சென்னையில் நேற்று (நவம்பர் 10) ஒரே நாளில் அடுத்தடுத்து 2 கொலை சம்பவங்கள் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை ராஜா அண்ணாமலைபுரம், KVB கார்டனைச் சேர்ந்த ஐயப்பன் மகன் சிவகுமார் (27), நேற்று (நவம்பர் 10) மாலை E-4 அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள ‘U’ வளைவு அருகே தனது ஆட்டோவில் அமர்ந்திருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் சிவகுமாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
காயமடைந்த சிவகுமார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக சிவகுமாரின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் E-4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட லோகநாதன், வீரா, அஜித், ராமு ஆகிய 4 பேரும் சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சிவகுமாருக்கும் லோகநாதனுக்கும் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அடிதடி ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததும், இதன் காரணமாக லோகநாதன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிவகுமாரை தாக்கியதும் தெரியவந்தது.
இதனிடையே ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவகுமார், இரவு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காசிமேடு கொலை
சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரைச் சேர்ந்த தீனன் மகன் தீபத் என்ற சளி தீபத் (29), கடந்த மாதம் தனது நண்பர்களான ஜெயசீலன், சுராஜ், கண்ணன், தேசப்பன் மற்றும் சிலருடன் எல்லையம்மன் கோயில் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது தீபத்துக்கும் ஜெயசீலனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தீபத், மது பாட்டிலால் ஜெயசீலனின் தலையில் தாக்கினார். உடனிருந்த நண்பர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 10) மாலை காசிமேடு மீனவர் சங்க ஐக்கிய சபை பின்புறம் தீபத், தனது நண்பர்களான ஜெயசீலன், ஜெயசீலனின் மச்சான் ஜெயச்சந்திரன், சுதாகர் மற்றும் சிவா ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் திடீரென ஆத்திரமடைந்த ஜெயச்சந்திரன், தான் வைத்திருந்த கத்தியால் தீபத்தை தாக்கினார். இதில் தீபத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த N-4 மீன்பிடித் துறைமுகம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தீபத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தீபத்தின் மனைவி கலையரசி அளித்த புகாரின் அடிப்படையில் N-4 மீன்பிடித் துறைமுகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜெயசீலன், ஜெயச்சந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு சென்னை பெருநகர போலீசார் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









