விசா நடைமுறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம்- முழு விவரம்!

By Mathi

|

Published on 12 Nov 2026, 7:23 AM

Visa-Union Govt

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கான விசா நடைமுறைகளை மத்திய அரசு எளிமைப்படுத்தியுள்ளது. விசா விண்ணப்பப் படிவங்களில் நிரப்ப வேண்டிய விவரங்கள் 65% முதல் 70% வரை குறைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா, மருத்துவம், கல்வி, தொழில் உள்ளிட்ட தேவைகளுக்கான விசா வகைகளிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (நவ.11) வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினரின் தேவைகளுக்கு ஏற்ப விசா நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

22 விசா வகைகள் 9 ஆகக் குறைப்பு

இந்தியாவில் 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 22 முதன்மை விசா வகைகளும், 63 துணை விசா வகைகளும் இருந்தன. கடந்த ஆண்டு அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பின்போது முதன்மை விசா வகைகள் 13 ஆகவும், துணை வகைகள் 49 ஆகவும் குறைக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 27-ந் தேதி முதன்மை விசா வகைகள் 13-லிருந்து 9 ஆகவும், துணை வகைகள் 49-லிருந்து 23 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

வளர்ந்த நாடுகளின் விசா நடைமுறைகளையும் சர்வதேச தரநிலைகளையும் ஆய்வு செய்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுற்றுலா விசா இனி Visitor Visa

இதுவரை Tourist Visa என்றழைக்கப்பட்ட சுற்றுலா விசா, இனி Visitor Visa என அழைக்கப்படும். இதில் V-1, V-2 என 2 துணை வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

V-1 விசா மூலம் சுற்றுலா மட்டுமின்றி தொழில் தொடர்பான சந்திப்புகள், மருத்துவ ஆலோசனைகள், குறுகிய கால மருத்துவ சிகிச்சைகள், யோகா மற்றும் நலவாழ்வு பயிற்சிகள், இந்திய மொழிகள், இசை, கலை உள்ளிட்ட குறுகிய காலப் படிப்புகளுக்காகவும் இந்தியாவுக்கு வரலாம். இந்த விசா 30 நாட்களுக்குப் பலமுறை இந்தியாவுக்குள் வந்து செல்லும் வசதியுடன் வழங்கப்படும்.

V-2 விசா நீண்டகால வருகைகளுக்கானது. தகுதியைப் பொறுத்து ஓராண்டு, 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் விசா வழங்கப்படும். மலையேற்றத்துக்காக வருபவர்களுக்கு 6 மாத விசா வழங்கப்படும்.
மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்களுக்கு என்ன மாற்றம்?

மருத்துவ விசா M-1, M-2, M-3, M-4 எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

M-1 விசா பொதுவான மருத்துவ சிகிச்சைகளுக்கும், M-3 விசா ஆயுஷ் மருத்துவ முறைகளில் சிகிச்சை பெறுவதற்கும் வழங்கப்படும். இந்த 2 விசாக்களும் பொதுவாக ஓராண்டு செல்லுபடியாகும் வகையில், பலமுறை இந்தியாவுக்கு வந்து செல்லும் அனுமதியுடன் வழங்கப்படும்.

சிகிச்சைக்கு வருபவர்களுடன் உதவியாளர்களாக வருபவர்களுக்கு முறையே M-2, M-4 விசாக்கள் வழங்கப்படும்.

இதனால் தொடர் மருத்துவ ஆலோசனைகள், பல கட்ட சிகிச்சைகள், சிகிச்சைக்குப் பிந்தைய பரிசோதனைகளுக்காக இந்தியாவுக்கு மீண்டும் வருபவர்கள் ஒவ்வொரு முறையும் புதிதாக விசா பெற வேண்டிய தேவையைக் குறைக்க முடியும்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் விசா

கல்விக்கான விசாக்கள் S-1, S-2 என 2 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

S-1 விசா பள்ளி, இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கானது. S-2 விசா முனைவர் பட்ட ஆய்வு, ஆராய்ச்சிப் பணிகள், பல்கலைக்கழக வருகைப் பேராசிரியர்கள், பயிற்சிகள், மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட கல்வி நடவடிக்கைகளுக்கானது.

Study in India இணையதளம் மூலம் இந்தியக் கல்வி நிறுவனங்களில் சேரும் தகுதியுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு e-S1 விசா அதிகபட்சமாக 5 ஆண்டுகள் அல்லது படிப்புக் காலம் முடியும் வரை வழங்கப்படலாம்.

தொழில் நிறுவனங்களுக்கும் புதிய வசதி

தொழில் தொடர்பான விசாக்கள் B-1, B-2 என மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

B-1 விசா இந்தியாவில் தொழிற்சாலை அல்லது தொழில் நிறுவனங்களைத் தொடங்குவது உள்ளிட்ட நீண்டகால தொழில் நடவடிக்கைகளுக்கானது.

B-2 விசா குறுகியகால ஒப்பந்தப் பணிகள், மாநாடுகள், விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், திரைப்படப் படப்பிடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கானது.

மேலும், இந்தியத் தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களை நிறுவுதல், தொழில்நுட்பப் பரிசோதனைகள், உற்பத்தி தொடர்பான பயிற்சிகள், தகவல் தொழில்நுட்பப் பணிகள் உள்ளிட்டவற்றுக்காக வரும் வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு B-2 பிரிவின் கீழ் Production Investment Business Visa வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விசா விண்ணப்பத்தில் 70% விவரங்கள் குறைப்பு

புதிய நடைமுறையின் முக்கிய அம்சமாக, 23 விசா துணை வகைகளுக்கான விண்ணப்பப் படிவங்களில் நிரப்ப வேண்டிய விவரங்கள் 65% முதல் 70% வரை குறைக்கப்பட்டுள்ளன.

இதனால் வெளிநாட்டினர் விசாவுக்கு விண்ணப்பிக்கச் செலவிடும் நேரத்தைக் குறைக்கவும், விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகளை எளிமைப்படுத்தவும் முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவின் மின்னணு விசா வசதி 172 நாடுகளின் குடிமக்களுக்குக் கிடைக்கிறது. மின்னணு பயண அங்கீகார முறையின் கீழ் 13 துணைப் பிரிவுகளில் இ-விசாக்கள் வழங்கப்படுகின்றன.

புதிய மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் புதுப்பித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய விசா நடைமுறைகளின்படி விசாக்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியினர், ஆப்கானியர்களுக்கு இதர விசா!

புதிய விசா நடைமுறையில் ‘Miscellaneous Visa’ என்ற இதர விசா வகையும் இடம்பெற்றுள்ளது. இந்திய வம்சாவளியினர், அவர்களது வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள் இந்தப் பிரிவின் கீழ் விசா பெறலாம்.

மேலும், ஆரோவில் அறக்கட்டளை போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களில் சேருவதற்காக இந்தியாவுக்கு வருபவர்கள், நீண்டகால விசாவில் இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கும் இந்தப் பிரிவில் விசா வழங்கப்படும்.

ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கான தங்கும் விசா, அண்டை நாடுகளைச் சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினருக்கான நீண்டகால விசா மற்றும் பிற விசா வகைகளில் இடம்பெறாத தேவைகளுக்கான விசாக்களும் இந்தப் பிரிவில் அடங்கும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel