மணிப்பூரில் இனக்கலவரத் தீ பற்றி எரியக் காரணமான உத்தரவைப் பிறப்பித்து, உச்சநீதிமன்றத்தின் கடும் விமர்சனத்துக்குள்ளான முன்னாள் நீதிபதி எம்.வி. முரளிதரனை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் தலைவராக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு நியமித்துள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றிய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். தமிழ்வாணன், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக கடந்த மார்ச் 22-ந் தேதி காலமானார். இதனால் ஆணையத்தின் தலைவர் பதவி காலியாக இருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் சமூகநீதித் துறை நவம்பர் 10-ந் தேதி வெளியிட்ட அரசாணை எண் 109 மூலம், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.வி. முரளிதரனை ஆணையத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதைக் கண்காணிப்பது, அவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளைக் கொண்ட அமைப்பு இந்த மாநில ஆணையம்.
நீதிபதி முரளிதரன் நியமனத்துக்கு எதிர்ப்பு
இந்த ஆணையத்துக்குத் தலைவராக நீதிபதி முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக், “மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டு மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்டவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி. முரளிதரன்.
பழங்குடி மக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் தீர்ப்பு அளித்து உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட முரளிதரனை தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமித்திருக்கிறது தவெக அரசு” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “ மணிப்பூரில் கலவரம் 3 ஆண்டாக நடக்கிறது. இதற்கு காரணமான நீதிபதி முரளிதரன் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார். இந்த RSS நபருக்கு தமிழ்நாட்டு SC/ST கமிசன் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. ஆட்சி நடத்துவது ஆளுனரா? முதல்வரா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
மணிப்பூர் வன்முறையும் நீதிபதி முரளிதரன் உத்தரவும்
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினர், தங்களைப் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரி வந்தனர். இதற்கு குக்கி உள்ளிட்ட மலைவாழ் பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
மெய்தி சமூகத்தினருக்குப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்கப்பட்டால், மலைப்பகுதிகளில் நில உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு உள்ளிட்ட தங்களுக்கான அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் பாதிக்கப்படும் என்பது பழங்குடியின அமைப்புகளின் முக்கியமான அச்சமாக இருந்தது.
இந்தப் பின்னணியில் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி. முரளிதரன், மெய்தி சமூகத்தினரின் பழங்குடியினர் அந்தஸ்துக் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு 2023-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி மாநில அரசுக்கு உத்தரவிட்டார். இதுதான் மணிப்பூரில் ஏற்கெனவே நிலவிய இனக் குழுக்களுக்கு இடையேயான பதற்றத்தை அதிகப்படுத்தியது.
மே 3-ந் தேதி வெடித்த வன்முறை
நீதிபதி முரளிதரனின் உத்தரவுக்கு எதிராக அனைத்து மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் (ATSUM), 2023-ம் ஆண்டு மே 3-ந் தேதி Tribal Solidarity March என்ற பெயரில் பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணிக்கு அழைப்பு விடுத்தது. மணிப்பூரின் மலை மாவட்டங்களில் நடைபெற்ற இந்தப் பேரணிகளில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் பங்கேற்றனர். மெய்தி சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்பதே அவர்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது.
இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து சுராசந்த்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மோதல்கள் வெடித்தன. பின்னர் இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் மலை மாவட்டங்களுக்கும் வன்முறை பரவியது.
மெய்தி, குக்கி உள்ளிட்ட சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல்களில் வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கிராமங்கள் தாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கொலைகள், கடத்தல்கள், ஆயுதத் தாக்குதல்கள் என மணிப்பூர் பல்வேறு கொடூரங்களைச் சந்தித்தது.
306 பேர் பலி.. பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
மணிப்பூர் வன்முறையில் கடந்த ஆகஸ்ட் 31-ந் தேதி வரையிலான கணக்கின்படி 306 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 49 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
2026 மார்ச் மாதம் வரையிலான அரசுத் தகவல்களின்படி 58,821 பேர் வன்முறையால் இடம்பெயர்ந்துள்ளனர். 7,894 வீடுகள் முழுமையாகவும், 2,646 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் வன்முறை தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தங்களது சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை. நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களின் மறுவாழ்வு, சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையின்மை, பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன.
இவ்வளவு பெரிய மனிதாபிமானப் பேரழிவின் தொடக்கத்தில் நீதிபதி முரளிதரன் பிறப்பித்த மெய்தி சமூகத்தினரின் பழங்குடியினர் அந்தஸ்து தொடர்பான உத்தரவு முக்கியப் பங்கு வகித்தது.
உச்சநீதிமன்றமே கொந்தளித்தது
மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகள் 2023-ம் ஆண்டு மே 17-ந் தேதி அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிபதி முரளிதரன் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சமூகங்களைச் சேர்ப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுகள் ஏற்கெனவே வகுத்துள்ள சட்டக் கோட்பாடுகளுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு முரணானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், “We gave time to Justice Muralidaran to remedy his error and he did not. We have to take a strong view against it now” என்று குறிப்பிட்டார்.
அதாவது, “நீதிபதி முரளிதரன் தனது தவறைத் திருத்திக்கொள்வதற்கு அவகாசம் வழங்கினோம். ஆனால் அவர் திருத்தவில்லை. இப்போது இதை நாங்கள் கடுமையாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “It is clear if high court judges do not follow constitutional bench judgments, then what should we do…” என்றும் உச்சநீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது.
“உயர்நீதிமன்ற நீதிபதிகளே அரசியல் சாசன அமர்வுகளின் தீர்ப்புகளைப் பின்பற்றாவிட்டால், நாங்கள் என்ன செய்வது?” என்பதே இந்தக் கேள்வியின் பொருள்.
உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிப்பது குறித்தும் உச்சநீதிமன்றம் பரிசீலித்தது. ஆனால் அந்த உத்தரவை எதிர்த்து மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு நிலுவையில் இருந்ததால், அப்போது தடை விதிக்கவில்லை.
முரளிதரனின் உத்தரவை நீக்கிய மணிப்பூர் உயர்நீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தின் கடும் விமர்சனத்துக்குப் பின்னர், நீதிபதி முரளிதரன் பிறப்பித்த உத்தரவு மணிப்பூர் உயர்நீதிமன்றத்திலேயே மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. 2024-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி நீதிபதி கோல்மெய் கைபுல்ஷில்லு, மெய்தி சமூகத்தினருக்குப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மாநில அரசுக்கு அறிவுறுத்தியிருந்த முக்கியமான பகுதியை நீக்கினார். அந்த உத்தரவு சட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதன் மூலம், உச்சநீதிமன்றத்தின் கடும் வாய்மொழி விமர்சனத்துக்குள்ளான முரளிதரனின் உத்தரவின் முக்கியப் பகுதி, பின்னர் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தாலேயே நீக்கப்பட்டது.
மணிப்பூரிலிருந்து கொல்கத்தாவுக்கு இடமாற்றம்
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி முரளிதரனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் 2023-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் இந்த இடமாற்றத்துக்கு ஒப்புதல் அளித்தார். அப்போது நீதிபதி முரளிதரன், மணிப்பூர் உயர்நீதிமன்றத்திலேயே தொடர்ந்து பணியாற்றவோ அல்லது தனது தாய் உயர்நீதிமன்றமான சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படவோ அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் ஓய்வுபெற இருந்ததால் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். ஆனால் உச்சநீதிமன்ற கொலீஜியம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. இதையடுத்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கொல்கத்தாவில் பதவியேற்பு விழாவிலேயே எதிர்ப்பு
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.வி. முரளிதரன், சூர்ய பிரகாஷ் கேசர்வானி, மதுரேஷ் பிரசாத் ஆகியோரின் பதவியேற்பு நிகழ்ச்சி 2023-ம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி நடைபெற்றது.
அப்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்னிலையிலேயே வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் பிஸ்வப்ரதா பாசு மல்லிக் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
நீதிபதி முரளிதரனுக்கு ஓய்வுபெற 5 மாதங்களும், நீதிபதி கேசர்வானிக்கு 8 மாதங்களும் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், அவர்களை இடமாற்றம் செய்ததற்கு வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது. “ஒரு உயர்நீதிமன்றத்தின் பணிமுறைகளைப் புரிந்துகொள்வதற்கே 6 மாதங்கள் போதாது. முக்கியமான வழக்குகளை விசாரித்துக் கொண்டிருக்கும் போதோ தீர்ப்பை ஒத்தி வைத்திருக்கும் போதோ நீதிபதிகள் ஓய்வுபெற்றுவிட்டால், அந்த வழக்குகளை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் நீதிவழங்குவதில் தாமதம் ஏற்படும்” என்று பாசு மல்லிக் தெரிவித்தார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே நீதிபதிகளின் பதவியேற்பு விழாவில் வழக்கறிஞர்கள் சங்கம் இவ்வாறு எதிர்ப்பைப் பதிவு செய்தது முதல்முறை.
பழங்குடியினர் ஆணையத் தலைவராக விஜய் அரசு நியமனம்
இப்படி மணிப்பூர் வன்முறைக்கு முக்கியத் தூண்டுதலாக அமைந்த உத்தரவைப் பிறப்பித்தவர், அந்த உத்தரவுக்காக உச்சநீதிமன்றத்தின் கடும் விமர்சனத்துக்குள்ளானவர், பின்னர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது வழக்கறிஞர்கள் சங்கத்தின் எதிர்ப்பையும் சந்தித்தவர் என்ற சர்ச்சைக்குரிய நீதிபதி எம்.வி. முரளிதரனுக்குத்தான் தற்போது தமிழக அரசு முக்கியப் பதவியை வழங்கியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
யார் இந்த எம்.வி. முரளிதரன்?
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம், வாலாஜா தாலுகாவுக்கு உட்பட்ட மணியம்பட்டு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1962-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி பிறந்தவர் மணியம்பட்டு வஜ்ஜிரவேலு முரளிதரன் என்ற எம்.வி. முரளிதரன்.
சட்டப்படிப்பை முடித்த முரளிதரன், 1990-ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். சென்னை உயர்நீதிமன்றம், அதன் மதுரைக் கிளை, கடன் வசூல் தீர்ப்பாயம் (DRT), கடன் வசூல் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (DRAT), சிவில் நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்கள், குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
சிவில் வழக்குகள், குற்றவியல் வழக்குகள், ரிட் மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.
முரளிதரன் 2016-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அங்கு பணியாற்றியபோது, ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தின் கதை உரிமை தொடர்பான வழக்கு, நடிகர்கள் வடிவேலு – சிங்கமுத்து இடையேயான மோசடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சுமார் 3 ஆண்டுகள் பணியாற்றிய முரளிதரன், 2019-ஆம் ஆண்டு மணிப்பூர் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு நீதிபதியாகப் பணியாற்றிய அவர், 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார்.
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியபோதுதான், மெய்தி சமூகத்தினருக்குப் பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பான சர்ச்சைக்குரிய உத்தரவை 2023-ஆம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி பிறப்பித்தார்.
பின்னர் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட முரளிதரன், 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிபதி பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.









