அனிருத் காவியா திருமணம் சுயமரியாதை திருமணமா என்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி ஆர் பி ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் டிவி நெட்வொர்க் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான காவியா மாறன் ஆகியோருக்கு கிரீஸ் நாட்டில் நேற்று திருமணம் நடைபெற்றது.
தனது பேத்தி திருமணத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
அதுபோன்ற நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள் சௌந்தர்யாவுடன் சென்று திருமணத்தில் பங்கேற்றார்.
முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் காவியா கழுத்தில் அனிருத் செயின் போடுவது போல ஒரு புகைப்படம் வெளியானது.

இதை பகிர்ந்து இணையதளங்களில் பலரும் இது சுயமரியாதை திருமணமா என்று கேள்வி எழுப்பினர்.
முனைவர் கணேசு என்ற பயணர், ‘இது வேத சடங்குகள் இல்லாத சுயமரியாதை திருமணம் போல தெரிகிறது. நான் சொல்வது சரிதானா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, “ஆமாம்… காவியாவும் அனிருத்தும் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக் கொண்டனர். தலைவர் (முன்னாள் முதல்வர் ஸ்டாலின்) காவியாவிடம் ஒரு செயினை கொடுத்தார். சூப்பர் ஸ்டார் அனிருத்திடம் ஒரு செயினை கொடுத்தார். மணமக்கள் இருவரும் இதை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டனர். நண்பர்களும் குடும்பத்தினரும் இந்த இதய இணைப்பிற்கு ஆசி வழங்கினர்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்ல திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. துரைமுருகனுக்கு திமுகவிலேயே பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தனது பேத்தி விருப்பத்தினால் தான் வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றது என்று கூறி துரைமுருகன் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









