வேலுமணி, 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை… லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு!

By Kavi

|

Published on 12 Nov 2026, 10:57 PM

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர்  முறைகேடு வழக்கில்  2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடர லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகளில் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ADVERTISEMENT

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால் சென்னை, கோவை மாநகராட்சி ஆணையர்களாக இருந்த  கே.எஸ். கந்தசாமி, கே. விஜய கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. 

இந்தசூழலில்,  இன்று (நவம்பர் 12)  இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது, 

ADVERTISEMENT

அப்போது, ஐஏஎஸ் அதிகாரிகளான கே.எஸ். கந்தசாமி மற்றும் கே. விஜய கார்த்திகேயன் ஆகிய இருவர் மீதும் வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்தது. 

இதையடுத்து சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கே.எஸ். கந்தசாமி, கே. விஜய கார்த்திகேயன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கைகளைத் தொடருமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீதும் வழக்குத் தொடர பிரதமர் அலுவலகம்  அனுமதி அளித்துவிட்டதால், 2025-ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிர்மனுதாரர்கள் பட்டியலில் இருந்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையை  நீக்கியும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்த நடவடிக்கை குறித்து டிசம்பர் 4 ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel