அர்னாப், முரசு வரிசையில் ‘அக்வான்’ புயல்? நவ. 13-ல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

By Mathi

|

Published on 11 Nov 2026, 11:43 AM

Cyclone Akvan-Bay of Bengal

வங்கக்கடலில் அர்னாப், முரசு புயல்களைத் தொடர்ந்து 3-வதாக ‘அக்வான்’ புயல் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 13-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக வலுப்பெற்றால் ‘அக்வான்’ (Akvan) என்று பெயரிடப்படும்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, நவம்பர் 13-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது அடுத்தடுத்த நாட்களில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக, நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் இது வலுப்பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நவம்பர் 17-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாவதற்கான வாய்ப்பு 67 முதல் 100 சதவீதம் என்ற பிரிவில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக உருமாறுமா? என்பது கணிக்கப்படவில்லை.

‘அக்வான்’ பெயரை வழங்கியது எந்த நாடு?

பொதுவாக வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் வழங்கிய பெயர்கள் வரிசையாகச் சூட்டப்பட்டு வருகின்றன. அர்னாப் என்ற பெயரை வங்கதேசமும், முரசு என்ற பெயரை இந்தியாவும் வழங்கின. இவற்றைத் தொடர்ந்து அடுத்த புயலுக்கு ‘அக்வான்’ என்ற பெயரை ஈரான் வழங்கியுள்ளது. எனவே, வங்கக்கடலில் புதிதாக உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறினால் அதற்கு ‘அக்வான்’ என்று பெயரிடப்படும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டைத் தாக்குமா?

புதிய புயல் உருவானால் அது தமிழ்நாட்டை நோக்கி வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமெட் வெளியிட்டுள்ள கணிப்பில், புதிய வானிலை அமைப்பு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வங்கக்கடலிலேயே திசைமாறிச் செல்லவும் வாய்ப்புள்ளது. மியான்மர் கடற்கரையை நோக்கி நகர்வதற்கான சாத்தியக்கூறும் இருப்பதாக ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் சூழலில், அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இந்த இரண்டு நாட்களிலும் மீனவர்கள் அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எல் நினோ காலத்திலும் 3-வது புயலா?

பொதுவாக எல் நினோ காலத்தில் வங்கக்கடலில் புயல்கள் உருவாகும் வாய்ப்பு குறையக்கூடும். ஆனால் அர்னாப், முரசு புயல்களைத் தொடர்ந்து மேலும் ஒரு புயல் உருவாகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடல் நீரின் வெப்பம், காற்றின் போக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எல் நினோ காலத்திலும் புயல்கள் உருவாகலாம். அர்னாப், முரசு ஆகிய இரண்டு புயல்களைத் தொடர்ந்து ‘அக்வான்’ புயலும் உருவானால், குறுகிய காலத்தில் வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் 3-வது புயலாக அது அமையும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel