சர்வதேச சிலை கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள சுபாஷ் சந்திர கபூர் தொடர்பான 41 வழக்குகளின் குறிப்பேடுகள் காணாமல் போன விவகாரத்தில், 7 வழக்குகளின் அசல் குறிப்பேடுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக காவல்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் 20 வழக்குகளின் குறிப்பேடுகள் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 11 வழக்குகளின் குறிப்பேடுகளை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம சங்கர் நமது மின்னம்பலத்திடம் கூறியதாவது: சுபாஷ் சந்திர கபூர் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஹரியானா, பஞ்சாப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறிவிட்டார்.
சர்வதேச அளவில் சிலை கடத்தலில் ஈடுபட்டதாக இவர் மீது அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வழக்குகள் உள்ளன. இவருடைய மகன், மகள் ஆகியோருக்கும் சிலை கடத்தல் விவகாரங்களில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் இதுவரை இந்தியாவுக்கு வரவில்லை.
அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கோயிலில் 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி சிலைகள் திருடப்பட்ட சம்பவம், சுபாஷ் சந்திர கபூர் தொடர்பான முக்கியமான வழக்குகளில் ஒன்றாகும். இதுகுறித்து ஏப்ரல் 14-ந் தேதி உடையார்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்ல முயன்ற சுபாஷ் சந்திர கபூர், 2011-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2012-ஆம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, மறுநாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் சிறை
தமிழகத்தில் கோயில் சிலைகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக அந்தந்த காவல் நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தன. இவற்றை ஒருங்கிணைத்து விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து கும்பகோணத்தில் சிலை கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சிலை கடத்தல் வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. சுபாஷ் சந்திர கபூர் தொடர்பான வழக்குகளும் இங்கு விசாரிக்கப்பட்டன.
சுத்தமல்லி கோயில் சிலை கடத்தல் வழக்கை விசாரித்த கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், 2022-ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
ஏற்கெனவே சிறையில் இருந்த காலத்தைக் கழித்துக் கணக்கிட்டபோது, 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதியே அவர் விடுவிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் தமிழகத்தில் நிலுவையில் இருந்த மற்ற சிலை கடத்தல் வழக்குகளால் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டார்.

41 வழக்குகளின் குறிப்பேடுகள் மாயம்
சுபாஷ் சந்திர கபூர் தொடர்பான சிலை கடத்தல் வழக்குகளில் முக்கியமான பிரச்சினையாக 41 வழக்குகளின் குறிப்பேடுகள் காணாமல் போன விவகாரம் உருவெடுத்தது.
காவல்துறை விசாரணை விவரங்கள், சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் அடங்கிய இந்தக் குறிப்பேடுகள் காணாமல் போனது குறித்து வழக்கறிஞர் ‘யானை’ ராஜேந்திரன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விவரங்களைப் பெற்றார். முன்னாள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மூலமாகவும் தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. காணாமல் போன ஆவணங்கள் குறித்து காவல்துறை அளித்த விளக்கங்கள் திருப்திகரமாக இல்லாத நிலையில், விவகாரம் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது.
இந்த வழக்கில் தமிழக காவல்துறை அதிகாரிகள் தற்போது தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், 1983 முதல் 2010 வரையிலான 27 ஆண்டுகளில், 15 மாவட்டங்களில் உள்ள 32 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் குறிப்பேடுகள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 7 வழக்குகளின் அசல் குறிப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 20 வழக்குகளின் குறிப்பேடுகள் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன. 2 வழக்குகளின் குறிப்பேடுகள் காவல் கண்காணிப்பாளர்களின் உத்தரவின்படி அழிக்கப்பட்டுள்ளன. ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 11 வழக்குகளின் குறிப்பேடுகளை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கோப்புகளை அழிக்க உத்தரவிட்ட அதிகாரிகள் யார்?
குற்ற வழக்குகள் தொடர்பான குறிப்பேடுகளை அழிப்பதற்கு காவல்துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதே தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வி.
குற்றவியல் நடைமுறைச் சட்டம், காவல்துறை விதிகள், காவல் நிலைய ஆணைகள் ஆகியவற்றில் இதற்கு என்ன அனுமதி உள்ளது? முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் கடமை. முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட வழக்குகளின் ஆவணங்களைக்கூட பாதுகாக்க வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை ஆவணங்களைப் பாதுகாப்பதற்கான பதிவேட்டு அமைப்புகள் உள்ளன. அப்படியிருக்கும்போது சிலை கடத்தல் போன்ற முக்கியமான வழக்குகளில் குறிப்பேடுகளை அழிக்க முடிவு செய்தது எப்படி?
