தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில் ஆடுகளைப் போல மனித உயிர்கள் வெட்டி சாய்க்கப்படுகிறது. இனியாவது தவெக அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில், “தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்து ஆறு மாதம் கடந்துள்ளது. முன்னர் சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘ஆறு மாத காலத்தில் ஒரு சிறப்பான ஆட்சியைத் தமிழக மக்களுக்குக் கொடுப்போம்’ என்று சொன்னார். ஆனால், அவர்கள் சிறப்பான ஆட்சியை கொடுக்கவில்லை; துயரமான ஆட்சியைத் தான் நாட்டு மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் கொலை நடக்காத நாளே இல்லை. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதைச் சுட்டிக்காட்டியுள்ளன. தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தெரிவித்து இருக்கின்றன.
தமிழகத்தில் தொடர்ந்து நாள்தோறும் கொலைகள் நடக்காத நாளே இல்லை. தீபாவளி அன்று மட்டும் சுமார் 11 கொலைகள் நடைபெற்றுள்ளதாகப் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதை நான் தெரிவித்ததற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜமோகன், ‘இந்த தீபாவளியின் போது தான் கொலை நடக்கிறதா? இதற்கு முன்னர் திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு கொலைகள் தீபாவளி அன்று நடைபெற்றன என்று பட்டியலிடுவது அழகல்ல’ என்று கூறுகிறார்.
ஒரு அரசு இத்தகைய சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்; அதற்குத் தான் அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து இருக்கிறார்கள். பொருளாதாரத்தை ஒப்பிட்டுப் பார்க்கலாம்; ஆனால், கொலைச் சம்பவங்களை கடந்த ஆண்டோடு ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல. இந்த ஆட்சி அமைந்த பிறகு, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. கொலைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்குக் காவல்துறையைப் பார்த்தால் இன்று அச்சமே இல்லை. சர்வ சாதாரணமாக ஆடு வெட்டுவது போல் மனித உயிர்களை வெட்டிச் சாய்க்கும் காட்சியை இந்த தவெக ஆட்சியில் பார்க்க முடிகிறது. நேற்று கூட கிரீன்வேஸ் சாலையில் தமிழக முதல்வர் விஜய் குடியேறினார். இந்த நிலையில், பட்டப்பகலில் அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பகுதி நீதிபதிகள், அமைச்சர்கள் குடியிருக்கும் பகுதி. இந்தப் பகுதியிலேயே மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால், தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் எப்படி இந்த அரசு பாதுகாப்பு கொடுக்கும் என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்கும் நிலையில் இருக்கின்றோம். அந்த அளவிற்குச் சட்டம் ஒழுங்கு தவெக ஆட்சியில் சீர்கெட்டுள்ளது. இதையெல்லாம் முதல்வர் கண்டும் காணாமல் இருப்பதுதான் வேதனை அளிக்கிறது. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.
ரவுடியைப் பிடிக்கப் போகும் இன்ஸ்பெக்டரை அந்த ரவுடி சட்டையைப் பிடித்து இழுக்கிறான். ஒரு இன்ஸ்பெக்டருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? அவர்கள் எப்படிச் சாலையில் நடமாட முடியும்? பொதுமக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? ஒரு எஸ்.எஸ்.ஐ-யை வெட்டிச் சாய்க்கின்றனர்; அவர் இறந்துவிட்டார். இப்படி காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. இது மிகவும் வேதனையான சம்பவம்.
திட்டமிட்டு ஊடகங்களில் செய்தி வர வேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை. இனியாவது இந்த அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் சூழல் உருவாக வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில், “மெகா தொடர் போல நீளும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை – மக்களே முன்வந்து CLIMAX எழுதுவதற்குள் முதல்வர் விழித்துக் கொள்வாரா? அல்லது இது தான் தவெகவின் ஆறுமாத கால ஆட்சியின் சாதனை என பெருமையாக மார்தட்டிக் கொள்வாரா?
ஒருபுறம் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் ஆலோசனை, மறுபுறம் நூற்றுக்கணக்கான ரவுடிகள் காவல்துறையினரால் கைது என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த அதே நேரத்தில் சென்னை அபிராமபுரம், காசிமேடு, செம்பியம் என நேற்று மட்டும் மூன்று படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தீபாவளி தினத்தன்று நடைபெற்ற படுகொலைச் சம்பவங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களுடன் ஒப்பிட்டு பதிலளித்த பட்டிமன்ற அமைச்சர், இடைவெளியின்றி அடுத்தடுத்த நாட்களில் அரங்கேறிக் கொண்டிருக்கும் படுகொலைகளுக்கு எந்த ஆண்டின் புள்ளி விவரங்களை தேடிக் கொண்டிருக்கிறார்?
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டிய பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னையை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் திரைப்படங்களின் நாள் வசூல் கணக்கை பார்ப்பது போல, ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கும் நடைபெற்று கொண்டிருக்கும் கொலைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறாரோ? என்ற சந்தேகம் தான் எழுகிறது.
தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அதிரடி காட்டி ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக “BUILD UP” செய்தி வெளியிட்ட அதே நேரத்தில் சென்னையில் ரவுடிகள் கொலை என்ற செய்தியும் இணைந்து வருவதை பார்க்கும் போது, காவல்துறை மீதான அதீத நம்பிக்கை, சட்டம் ஒழுங்கை போலவே சீர்கெட்டு போயிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
அன்றாடம் அரங்கேறும் வெட்டு குத்து, பழிக்குப் பழி, போன்ற படுகொலைச் சம்பவங்களால் ரத்தக்களறியாகவும், ரண கொடூரமான மாநிலமாகவும் தமிழகத்தை மாற்றி, பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் தங்களின் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவல நிலையை உருவாக்கியது தான் தவெகவின் ஆறு மாத கால ஆட்சியின் ஒரே சாதனையாக அமைந்திருக்கிறது.
எனவே, மக்களின் பாதுகாப்பு தான் அரசின் அடிப்படை கடமை அதனை பேணி காக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உண்டு. அதை விடுத்து வெற்று அறிக்கைகளும், செய்திக் குறிப்புகளும் வெறும் ஏட்டு சுரைக்காய் தான் என்பதை உணர்ந்து சட்டம் ஒழுங்கை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.”என பதிவிட்டுள்ளார்.









