மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலைச் செய்தியாளர்கள் இல்லாமலேயே ஆட்சியர் பத்மஜா வெளியிட்டார்.
கள்ளக்குறிச்சியில் பகல் 12 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், செய்தியாளர்கள் வருவதற்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியர் பத்மஜா வரைவு வாக்காளர் பட்டியலை அவசர அவசரமாக வெளியிட்டுள்ளார். செய்தியாளர்கள் யாரும் இல்லாத நிலையில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மூலமாகப் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, அத்தொகுதியின் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆட்சியரின் கணவர் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டிஜிபி அலுவலகத்திலும் அதிமுக, திமுக தரப்பில் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கும் விதமாக ஆட்சியர் பத்மஜா செய்தியாளர்கள் இல்லாமல் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
முன்னதாக, நேற்று கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் நடைபெற்ற அரசு விழாவிலும் மாவட்ட ஆட்சியர் பத்மஜா பங்கேற்காமல் தவிர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