அந்த உத்தரவுகளைப் பிறப்பித்த காவல் கண்காணிப்பாளர்கள் யார்? எந்தச் சட்ட அதிகாரத்தின் அடிப்படையில் குறிப்பேடுகளை அழிக்க அனுமதித்தனர்? என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது.
குறிப்பேடுகள் காணாமல் போனதாகக் கூறுவதுடன் இந்த விவகாரத்தை முடித்துவிட முடியாது. அவை எப்படிக் காணாமல் போயின, யாருடைய உத்தரவின்பேரில் அழிக்கப்பட்டன, இதில் தொடர்புடைய அதிகாரிகள் யார் என்பதைக் கண்டறிய குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
கபூரை ஜெர்மனிக்கு அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு
இதனிடையே சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, என். குணசேகரன் ஆகியோர் கடந்த செப்டம்பர் 8-ந் தேதி தீர்ப்பளித்தனர். HCP (MD) No.366 of 2026 என்ற வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
உடையார்பாளையம் காவல் நிலையத்தில் 2008-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 65-வது குற்ற வழக்கில் விசாரிப்பதற்காக மட்டுமே சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனி இந்தியாவிடம் ஒப்படைத்தது.
இந்தியா–ஜெர்மனி நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் 19-வது பிரிவின்படி, குறிப்பிட்ட வழக்கிற்காக ஒப்படைக்கப்பட்ட ஒருவரை, ஜெர்மனியின் அனுமதியின்றி ஒப்படைப்புக்கு முந்தைய மற்ற வழக்குகளில் விசாரிக்கவோ, தொடர்ந்து காவலில் வைத்திருக்கவோ முடியாது.
தமிழகத்தில் நிலுவையில் உள்ள மேலும் 10 வழக்குகளில் கபூரை விசாரிக்க ஜெர்மனியிடம் அனுமதி கோரப்பட்டது. இதில் 4 வழக்குகளுக்கு ஜெர்மனி அனுமதி மறுத்தது. மற்ற 6 வழக்குகளுக்கான அனுமதி நிலுவையில் இருந்தது.
அனுமதி கோரிக்கை நிலுவையில் இருப்பதை, அனுமதி வழங்கப்பட்டதாகக் கருத முடியாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். குற்றச்சாட்டுகள் எவ்வளவு தீவிரமானவையாக இருந்தாலும், நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீற முடியாது என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து சுபாஷ் சந்திர கபூரை மற்ற வழக்குகளுக்காகத் தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதற்குச் சட்டப்பூர்வ அடிப்படை இல்லை என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அவரை ஜெர்மனிக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன்?
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும் மத்திய அரசும் மேல்முறையீடு செய்யவில்லை. சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு மேல்முறையீடு செய்யுமாறு கோரிக்கை அனுப்பியிருந்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் மூன்றாவது நபராக உச்சநீதிமன்றத்தை அணுகினேன்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் எனக்கு என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பப்பட்டது. அரசுகள் மேல்முறையீடு செய்யாததால்தான் நீதிமன்றத்தை அணுகியதாக விளக்கம் அளித்தேன்.
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் யோகேஸ்வரன் வாதங்களை முன்வைத்தார். சுபாஷ் சந்திர கபூருக்கு வயதாகிவிட்டதைக் காரணமாகக் கூறி அவரை வெளிநாட்டுக்கு அனுப்புவது தொடர்பான வாதங்களும் முன்வைக்கப்பட்டன.
ஆனால் எங்களைப் பொறுத்தவரை கபூரின் வயது முக்கியமல்ல. இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட கோயில் சிலைகளை மீட்பதுதான் முக்கியம். அவருடைய குடும்பத்தினரிடம் இருப்பதாகக் கூறப்படும் சிலைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கபூரை ஜெர்மனிக்கு அனுப்பிவிட்டால் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர முடியுமா என்ற கேள்வி உள்ளது. எனவே கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் நடவடிக்கைகள் முடிவடையும் வரை அவரை இந்தியாவிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. அதேபோல, சிலை கடத்தல் வழக்குகளின் குறிப்பேடுகள் காணாமல் போனது குறித்தும் முறையான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்கு அனுப்புவது, காணாமல் போன வழக்கு ஆவணங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது ஆகிய இரண்டு முக்கியமான பிரச்சினைகளும் தற்போது உச்சநீதிமன்றத்தின் முன்பு உள்ளன. இவ்வாறு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம சங்கர் நமது மின்னம்பலத்திடம் தெரிவித்தார்.









