பெரியார் அறிவுலக நூலகத்தில் ஆங்கில நூல்களிலும் 257 போலி புத்தகங்கள் உள்ளதாக முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கோவை பெரியார் அறிவுலகத்தில் தமிழ் நூல்கள் பிரிவில் அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயரில் போலியான புத்தகங்கள் இருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் லஞ்ச ஒழிப்புத் துறையில் நேரில் புகார் அளித்துள்ளார். திமுக தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சர்ச்சைக்குரிய புத்தகங்கள் நூலகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. தற்போது பெரியார் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆங்கில நூல்கள் பிரிவிலும் போலியான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளதாக தமிழில் முனைவர் பட்டம் பயிலும் ஆய்வு மாணவர்கள் பிரேம் குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பிரேம்குமார் கூறுகையில், “பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் தொடர்பான முறைகேடுகள் குறித்து, கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கெனவே தமிழ் நூல்கள் பிரிவில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயரில் போலியான புத்தகங்கள் இடம்பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆங்கில நூல்கள் பிரிவிலும் ஆய்வு மேற்கொண்டபோது, ஐந்தாவது தளத்தில் உள்ள ‘Vintage Press Limited’ என்ற பதிப்பகத்தின் பெயரில் 257 புத்தகங்கள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, புத்தகங்களின் பதிப்புரிமை மற்றும் பதிப்பு விவரங்கள் இடம்பெறும் ‘Imprint Page’ பகுதியில், அனைத்து புத்தகங்களும் 2025 மற்றும் 2026-ம் ஆண்டுகளில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ISBN எண்களில் சந்தேகம்

தொடர்ந்து, ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டிருந்த சர்வதேச தர புத்தக எண்ணான ISBN எண்ணைச் சரிபார்த்தோம். ISBN எண்களின் நம்பகத்தன்மை குறித்து பெரும் சந்தேகம் ஏற்பட்டது. முதலில் இந்திய அளவிலான ISBN இணையதளத்தில் தேடியபோது உரிய தகவல்கள் கிடைக்கவில்லை. பின்னர் உலக அளவிலான World Cat இணையதளத்திலும் தேடியபோது அந்தப் புத்தகங்கள் குறித்த பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும், ‘Tourism: Principles, Practice and Philosophy’ என்ற தலைப்பிலான புத்தகத்தை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டோம். அந்தப் புத்தகத்தின் முதல் 15 பக்கங்களை ஸ்கேன் செய்து, ஆய்வுத் திருட்டைக் கண்டறியும் Turnitin மென்பொருள் மூலம் பரிசோதித்தோம்.
அதில் 64 சதவீதம் அளவுக்கு ஆய்வுத் திருட்டு இருப்பதாக முடிவு கிடைத்தது. தொடர்ந்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கண்டறியும் சோதனையை மேற்கொண்டபோது, 70.7 சதவீதம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் இருப்பதாகக் காட்டியது.
பதிப்பகமே இல்லை
அந்த புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருந்த பதிப்பகத்தின் முகவரியையும் ஆய்வு செய்தோம். லண்டனில் 70 Bar 75 என்ற முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த முகவரியை இணையத்தின் வாயிலாகச் சரிபார்த்தபோது, அங்கு Vintage Press Limited என்ற பதிப்பகம் செயல்படுவதற்கான எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. மாறாக, அந்த இடம் காலியாக உள்ள இடமாக இருப்பது தெரியவந்தது.
பதிப்பக இணையதளத்திலும் முரண்பாடுகள்!
Vintage Press Limited பதிப்பகத்தின் பெயரில் குறிப்பிடப்பட்டிருந்த இணையதளத்தை ஆய்வு செய்ததில் ஒரு ஜவுளி நிறுவனத்துடன் தொடர்புடைய டொமைனைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பது போன்ற சந்தேகத்திற்குரிய அம்சங்கள் இருந்தன. அதில் இப்போது டி-ஷர்ட் விற்பனை தொடர்பான பழைய விவரங்கள் உள்ளது. அவற்றைக்கூட நீக்காமல் வைத்துள்ளனர்.
மேலும், புத்தகங்களை எழுதியதாகக் குறிப்பிடப்படும் ஆசிரியர்களின் விவரங்கள், அவர்களின் முகவரிகள், பதிப்பகத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள் எதுவும் இணையதளத்தில் கிடைக்கவில்லை.
எனவே, பெரியார் அறிவுலகத்தின் ஆங்கில நூல்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள 257 புத்தகங்களின் உண்மைத்தன்மை மற்றும் அவை கொள்முதல் செய்யப்பட்ட விதம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். என தெரிவித்துள்ளார்.









