சந்தை சரிந்தால் உங்கள் PF பணம் என்னாகும்? EPFO முதலீட்டின் உண்மை நிலவரம்

By Minnambalam Desk

|

Published on 11 Nov 2026, 5:07 PM

ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறதே, அந்த PF பணம் எங்கே போகிறது? பங்குச்சந்தை திடீரென்று சரிந்தால், வருடக்கணக்கில் சேர்த்து வைத்த PF சேமிப்புக்கும் ஆபத்து வருமா? பல ஊழியர்களின் மனதில் இருக்கும் கேள்வி இதுதான். EPFO பணத்தை எப்படி முதலீடு செய்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால், இந்தப் பயத்தில் பெரும்பகுதி விலகிவிடும்.

உங்கள் PF பணம் எங்கெல்லாம் போடப்படுகிறது?

ஊழியர்களின் PF தொகையைப் பாதுகாப்பதும், அதற்கு நல்ல வருமானம் கிடைக்கச் செய்வதும்தான் EPFO-வின் நோக்கம். அதனால் முழுப் பணத்தையும் ஒரே இடத்தில் போடாமல், பிரித்து முதலீடு செய்கிறது. அரசு மற்றும் பிற கடன் பத்திரங்கள், பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் என்று பல வழிகளில் பணம் பிரிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

கடன் பத்திரங்கள் மூலம் நிலையான வருமானம், பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் நீண்டகால வளர்ச்சி என்ற இரண்டுக்கும் இங்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

85:15 என்ற கணக்கு என்ன?

ADVERTISEMENT

குறிப்பிட்ட முதலீட்டு முறையின்படி, 85 சதவீதத் தொகை கடன் பத்திரங்களிலும், மீதமுள்ள 15 சதவீதம் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளிலும் போடப்படுகிறது.

இந்த 15 சதவீதத்தையும் ஏதோ ஒரு நிறுவனத்தின் பங்குகளை நேரடியாக வாங்கிப் போடுவதில்லை. நிஃப்டி 50, சென்செக்ஸ் போன்ற குறியீடுகளைப் பின்தொடரும் ETF எனப்படும் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (Exchange-Traded Funds) வழியாகவே முதலீடு நடக்கிறது.

ADVERTISEMENT

சந்தை விழுந்தால் PF குறையுமா?

பங்குச்சந்தை சரியும்போது ETF முதலீடுகளின் மதிப்பு குறையலாம்தான். ஆனால், அந்தச் சரிவு அப்படியே உங்கள் EPFO கணக்கில் தெரியாது. காரணம், உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம், ஒட்டுமொத்த முதலீட்டு வருமானம் மற்றும் நிதியின் உபரித் தொகையை வைத்துத்தான் முடிவு செய்யப்படுகிறது.

இப்போது PF வட்டி எவ்வளவு?

2025-26 நிதியாண்டுக்கான PF வட்டி விகிதம் 8.25 சதவீதம். இதை EPFO-வின் மத்திய அறங்காவலர் குழு பரிந்துரைக்கும்; மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.

ஆகவே, சில நாள் சந்தை ஏற்ற இறக்கத்தைப் பார்த்து மட்டும் PF பாதுகாப்பாக இருக்கிறதா இல்லையா என்று முடிவுக்கு வர முடியாது. PF என்பது ஓய்வுக்காலத்துக்கான நீண்டகாலச் சேமிப்பு. அவசரத் தேவை இல்லாதபோது, இடையில் பணத்தை எடுக்காமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel