தமிழக முதல்வர் விஜய் தமது தவெக கட்சி எம்.எல்.ஏ.க்களின் கைகளில் இருக்கும் ஒரு பொம்மையாகத்தான் செயல்படுகிறார்; எந்த எம்.எல்.ஏ. மீதும் நடவடிக்கை எடுக்கும் நிலையில் அவர் இல்லை என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மகாபலிபுரத்தில் தவெக எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் விஜய் நடத்திய ஆலோசனைக் கூட்டம் குறித்து ANI செய்தி நிறுவனத்துக்கு கோவை சத்யன் அளித்த பேட்டி: தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வெறும் விளம்பரத்துக்காக நடத்தப்பட்ட நாடகம். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தமது கட்சியைச் சேர்ந்த எந்த எம்.எல்.ஏ. மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடிய நிலையில் விஜய் இல்லை. ஏனென்றால் அவர் மைனாரிட்டி அரசைத்தான் நடத்திக்கொண்டிருக்கிறார். வெறும் 2 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே வைத்திருக்கும் 5 கட்சிகளின் ஆதரவைக் கெஞ்சிப் பெற்றுத்தான் ஆட்சியை நடத்துகிறார்.
ஒரே ஒரு எம்.எல்.ஏ. எதிர்ப்புத் தெரிவித்தாலோ அல்லது தவெகவிலிருந்து விலகினாலோ, விஜய் அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
விஜய் தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரின் கைகளிலும் இருக்கும் ஒரு பொம்மையாகத்தான் இருக்கிறார். யார் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடிய நிலையில் அவர் இல்லை.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் அரசு நிர்வாகத்தில் அவர் நிச்சயமாக நடவடிக்கைகளை எடுக்க முடியும். அதைக்கூட அவர் செய்வதில்லை. ஏனென்றால் அவருக்கு அனுபவம் இல்லை. அரசு நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கான திறனும் அவரிடம் இல்லை.
ஒரு திரைப்படத்தில் நடப்பதைப் போலவே, இப்போதும் எல்லாவற்றையும் தாம்தான் இயக்கிக்கொண்டிருப்பதாக விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு கோவை சத்யன் கூறினார்.









