ஜாமீன் மனு : அவசர வழக்காக விசாரிக்க அன்பில் மகேஷ் கோரிக்கை!

By Kavi

|

Published on 11 Nov 2026, 1:34 PM

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முறையீடு செய்துள்ளார். 

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

இந்த நிலையில் அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்தார். ஆனால் அன்பில் மகேஷ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதாக கூறிய சிறப்பு நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

அவருக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலும் நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் அன்பில் மகேஷ் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுமனு தாக்கல் செய்துள்ளார். 

தொடர்ந்து, உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி வில்சன், அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று முறையீடு செய்தார். 

ADVERTISEMENT

இதைக் கேட்ட நீதிபதி இந்த மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகள் இன்றைக்குள் முடித்து விட்டால் வழக்கை நாளைக்கு விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த சூழலில் வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் வில்சன் கேட்டுக்கொண்டார். 

இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel