அன்பில் மகேஷ் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை!

By Mathi

|

Published on 12 Nov 2026, 8:27 AM

Anbil Mahes-Bail Plea

தனியார் பள்ளிகளிடம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் வசூலித்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் இன்று (நவ.12) விசாரிக்க உள்ளார்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்த்துதல், டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் தொடர்பாக இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் முதலில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அன்பில் மகேஷின் பெயர் இடம்பெறவில்லை. பின்னர் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டது. 177 பள்ளி நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ரூ.400 கோடி வரை பணம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தெரிவித்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை அன்பில் மகேஷ் தரப்பு மறுத்துள்ளது.

நீதிபதி லட்சுமி நாராயணன் ஏற்கெனவே கூறியது என்ன?

இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினார். இந்த மனுவை நீதிபதி லட்சுமி நாராயணன் விசாரித்தார். அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், செப்.18-ந் தேதி போலீசார் நடத்திய 8 மணி நேர விசாரணையில் கேட்கப்பட்ட 240 கேள்விகளுக்கும் அன்பில் மகேஷ் பதிலளித்ததாகத் தெரிவித்தார். அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுவிட்டதால் காவலில் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் வாதிட்டார்.

ADVERTISEMENT

ஆனால், அக்.26-ந் தேதி முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், தனது 20 பக்க உத்தரவில் பல முக்கியமான கருத்துகளைத் தெரிவித்தார்.

ஊழல் என்பது அரசுப் பணத்தை மட்டும் பாதிக்கும் குற்றமல்ல; மனித உரிமைகளையும் பாதிக்கும், மனித குலத்துக்கு எதிரான கடுமையான குற்றம் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

அன்பில் மகேஷ் அரசியலில் செல்வாக்குள்ள நபர் என்பதால், அவர் வெளியே இருந்தால் சாட்சிகளிடம் செல்வாக்குச் செலுத்தவோ விசாரணைக்குத் தடையாக இருக்கவோ வாய்ப்புள்ளதா என்பதைப் பரிசீலிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், தலைமறைவாக இருந்த இரண்டாவது குற்றம்சாட்டப்பட்ட நபரான முத்துக்குமாரை அன்பில் மகேஷ் பாதுகாத்திருப்பதாக முதல்கட்ட ஆவணங்கள் காட்டுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

முத்துக்குமார் சரணடையும் முன்பே அன்பில் மகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கினால், அது விசாரணையை முடக்கிவிடக்கூடும் என்றும் தெரிவித்தார்.

‘பார்ட்டி பண்ட்’ யாருக்குச் சென்றது?

அன்பில் மகேஷுக்கு முன்ஜாமீன் மறுத்த உத்தரவில், கட்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். பணம் எங்கிருந்து வந்தது, யார் வசூலித்தார்கள், இறுதியாக யாரிடம் சென்றது என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது. இதற்குக் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என்று நீதிபதி தெரிவித்தார். அன்பில் மகேஷ் ஏற்கெனவே போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைத்திருந்தாலும், அதை மட்டும் காரணமாகக் கொண்டு முன்ஜாமீன் வழங்க முடியாது என்றும் கூறினார்.

இதையடுத்து அக்.26-ந் தேதி அன்பில் மகேஷை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார்.

சிறப்பு நீதிமன்றம் ஜாமீனை நிராகரித்தது ஏன்?

கைது செய்யப்பட்ட பிறகு, அன்பில் மகேஷ் சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி இந்த மனுவை விசாரித்தார். அன்பில் மகேஷ் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்துள்ளதாகவும், அவர் தலைமறைவாகவோ சாட்சிகளைக் கலைக்கவோ வாய்ப்பில்லை என்றும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது. உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

ஆனால், அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். முத்துக்குமார் வசூலித்த பணத்தை அவரது ஓட்டுநர் சரவணன், அன்பில் மகேஷின் வீட்டுக்குக் கொண்டு சென்றதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சரவணன் தலைமறைவாக இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றும், முத்துக்குமாரிடமும் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இது பெரும் தொகை தொடர்புடைய பொருளாதாரக் குற்றச்சாட்டு என்பதையும், அன்பில் மகேஷுக்கு எதிராக முதல்கட்ட ஆதாரங்கள் இருப்பதையும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதையும் கருத்தில் கொண்டு, நவ.10-ந் தேதி அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

முத்துக்குமார், சரவணன் சரண்

இந்த வழக்கில் முக்கியக் குற்றம்சாட்டப்பட்ட நபரான முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், அக்.29-ந் தேதி சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

முத்துக்குமாருக்கு டிபிஐ அலுவலகத்தில் அறையும் அரசு வாகனமும் வழங்கப்பட்டது எப்படி, பள்ளிகளிடம் வசூலிக்கப்பட்ட பணம் எங்கே வைக்கப்பட்டது, யார் மூலமாக அன்பில் மகேஷிடம் கொண்டு செல்லப்பட்டது என்பன குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நவ.11-ந் தேதி நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இதற்கிடையே, தலைமறைவாக இருந்த முத்துக்குமாரின் ஓட்டுநர் சரவணன் நேற்று (நவ.11) சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் 6-வது குற்றம்சாட்டப்பட்ட நபராகச் சேர்க்கப்பட்டுள்ள சரவணனை நவ.25-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா?

இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததை எதிர்த்து அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், நீண்டகாலமாக இருக்கும் கணைய அழற்சி தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும் (Acute-on-Chronic Pancreatitis), உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும், முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டபோது முத்துக்குமார் தலைமறைவாக இருந்தார். தற்போது அவர் நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டதால் அன்றைய சூழ்நிலை மாறிவிட்டதாக அன்பில் மகேஷ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வழக்கில் நேற்று (நவ.11) நீதிபதி லட்சுமிநாராயணன் முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரினார். மனுவுக்கு எண் வழங்கும் நடைமுறைகள் முடிந்தால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel