தினமும் சமையலில் போடும் கொத்தமல்லியை வைத்து, வாசனை ஊரைத் தூக்கும் பாரம்பரியத் துவையல் செய்யலாம். இட்லி, தோசைக்கு அரைக்கும் வழக்கமான கொத்தமல்லி சட்னி மாதிரி இல்லை இது. உளுந்தம் பருப்பு, தனியா, பூண்டு, காய்ந்த மிளகாய் என்று நிறையச் சேர்த்து அரைப்பதால், சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
என்னென்ன வேண்டும்?
கொத்தமல்லி – அரை கிலோ
உளுந்தம் பருப்பு – 100 கிராம்
முழு தனியா – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 15
பூண்டு – 15 பல்
புளி – சிறிதளவு
பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு, உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு
முதலில் மசாலாவைத் தயார் செய்யுங்க
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, பெருங்காயத்தைப் பொரித்துத் தனியாக எடுத்து வைத்துவிடுங்கள். அதே எண்ணெயில் உளுந்தம் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு நன்றாக வறுக்கவும்.
வறுத்தவை ஆறியதும் மிக்ஸியில் போட்டுக்கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
கொத்தமல்லியை வதக்குவதுதான் முக்கியம்
சுத்தம் செய்த கொத்தமல்லியை, கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றிய வாணலியில் வதக்குங்கள். இலைகள் நன்றாகச் சுருண்டு வரும்வரை வதக்கி, அப்படியே ஆற விடுங்கள்.
ஆறியதும், ஏற்கெனவே அரைத்து வைத்த மசாலாவுடன் சேர்த்து, தேவையான உப்பும் கொஞ்சம் தண்ணீரும் விட்டுத் துவையல் பதத்துக்கு அரைத்தால் போதும்.
நல்லெண்ணெய் தாளிப்புதான் வாசனைக்கு உயிர்
கடைசியாக வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த துவையலில் கொட்டிக் கலந்துவிடுங்கள்.
அவ்வளவுதான், பாரம்பரிய கொத்தமல்லித் துவையல் தயார்! சூடான சாதத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட்டுப் பாருங்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகக் கட்டிக்கொடுக்கவும் இந்தத் துவையல் சாதம் நன்றாகவே கைகொடுக்கும்.









