மதுரை காளவாசல் பைபாஸ் பகுதியில் உள்ள டாடா நிறுவனத்தின் ‘தனிஷ்க்’ நகைக்கடையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன் காளவாசல் பைபாஸ் சாலையில் புதிதாக டாடா நிறுவனத்தின் ‘தனிஷ்க்’ (Tanishq) ஜுவல்லரி பிரம்மாண்டமாகத் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஜுவல்லரியில் இன்று அதிகாலை 3 மணியளவில் பின்புறம் வழியாக முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள், பல கோடி மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை வழக்கம்போல் நகைக்கடையைத் திறக்க வந்த ஊழியர்கள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்குப் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மோப்பநாய் அழைத்து வரப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சுமார் 500 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், 35 கிலோ வரை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்ளை போன நகைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நகைக்கடையில் இருந்த 30 சதவிகிதம் வரையிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் வாய்மொழியாகத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் எவ்வளவு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த முழு விவரங்கள் தெரியவரும்.









