உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது ஏன்? தமிழக அரசு விளக்கம்!

By Kavi

|

Published on 11 Nov 2026, 3:00 PM

ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது? அதை நடத்தாதது ஏன் என்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ADVERTISEMENT

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் பாஸ்கரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், “ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறித்த காலத்தில் வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகளை முடித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில், “5 ஆண்டு பதவி காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்த வேண்டும் என்ற சட்டப்பிரிவு மீறப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டித்ததும் சட்டவிரோதமானது” என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தமிழக அரசு சார்பில், “2026 ஜனவரி மாதம் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இது 2027ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின்னர் தான் வார்டு மறுவரையறை செய்யப்படும். அதைத்தொடர்ந்து தான் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின்னர் வார்டு மறு வரையறை செய்ய 120 நாட்களும், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய 30 நாட்களும், தேர்தலுக்கு முந்தைய நடவடிக்கைகளுக்கு 90 என மொத்தம் 240 நாட்கள் தேவைப்படும்.

2021 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடியும் வரை எதுவும் செய்ய முடியாது. தற்போது தங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது” என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டும் இதுபோன்று பிரச்சினைகள் வருவது ஏன்? உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடியப்போகிறது என்று தெரிந்தும், மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel