நூலகங்களில் போலி புத்தகங்கள் கொள்முதல்.. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை!

By Mathi

|

Published on 10 Nov 2026, 7:21 AM

DVAC-Library

கோவை பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தமிழக நூலகங்களில் புத்தகங்கள் வாங்கியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் சுமார் 2,000 போலி நூல்கள் இடம்பெற்றிருப்பதாக எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பிற நூலகங்களிலும் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளனவா, புத்தகங்களின் விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல் நடைமுறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்ற கேள்விகள் எழுந்தன.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விசாரணை

இந்த நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு நேற்று (நவ. 9) சென்ற லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், புத்தகக் கொள்முதல் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

ADVERTISEMENT

எந்தெந்த பதிப்பகங்களிடம் இருந்து புத்தகங்கள் வாங்கப்பட்டன, கொள்முதல் ஆணைகளை வழங்கியது யார், புத்தகங்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது எப்படி என்பது உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், நூலக நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வின்போது முக்கிய ஆவணங்களின் நகல்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

கன்னிமாரா நூலகத்தில் 523 போலி நூல்கள்

இதனிடையே சென்னை கன்னிமாரா நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு 523 போலி நூல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்த நூல்களில், கற்பனையான எழுத்தாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அகல்விளக்கு பதிப்பகத்தின் புத்தகக் கொள்முதல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

புத்தக கொள்முதல் ஆணைகள் ரத்து

தமிழக நூலகங்களுக்கு வழங்கப்பட்ட புத்தகக் கொள்முதல் ஆணைகள் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே பணம் வழங்கப்பட்டிருந்தால், அந்தத் தொகையை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel