பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேட்டில் தவறு செய்த ஒருவரை கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
அதில், ”நூலகங்களுக்கு புத்தகம் கொள்முதல் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்து 2024 ஆம் ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதில்லை.
நூல்கள் கொள்முதல் செய்வதில் நடைபெற்ற முறைகேடு பெரியார் அறிவுலகத்துக்கான 2026 ஆம் ஆண்டின் நூல் கொள்முதல் உத்தரவுகளுடன் மட்டுமில்லாமல், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் வரை நீள்கிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக நூல்கள் கொள்முதலில் முறைகேடு நடைபெற்று வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
எனவே தவறு செய்த அதிகாரிகள் மற்றும் மோசடி பதிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் எம்.டி.சுமதி அமர்வு நேற்று (நவம்பர் 10) விசாரித்தது.
அப்போது பொது நூலகத்துறை இயக்குனர் ஷஜீவனா காணொளி மூலம் ஆஜரானார்.
அவரிடம் நீதிபதிகள், ”2024 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை படித்தீர்களா. புத்தகம் எப்படி கொள்முதல் செய்யப்படுகிறது?” என்று கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பொது நூலகத்துறை இயக்குனர், நான் நவம்பர் 10ம் தேதி (நேற்று) காலையில் தான் பொறுப்பேற்றேன். நூல்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக அரசும், லஞ்ச ஒழிப்பு துறையும் விசாரித்து வருகிறது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று பதிலளித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், “கொள்முதல் செய்யப்படும் புத்தகங்களை பரிந்துரைப்பது யார்? அந்த புத்தகங்களை அங்கீகரிப்பது யார்? கொள்முதல் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ள அதிகாரிகள் யார்? உள்ளிட்ட விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டே பொது நூலகத்துறை இயக்குனர் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதிகாரிகளை காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது” என்று உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து அரசு தரப்பில், “கொள்முதல் தொடர்பான அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு தயாராக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நீதிபதிகள், ‘முந்தைய உத்தரவிலேயே முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் இதுவரை வழக்கு பதியவில்லை. அடையாளம் தெரியாத நபர்கள் என்று கூறி வழக்குப்பதிவு செய்திருக்கலாமே. அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கி கணக்கை முடக்கி இருக்கலாமே. அதன் வங்கி கணக்கை முடக்காமல் வைத்திருப்பது ஏன்?” என்று கேள்விகளை எழுப்பினர்.
தொடர்ந்து 2024 உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தி இருந்தால் இது போன்ற முறைகேடுகளை தவிர்த்து இருக்கலாமே என்று கூறிய நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அதிகாரிகள் அவமதிப்பு செய்துள்ளனர்’ என்றும் குறிப்பிட்டனர்.
ஆட்சிகள் தான் மாறுகின்றன. அதிகாரிகள் அப்படியேதான் இருக்கின்றனர் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ”இந்த மோசடியை எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்தகங்களை தயாரித்துள்ளனர். ஏஐ – யை பயன்படுத்தி போலி புத்தகங்களை தயாரித்துள்ளனர்.
இதற்கு முடிவு கட்டியே ஆக வேண்டும். எனவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த புத்தக கொள்முதல் தொடர்பான அனைத்து விபரங்களையும், அதிகாரிகளின் பட்டியலையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
அகல்விளக்கு பதிப்பகம் மற்றும் அதன் உரிமையாளரின் வங்கி கணக்குகளை உடனே முடக்க வேண்டும்” என்று கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில், ”பெரியார் அறிவுலக நூலகத்துக்கு 112 பேர் கொண்ட பரிந்துரைக் குழுவை புத்தகத்தை பரிந்துரைத்திருக்கிறது. வரும் நவம்பர் 16ஆம் தேதிக்குள் வழக்குப்பதிவு செய்து விடுவோம்” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
அகல்விளக்கு பதிப்பகத்தின் நான்கு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகள், ”இந்த விவகாரத்தில் பரிந்துரை குழுவையே குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. இதுவரை குற்றம் செய்த ஒருவரை கூட கண்டுபிடிக்க முடியவில்லையா. புத்தகம் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் அரசு சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.









