தொகுதி பிரச்சனை குறித்து மனு கொடுக்க வந்தவரை இரவில் தாக்கிய தவெக எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் துறையூரில் இன்று (நவம்பர் 11) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் கார்த்திக் குமார். அவர் த.வெ.கவிலும் உறுப்பினராக உள்ளார். துறையூரில் உள்ள அவர் வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அவர் பல முறை துறையூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் அவரது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தீபாவளியன்று கார்த்திக் மணச்சநல்லூரில் உள்ள துணை சபாநாயகரும், துறையூர் எம்.எல்.ஏவுமான ரவி சங்கரை சந்தித்து வார்டு பிரச்சனை தொடர்பாக மனு அளிக்க சென்றுள்ளார். ஆனால் துணை சபாநாயகர் ரவி சங்கர், மனுவை வாங்காமல் கார்த்திக்கை ஆபாசமாக திட்டி அவரை சரமாரியாக தாக்கி உள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து துணை சபாநயகர் ரவி சங்கர், கார்த்திக்கை மிரட்டி அது போல் சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என தன் அருகில் அமர வைத்து வீடியோவையும் வெளியிட வைத்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான கார்த்திக் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதுவரை துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் மனு அளிக்க வந்த நபரை தாக்கிய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் துறையூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் துறையூர் முன்னாள் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது துணை சபாநாயகரை கண்டித்தும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
துணை சபாநாயகர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் இல்லை என்றால் நாங்கள் வழக்கு பதிவு செய்ய வைப்போம், அவர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்களை திரட்டி மிகப்பெரும் போராட்டங்களில் ஈடுபடுவோம் என திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தெரிவித்தார்.









