‘எல்லையைக் கோட்டைவிட்டு வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!’ நயினார் நாகேந்திரன்

By Pandeeswari Gurusamy

|

Published on 12 Nov 2026, 9:41 AM

Vijay nainar

தமிழகத்தில் செயல்பட்டு வரும் எல்லையோரச் சோதனைச் சாவடிகளைக் கண்காணிக்கத் திராணியின்றி விஜய் தலைமையிலான தவெக அரசு கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்துள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்த அவர் தனது எக்ஸ் தளத்தில், “தென்காசி மாவட்டத்தின் விவசாய நிலங்களிலும் திறந்தவெளிகளிலும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து டன் கணக்கில் கொண்டுவரப்படும் அபாயகரமான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. ‘கேரள மாநில விற்பனைக்கு மட்டும்’ என்று அச்சிடப்பட்ட பாட்டில்களும் நச்சுக் கழிவுகளும் கண்முன்னே ஆதாரமாகக் கிடந்தும், எல்லையோரச் சோதனைச் சாவடிகளைக் கண்காணிக்கத் திராணியின்றி விஜய் தலைமையிலான தவெக அரசு கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

இதேபோன்று ஒரு குண்டூசி அளவிலான கழிவுப் பொருளைக்கூடத் தமிழகத்திலிருந்து கொண்டுபோய்க் கேரள எல்லைக்குள் கொட்டிவிட முடியுமா? அங்கு அந்த அளவிற்குச் சோதனைகளும் கண்காணிப்பும் மிகக் கடுமையாக உள்ள சூழலில், அண்டை மாநிலத்தின் நச்சுக் கழிவுகளை இங்கு கொட்டும் அளவிற்குத் தமிழகக் காவல்துறையும், தவெக அரசும் இத்தனை அலட்சியமாக இருக்கிறது! இது தென்காசியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த எல்லையோர மாவட்டங்களிலும் தொடர்கிறது. பசுமையான நிலங்களை நஞ்சாக்கித் தமிழகத்தைக் கேரளாவின் குப்பைத் தொட்டியாக மாற்றும் இந்த ஆட்சியில், இன்னும் என்னென்ன கூத்துகளும் அவலங்களும் அரங்கேறப் போகின்றனவோ தெரியவில்லை!

எனவே, இனியாவது இந்த மெத்தனப் போக்கைக் கைவிட்டு, கேரள முதல்வரிடம் பேசி இந்த விவகாரத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எல்லையோரச் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, கேரளக் கழிவுகளைத் தமிழகத்திற்குள் கடத்திவரும் வாகனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்வதோடு, மக்களின் சுகாதாரத்தோடு விளையாடும் சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel