வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.
வங்கக்கடலில் அர்னாப், முரசு புயல்களைத் தொடர்ந்து 3-வதாக ‘அக்வான்’ புயல் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 13-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக வலுப்பெற்றால் ‘அக்வான்’ (Akvan) என்று பெயரிடப்படும்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 12) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சுமார் 5.8 கிமீ உயரம் வரை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக வரும் நவம்பர் 13 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14 ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நவம்பர் 15 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும்.
சுமார் 0.9 கிமீ உயரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
12-11-2026: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
13-11-2026 மற்றும் 14-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
15-11-2026 மற்றும் 16-11-2026: திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
17-11-2026 மற்றும் 18-11-2026: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









