வங்கியில் இதுவரை கடனே வாங்காதவர்களுக்கு சிபில் ஸ்கோர் (CIBIL Score) இல்லாமல் இருப்பது பெரிய தடையாகிவிடலாம். முதன்முறையாக வீட்டுக் கடன் அல்லது கார் கடன் கேட்கும்போது, இவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் வரலாறு வங்கிகளுக்குத் தெரியாது. அதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்படக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. கடன் வரலாறே இல்லாதவர்கள் அடுத்த ஆறு மாதத்தில் என்னென்ன செய்தால் ஸ்கோரை உயர்த்த வாய்ப்பு உண்டு என்று பார்க்கலாம்.
1. FD மீது கிரெடிட் கார்டு
முதல்முறை கிரெடிட் கார்டு கேட்டால் வங்கிகள் சில நேரம் ஒப்புதல் தராமல் போகலாம். அப்படி என்றால், நிலையான வைப்புத்தொகையின் (FD) அடிப்படையில் தரப்படும் கிரெடிட் கார்டை வாங்கலாம்.
வங்கியில் ரூ.10,000 அல்லது ரூ.20,000 FD போட்டால், அதன் மதிப்பில் 80 முதல் 90 சதவீதம் வரை கிரெடிட் லிமிட் கிடைக்கலாம். இப்படிக் கடன் வரலாற்றைத் தொடங்கலாம்.
2. லிமிட்டில் 30%-க்குள் செலவு செய்யுங்கள்
உங்கள் கிரெடிட் கார்டு லிமிட் ரூ.20,000 என்றால், மாதம் ரூ.6,000-க்குள் செலவை வைத்துக்கொள்வது நல்லது. மொத்த லிமிட்டில் 30 சதவீதத்துக்கும் குறைவாகப் பயன்படுத்தினால், கடன் பயன்பாட்டு விகிதம் (Credit Utilisation Ratio) கட்டுக்குள் இருக்கும்.
3. குறைந்தபட்சத் தொகை மட்டும் கட்டாதீர்கள்
பில் கட்டும் விஷயத்தில் கவனம் தேவை. கடைசித் தேதிக்கு இரண்டு, மூன்று நாட்கள் முன்பே முழுத் தொகையையும் கட்டிவிடுவது நல்லது.
Minimum Amount Due என்று காட்டப்படும் குறைந்தபட்சத் தொகையை மட்டும் கட்டினால், மீதித் தொகைக்கு அதிக வட்டி விழும். தொடர்ந்து தாமதமாகக் கட்டுவது கடன் வரலாற்றையும் கெடுக்கும்.
4. இந்த விஷயங்களைத் தவிர்க்கவும்
கிரெடிட் கார்டு வேண்டாம் என்பவர்கள், போன், டிவி போன்றவற்றை வாங்கும்போது கிடைக்கும் Consumer Durable Loan-ஐப் பயன்படுத்தலாம். ஆறு அல்லது ஒன்பது மாதத் தவணைகளையும் சரியான தேதியில் கட்டினால் கடன் வரலாறு உருவாகும்.
- ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பிக்காதீர்கள்.
- சின்னச் சின்னத் தொகைகளுக்கும் அடிக்கடி BNPL வசதியைப் பயன்படுத்தாதீர்கள்.
- மற்றவர்களின் கடனுக்கு ஜாமீன் போடும் முன் நன்றாக யோசியுங்கள்.
ஒரு முக்கிய உண்மை: இவற்றைச் செய்தால் ஆறு மாதத்தில் 750 மதிப்பெண் கிடைத்துவிடும் என்று யாரும் உறுதி தர முடியாது. கிரெடிட் ஸ்கோர் ஒவ்வொருவரின் கடன் பயன்பாடு, திருப்பிச் செலுத்தும் பழக்கம், கடன் அறிக்கை போன்றவற்றைப் பொறுத்தது. தொடர்ந்த நிதி ஒழுக்கம்தான் நல்ல ஸ்கோருக்கு அடிப்படை.









