கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (நவம்பர் 12) புகார் அளித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: தமிழ்நாட்டில் இதுவரை நடைபெறாத மிக கேவலமான ஒரு சம்பவத்தை தவெக ஆட்சியில் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் பார்க்கக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆட்சி ஏற்பட்ட நாளிலிருந்து யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சாதாரண பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. நேற்று முன்தினம் மட்டும் 17 கொலைகள் நடந்திருக்கின்றன.
இவை அனைத்துக்கும் உச்சமாக ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர், அதிலும் ஒரு பெண் கலெக்டருக்கு ஏற்பட்டிருக்கிற இந்த ஆபத்தான சூழ்நிலை, தமிழ்நாட்டின் ஏறத்தாழ 77 ஆண்டு கால வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
இதற்கெல்லாம் காரணம் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிற விஜய் அவர்கள்தான். அவருக்குக் கீழே இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாகச் செயல்படுகிறார்கள்.
உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், திருப்பதி குடை ஊர்வலம் நடைபெற்றபோது, ஒரு பெண் காவலரிடம் தவெக நிர்வாகி ஒருவர் ஈவ் டீசிங் (Eve teasing) செய்வதைப் போல சில்மிஷமாக நடந்துகொண்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்தார்கள்.
இந்தச் சம்பவம் ஆதவ் அர்ஜூனா சட்டமன்ற உறுப்பினராக இருக்கிற வில்லிவாக்கம் தொகுதியில் நடைபெற்றது. காவல்துறையினர் அந்த நபரைக் கைது செய்து வைத்திருந்த நிலையில், உடனடியாக மேலிடத்திலிருந்து தொலைபேசியில் உத்தரவிட்டு, ஒரு பெண் காவலரிடம் கேவலமாக நடந்துகொண்ட தவெக நிர்வாகியை விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லி விடுவித்திருக்கிறார்கள். இதனால் எல்லா தவெககாரர்களுக்கும் தைரியம் வந்துவிட்டது. ஒரு பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்டவரையே காவல் நிலையத்திலிருந்து விடுவித்து விட்டார்கள் என்ற செய்தியைப் பார்த்தவுடன், துணிச்சலாக எல்லாத் தவறுகளையும் செய்யக்கூடிய மனப்பான்மை வந்துவிட்டது.
சாதாரண தவெக நிர்வாகியையே காவல் நிலையத்திலிருந்து விடுவித்துவிட்டார்கள் என்றால், நாம் ஒரு எம்.எல்.ஏ., ஆகவே நாம் எதையும் செய்யலாம் என்ற திமிர்த்தனத்துடன், குடிபோதையில் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆபாசமான மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.
மெசேஜ் அனுப்பியதோடு மட்டுமல்லாமல், இரவு நேரத்தில் அந்த அம்மையாரிடம் எந்தவிதமான அப்பாயிண்ட்மென்ட்டும் பெறாமல் நேரடியாக அவரது வீட்டுக்குச் சென்று, குடிபோதையில் அவரைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டதாக எல்லா ஆதாரங்களையும் எங்கள் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்; ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், காவல்துறையினரிடம் கொடுத்திருக்கிறார்.
இந்த விவகாரம் எல்லா சமூக வலைதளங்களிலும் வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் கணவரே இன்றைக்குப் புகார் கொடுத்திருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது.
காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. சாதாரண பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. நேற்று முன்தினம் மட்டும் 17 கொலைகள் நடந்திருக்கின்றன. இன்றைக்குக் காலையில் வரும்போதே மேலும் 4 கொலைகள் நடந்ததாகக் கேள்விப்படுகிறோம். இது நாடா, காடா என்றே தெரியவில்லை.
ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபியிடம் மனு கொடுத்திருக்கிறோம். ஏற்கெனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடமும் மனு கொடுத்திருக்கிறோம். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான, நேர்மையான விசாரணை (Fair Investigation) நடத்தப்பட வேண்டும். ஏனென்றால், இதில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். பாதிக்கப்பட்டிருப்பவர் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இந்த வழக்கை மிகச் சாதாரணமாக நடத்திவிட்டால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு (Law and Order) எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கே இந்த நிலை என்றால், இதைத் தனிக் கவனத்துடன் மிக நேர்மையாகவும் நியாயமாகவும் விசாரிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. மேலும், சிபிசிஐடி (CBCID) மூலமாகத்தான் இந்த விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம்.
டிஜிபி அவர்கள் முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றதன் காரணமாக, அவருக்குப் பதிலாக ஏடிஜிபி (ADGP) அவர்கள் வந்து எங்களுடைய மனுவைப் பெற்றுக்கொண்டார். மனுவைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
பொறுத்திருந்து பார்ப்போம். காவல்துறையிடம் முறையாகப் புகார் கொடுத்திருக்கிறோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மேற்கொண்டு சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுப்பது, நீதிமன்றத்தை நாடுவதா என்பது குறித்து எங்கள் தலைவர் (மு.க.ஸ்டாலின்) ஒப்புதலோடு முடிவெடுப்போம். இவ்வாறு ஆர்.எஸ். பாரதி கூறினார்.









