தேனி மாவட்டம் அல்லிநகருக்கு 2025-26-ஆம் ஆண்டுக்கான தூய்மையான நகரத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 4,751-க்கும் மேற்பட்ட நகரங்கள் தூய்மை கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் தேனி அல்லிநகர் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் 2025-26-ஆம் ஆண்டுக்கான சிறந்த தூய்மைப் பணிகளுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லி விக்யான் பவனில் நேற்று (நவ.11) நடைபெற்றது.
இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு, தூய்மைப் பராமரிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட நகரங்களுக்கான விருதுகளை வழங்கினார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், இணையமைச்சர் தோக்கன் சாஹு ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு 5 பிரிவுகளின் கீழ் மொத்தம் 60 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தூய்மைப் பராமரிப்பில் சிறந்து விளங்கும் நகரங்களை ஊக்குவிக்கும் வகையில், 30 நகரங்களுக்கு ‘மாநிலத்திற்கு முன்னுரிமை வழங்கும் தூய்மையான நகரம்’ என்ற பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்தப் பிரிவில் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அல்லிநகர் நகராட்சி தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில், அல்லிநகரம் நகராட்சி ஆணையர் பார்கவியிடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதை வழங்கினார்.
தூய்மையான நகரங்கள் எப்படி தேர்வு செய்யப்பட்டன?
2025-26-ஆம் ஆண்டுக்கான தூய்மை கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 4,751-க்கும் மேற்பட்ட நகரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. நகரங்களின் தூய்மைப் பராமரிப்பை மதிப்பிடுவதற்காக 10 முக்கியப் பிரிவுகளின் கீழ் 43 அம்சங்கள் கணக்கில் கொள்ளப்பட்டன.
அதாவது வீடுகளில் இருந்து குப்பைகளைச் சேகரித்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்தல், திடக்கழிவு மேலாண்மை, பொதுக் கழிப்பிடங்களின் பராமரிப்பு, கழிவுகளை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தூய்மை கணக்கெடுப்பில் முக்கியத்துவம் பெற்றன.
மேலும், தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான நலத்திட்டங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள், தூய்மைப் பராமரிப்பில் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவையும் மதிப்பீட்டில் இடம்பெற்றன. இந்த தேசிய அளவிலான கணக்கெடுப்பின் அடிப்படையில் தேனி அல்லிநகர் நகராட்சி சிறப்பான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.









