இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஏற்கெனவே காலூன்றிவிட்ட சீன நிறுவனமான சியோமி (Xiaomi), இப்போது வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையிலும் கால் வைக்கத் தயாராகிறது.
இதற்காக இந்தியாவில் உள்ள உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களோடு கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. ஏர் கண்டிஷனர், குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் போன்ற பெரிய வீட்டு உபயோகப் பொருட்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்பதுதான் நோக்கம்.
உள்ளூர் பார்ட்னர்களைத் தேடுகிறது
இந்தியாவிலேயே தன் தயாரிப்புகளைத் தயாரிக்க, பல மின்னணு உற்பத்தி நிறுவனங்களின் தொழில்நுட்பத் திறனையும் உற்பத்தி வசதிகளையும் சியோமி ஆய்வு செய்யவுள்ளது. இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இப்போது ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளன. விரைவில் இந்திய நிறுவனங்களின் திறனை மதிப்பிடும் பணிகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mijia பிராண்ட் மூலம் புதிய சந்தை
கடந்த ஆகஸ்ட் மாதம் சியோமி, இந்தியாவில் ‘Mijia’ என்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தனிப் பிராண்டை அறிமுகம் செய்தது. இப்போது ஏர் பியூரிஃபையர் போன்ற பொருட்களில் கவனம் செலுத்தும் நிறுவனம், அடுத்து பெரிய மின்சாதனங்களையும் இந்தப் பிராண்டின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
சாம்சங், எல்ஜிக்குப் போட்டி
இந்திய வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் Samsung, LG, Haier போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே வலுவாக நிற்கின்றன.
அவற்றுக்கு நடுவில் சியோமியின் வரவு போட்டியை இன்னும் சூடாக்கலாம். தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளை ஒரே தளத்தில் இணைப்பதுதான் சியோமியின் முக்கிய இலக்கு.
ஸ்மார்ட்போனைத் தாண்டி ஏன்?
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை வளர்ச்சியில் சவால்கள் இருப்பதால், புதிய தயாரிப்புப் பிரிவுகளில் கவனம் செலுத்துவது சியோமிக்கு முக்கியமாகியுள்ளது.
ஏற்கெனவே வாட்டர் பியூரிஃபையர், ரோபோ வாக்யூம் கிளீனர் போன்றவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியபோது, விநியோகச் சங்கிலியிலும் சான்றிதழ் பெறுவதிலும் சிக்கல்கள் வந்ததாகச் சொல்லப்பட்டது.
இந்த முறை உள்ளூர் உற்பத்தியாளர்களோடு சேர்ந்து செயல்பட்டு, அந்தச் சிக்கல்களைத் தவிர்த்து நீண்டகால வளர்ச்சியை எட்ட நிறுவனம் திட்டமிடுகிறது.









