பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் E20 திட்டத்துக்காக மக்காச்சோளத்தை ஆலைகள் அள்ளிக்கொண்டு போகும் போக்கு கூடிக்கொண்டே வருகிறது. இதன் தாக்கம் நம் சமையலறை வரை வந்துவிடுமோ என்ற பயம் இப்போது எழுந்திருக்கிறது.
கோழிப்பண்ணைகளுக்கு முக்கியத் தீவனமான மக்காச்சோளத்தின் விலை, கடந்த ஆண்டைவிட கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
எத்தனால் ஆலைகளின் பார்வை மக்காச்சோளத்தின் மேல்
2026-27-ஆம் ஆண்டுக்கான எத்தனாலை வாங்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் ஒப்பந்தப் புள்ளி (Tender) கோரியுள்ளன. அதற்கு உற்பத்தியாளர்கள் அனுப்பிய விநியோக முன்மொழிவுகளில் 59 சதவீதம் மக்காச்சோளத்தை நம்பியவை. கடந்த ஆண்டு இது 45 சதவீதம்தான்.
நிறுவனங்கள் மொத்தம் 11 பில்லியன் லிட்டர் எத்தனால் வாங்கத் திட்டமிட்டிருக்கின்றன. ஆனால் உற்பத்தியாளர்களிடமிருந்து வந்து குவிந்த முன்மொழிவுகளோ 19.35 பில்லியன் லிட்டர். தேவையைவிட வரத்து கணிசமாக அதிகம் என்பதிலிருந்தே, இந்தத் துறையில் மக்காச்சோளத்துக்கு எவ்வளவு கிராக்கி என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
கோழிப்பண்ணையாளர்களுக்குப் பெரும் சுமை
கோழித் தீவனத்தில் ஏறக்குறைய 60 சதவீதம் மக்காச்சோளம்தான். அதன் விலை ஏறினால், பண்ணை நடத்துபவர்களின் செலவு நேரடியாக எகிறும். அந்தச் சுமை கடைசியில் முட்டை, கோழிக்கறி விலையில் எதிரொலிக்க வாய்ப்பு அதிகம்.
இதற்கு மேல், இந்த கரீஃப் பருவத்தில் மக்காச்சோள விளைச்சல் சுமார் 15 சதவீதம் குறையலாம் என்றும் கணிக்கப்படுகிறது. வரத்து குறைந்து, தேவை கூடிக்கொண்டே போனால் விலை இறங்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?
கரும்பு கைவிட்டதும் ஒரு காரணம்
கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டதால், கரும்புச் சாறு மற்றும் சில வகை மொலாசஸைக் கொண்டு எத்தனால் தயாரிப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் உற்பத்தியாளர்கள் மக்காச்சோளம் போன்ற தானியங்களை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள்.
உணவுக்கா, எரிபொருளுக்கா?
மக்காச்சோளத்துக்கு உணவுத் துறையும் எத்தனால் துறையும் இப்போது போட்டிபோடும் நிலை உருவாகிவிட்டது. உணவுத் தேவைக்கும் எரிபொருள் இலக்குக்கும் இடையே சரியான சமநிலையைக் காக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
மக்காச்சோளம் இறுதியில் யாருக்கு, எவ்வளவு ஒதுக்கப்படுகிறது, சந்தை விலை எப்படி இருக்கிறது, உணவுப் பயன்பாட்டுக்கு எவ்வளவு முன்னுரிமை தரப்படுகிறது என்பவைதான் அடுத்த கட்ட விலை நிலவரத்தைத் தீர்மானிக்கும் என்று பொருளாதார மற்றும் வேளாண் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.









