களை ரத்து செய்திருப்பது என்பது நாம் கவனமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று. ஒரு புதிய பாலம் கட்ட வேண்டும் என்றாலோ, குடிநீர்க் குழாய் பதிக்க வேண்டும் என்றாலோ, மின்சாதனங்கள் வாங்க வேண்டும் என்றாலோ தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளி கோரும் நடைமுறைக்கே ஒப்பந்தப் பணி அல்லது டெண்டர் என்று பெயர். புதிய ஆட்சி அமைந்ததும் முந்தைய அரசு இறுதி செய்த ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்ய தவெக அரசு முடிவு எடுத்தது.
பல திட்டங்களின் மதிப்பீடு தேவையின்றி மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அரசு கஜானாவிற்கு ஏற்படும் வீண் விரயத்தைத் தடுக்கவே மறுஆய்வு நடத்தப்படுவதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆட்சி மாற்றத்திற்கு சற்று முன்பு மிகக் குறுகிய கால அவகாசத்தில் வெளியிடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட அரசு டெண்டர்கள் வெளிப்படைத்தன்மை விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி அவசர அவசரமாக ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் சுமார் 2,993 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதால் பல முக்கியத் துறைகளின் பணிகள் ஸ்தம்பித்துப் போயிருக்கின்றன. இதனால் வளர்ச்சித் திட்டங்கள் தற்போது தடுமாறிக்கொண்டிருப்பதைத் தவெக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மின்வாரியக் கொள்முதல், புதிய துணைமின் நிலையங்கள் மற்றும் மின் விநியோகக் கட்டமைப்பு சார்ந்த ஒப்பந்தங்களும் மின் கொள்முதல் உட்பட ரத்து செய்யப்பட்டுள்ளன. குறைந்த விலைக்கு 20 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒரு யூனிட் மின்சாரத்திற்கு இப்போது 41.50 பைசா வீதம் 5 முறை டெண்டர் கோரப்பட்டுவிட்டது. அதேபோல சென்னை மாநகரில் சாலைகள் சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைப்புப் பணிகள் மற்றும் ரூ.284 கோடி மதிப்பிலான நவீன நடைபாதைத் திட்டங்கள் முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் சுமார் 21 முக்கிய சாலை ஒப்பந்தங்கள் உட்பட, பல்வேறு மாவட்டங்களில் வாகன ஓட்டிகளுக்கான சாலையோர ஓய்வு மையங்கள் அமைக்கும் திட்டங்கள் மற்றும் வெளிவட்டச் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வெளிப்படைத்தன்மை இல்லை அல்லது அதில் பல்வேறு முறைகேடுகள் இருக்கின்றன என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், அதைக் காரணம் காட்டி வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல், புதிய ஒப்பந்தங்கள் கோராமல், புதிய பணிகளைத் தொடங்காமல், புதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் அரசே இன்றைக்குத் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
இந்தத் தடுமாற்றத்தை எப்படித் தடுக்க வேண்டும்? மின்னல் வேகத்தில் ஒரு புதிய அரசு வரும்போது, அது மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது முன்னுக்குப் பின் முரணாக அரசாணைகள் வெளியிடப்பட்டு, பின்னர் அவை ரத்து செய்யப்படுகின்றன.
உதாரணத்திற்கு, தேர்தல் வாக்குறுதியில் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து பேசும்போது, 5 ஏக்கர் நிலம் இருந்தால் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் இருந்தால் 50% தள்ளுபடி செய்வோம் என்றும் கூறினார்கள். ஆனால், மூன்று நாட்களுக்கு முன்பு வரை நான்காவது முறையாக அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பணி நியமனம் என்றாலும் சரி, புதிய திட்டங்களின் கட்டுமானப் பணிகளுக்கென்றாலும் சரி, அரசே அந்த ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளார்கள். இது ஏற்கனவே இருந்த நடைமுறை என்றாலும் கூட, தற்போதைய பணிச்சுமையில் இந்தப் பணிகளுக்கான கட்டமைப்புகளை எப்படி உருவாக்கப் போகிறோம் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பதைப் போல, இந்த அரசு குற்றம் பார்க்கக்கூடிய பார்வையில்தான் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அனைத்து நிகழ்வுகளுமே ஒரு தவறான பாதையில்தான் செல்கின்றன.
சுருக்கமாகச் சொன்னால், 6 மாத ஆட்சியில் நாடு 6 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது. எதற்காக இந்த நடவடிக்கை, எதற்காக டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறித்து முதலமைச்சர் நேரடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும் என்பதில்லை. குறைந்தது முதலமைச்சர் அலுவலகத்திலிருந்தாவது ஏன் இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன, எதற்காக அரசாணை வெளியிடப்பட்டது, எதற்காக அந்த அரசாணை வாபஸ் பெறப்பட்டது, இந்தப் பணி நியமனங்கள் எதற்காகச் செய்யப்பட்டன என்பதைப் பற்றிய அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
அரசு பணித் தேர்வு எழுத 5 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் கொடுத்துவிட்டு, பணிகள் அனைத்தையும் அவுட்சோர்சிங் முறையில் கொடுத்துவிட்டார்கள். அவுட்சோர்சிங் முறையில் கொடுத்துவிட்டு அரசுப் பணியே இல்லை என்னும் போது தேர்வர்களால் என்ன செய்ய முடியும்? அரசுப் பணியே இல்லை என்றால் தேர்வு ஆணை எதற்கு?
ஆகவே, இந்த தவெக அரசு ஒரு ‘ரத்து அரசாங்கமாக’ உள்ளது. திட்டங்கள் ரத்து, அரசாணைகள் ரத்து, டெண்டர்கள் ரத்து… ஒட்டுமொத்தத்தில் மக்களின் மகிழ்ச்சியே ரத்து என்பதுதான் தவெக அரசின் சாதனையாக உள்ளது.” என காட்டமாக விமர்சித்துள்ளார்.









